- நவீன் ஸ்ரீதர்.வி
கடந்த தொடரில் மதுரையில் பாண்டிய மன்னன் மலையத்துவசன் மற்றும் அவரது மனைவி காஞ்சனமாலை செய்த தொண்ணூற்றொன்பது அஸ்வமேத யாகங்கள் மற்றும் நூறாவதாக செய்த புத்திர காமேஷ்டி யாக வேள்வியில் இருந்து மூன்று வயது நிரம்ப, மூன்று தனங்களுடன் (மார்புகள்) கூடிய பச்சைநிறக் குழந்தையாக அன்னை ஆதிபராசக்தியானவள் தடாதகை என்னும் நாமம் தரித்து அவதரித்து வந்ததைப் பற்றிப் பார்த்தோம்.
உலகில் எத்தனையோ இடங்கள் இருக்க அவள் ஏன் மதுரையில் அவதரிக்க வேண்டும்?
அது தான் காஞ்சனமாலை செய்த முற்பிறவி தவம். இப்பிரபஞ்சத்தில் பூலோகம் மட்டுமல்லாது வேறு பல லோகங்கள் இருப்பதாக பண்டைய ஆன்மீக நூல்கள் கூறுகின்றன.அவற்றில் ஒன்று தான் கந்தர்வர்கள் வசிக்கும் கந்தர்வலோகம். அந்த கந்தர்வ லோகத்தில் வாழ்ந்த அரசனான விஸ்வாவசு என்பவனின் மகளான வித்யாவதி அம்பிகை மீது அதீத பக்தி கொண்டிருந்தாள். அம்பிகையை நேரில் தரிசிக்க வேண்டும் என்று ஆவல் பூண்டாள்.
தனது விருப்பத்தை தந்தை விஸ்வாவசுவிடம் சொல்ல அவரோ அம்பிகை விரும்பி உறையும் இடம் பூலோகத்தில் உள்ள கடம்பவனம் என்றும் அங்கு சென்று தவம் செய்யும்படியும் கூறினார். தந்தையின் அறிவுரையை ஏற்ற மகள் வித்யாவதி பூலோகம் வந்து கடம்பவனத்தை அடைந்தாள். அங்கே சக்தி பீடமாக உறையும் அம்பிகையையும் சுயம்புவாய் தோன்றிய சொக்கலிங்கத்தையும் வணங்கி அம்பிகையை நோக்கி தவமிருந்தாள். நீண்டகாலம் நடந்த தவத்தின் பயனாக அன்னை ஆதிபராசக்தி தனது சக்தி பீடத்திலிருந்து மூன்று வயது பெண் குழந்தையாக காட்சி தந்தாள்.

அம்பிகையை தரிசித்த வித்யாவதி ஆனந்தத்தின் எல்லையில் திகைத்தாள். கண்களை இமைக்கக்கூட முடியாத பேரழகின் பெட்டகமாய் அன்னை ஆதிபராசக்தி அவள் முன் நிற்கிறாள். தன் மழலை மொழியால் வித்யாவதியின் பெயரைச் சொல்லி அழைக்க அவள் மனமோ இளகியது.தொடர்ந்து அன்னையானவள் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று வித்யாவதியிடம் கேட்கிறாள். வேதங்களும் தேவர்களும் தெய்வங்களும் கூட காண்பதற்கரிய மெல்லிய திருவடிகளை உடைய பிரபஞ்சத்தின் வித்தான பராசக்தியே தன் முன் வந்து நிற்கும் போது வேறு என்ன வரம் வேண்டும்?!
எனினும் வித்யாவதியின் வாய் அசைவினால் இப்பூமி மாபெரும் புண்ணிய பேற்றைப்பெறக் காத்திருந்தது.. கடம்பவனமோ மகிழ்ந்து குலுங்கியது. அந்த மண்ணோ அப்பெண் குழந்தையின் பாதத்தால் புனிதமடைய ஏங்கியது. வேறு எந்த விஷயங்களிலும் நாட்டமுறாத பக்தியின் நன்னெறி கொண்ட வித்யாவதி, வரம் தர வந்த அன்னையை நோக்கி "தாயே நீ இதே வடிவில் எனக்கு குழந்தையாக வர வேண்டும்" என்று வரம் கேட்டாள். உடனே மெல்லிய புன்னகை பூத்த மழலைச்செல்வியோ அவ்வரமானது வித்யாவதியின் அடுத்த பிறப்பில் இதே கடம்பவனத்தில் நிகழும் என்று வரமளித்தாள்.
வித்யாவதியின் வாயிலிருந்து கேட்ட அந்த ஒரு வரம் அதன்பின் ஒரு மாபெரும் சகாப்தத்தை உருவாக்க உலகை தயாராக்கியது. வித்யாவதியின் ஒரு வரத்தால் இன்று காலங்கள் பல கடந்தும் பலரும் பல வரங்களைப் பெறுகின்றனர். ஆம்..அந்த வித்யாவதி தான் மறு பிறப்பில் சோழ நாட்டின் மன்னன் சூரசேனனின் மகளாக "காஞ்சனமாலை" என்னும் பெயர் தரித்துப் பிறந்து கடம்பவனமான பாண்டியத்தலைநகராம் மதுரையின் மன்னனான மலையத்துவசனை கரம்பற்றினாள்.
காஞ்சனமாலை முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாகவும், மலையத்துவசன் செய்த தொண்ணூற்றொன்பது அஸ்வமேத யாகங்கள் மற்றும் நூறாவதான புத்திர காமேஷ்டி யாகத்தின் பயனாக அந்த வேள்வித் தீயில் மூன்று வயது பெண் குழந்தையாக மூன்று தனங்களுடன் வந்த மரகத நிரத்தினள் மெல்ல நடந்து காஞ்சனமாலையின் மடியில் அமர்ந்தாள். அன்றைய தினம் பிரபஞ்சமே மகிழ்வுற்றது. பூமியை விட தொலைதூரத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களும் கூட பொறாமை கொண்டது மதுரையின் மண் துகள்களை நினைத்து..பஞ்சினும் மெல்லிய மழலையின் மலர் பாதங்கள் பூமியில் பட பூமித்தாய் தன் பொறுமையின் பயனை அன்று அடைந்தாள்.
மன்னனும் "அசரீரி"வாக்கிற்கு இனங்க தன் பெண் குழந்தைக்கு "தடாதகை" என்ற பெயரைச்சூட்டி அவளை ஆண் பிள்ளையைப் போலவே சகல கலைகளிலும் தேர்ச்சி பெற வளர்த்தான். தடாதகை தன் மழலைப்பிராயத்திலேயே பெரியவர்களும் மாவீரர்களும் கண்டு வியக்கும் வீரதீர சாகச செயல்களைச் செய்தாள். பாண்டியர்களின் குல குருவாக திகழ்ந்த அகத்தியரே தடாதகைக்கும் குருவாக திகழ்ந்தார். அன்று பார்வதி பரமேஸ்வரரின் திருமணத்தை காண முடியாமல் சிவபெருமான் கட்டளைக்கு இணங்க தென்திசை நோக்கிச் சென்ற அகத்தியர் அவர் தன் பிறவிப்பெறும் பயனை அடைந்தார்.. ஆம், எந்த ஆதிபராசக்தியை அவர் போற்றி வணங்குகிறாரோ அவளே அவர்தன் மடியில் குழந்தையாக வந்திருந்து அவரிடமே பாடம் கற்கிறாள். இதைவிட பெரும்பேற்றை யாரேனும் அடையத்தான் முடியுமோ?!
அப்படியாக அறுபத்திநான்கு கலைகளிலும் போர் பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்ற வீரமங்கையாக திகழ்ந்தாள் தடாதகை. தடாதகைக்கு பன்னிரண்டு வயதாகும் போது அவள் அவதாரத்தின் நோக்கத்தின் அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைத்தாள். மதுரையும் பாண்டிய மண்டலமும் மட்டுமே கண்டு இன்புற்ற தடாதகையின் மலரடிகள் பூலோகம் முழுவதும் பரவி பூமிக்கு புண்ணியத்தை தரவிருந்த நாளும் வந்தது.. என்ன நிகழ்வு அது? அடுத்த தொடரில் சிந்திப்போம் சிறப்பாக...
மீனாக்ஷீம்!!!
அன்பைக் கடன் வாங்கி!
மீனாட்சி ஏன் மதுரையில் அவதரிக்க வேண்டும்.. அன்னை தடாதகை -6
ஜன்னல் வழியே நிலவுடன் ஒரு மௌன உரையாடல்
Short Story: மனமொத்த தம்பதி!
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!
சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
{{comments.comment}}