‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

Aug 08, 2026,04:18 PM IST
புதுடெல்லி: இந்தியாவில் புகழ்பெற்ற ‘ஃபார்ச்சூன்’ (Fortune) பிராண்ட் சமையல் எண்ணெய்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ‘ஏடபிள்யூஎல் அக்ரி பிசினஸ்’ (AWL Agri Business Ltd) நிறுவனத்திற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அபராதம் விதித்துள்ளது. சத்துக்கள் செறிவூட்டப்பட்டதாகக் கூறி விற்பனை செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெயில் போதிய வைட்டமின் சத்துக்கள் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி சோதனையில் அம்பலமான உண்மை : 
கோவாவில் உள்ள பிரபல 'தாஜ் ஃபார்ட் அகுவாடா ரிசார்ட்' உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது, AWL நிறுவனத்தின் மங்களூரு ஆலையில் தயாரிக்கப்பட்ட 'ஃபார்ச்சூன் ஃப்ரையோலா' (Fortune Fryola) சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்யின் ஒரு லிட்டர் மாதிரி சேகரிக்கப்பட்டது.

அந்த மாதிரியை முதன்மை உணவு பரிசோதனை ஆய்வகத்தில் ஆய்வு செய்த போது, அதில் 'உணவுச் செறிவூட்டல் விதிகள், 2018'-ன் கீழ் இருக்க வேண்டிய வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'டி' ஆகிய அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களின் அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிகக் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன் பிரிவு 3(1)(zx)-ன் கீழ் இந்த எண்ணெய் "தரம் குறைந்தது" (Substandard) என அறிவிக்கப்பட்டது.

மேல்முறையீட்டிலும் உறுதி செய்யப்பட்ட குறைபாடு



ஆய்வகத்தின் இந்த முடிவை எதிர்த்து அகமதாபாத்தைச் சேர்ந்த AWL அக்ரி பிசினஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதனடிப்படையில், அந்த மாதிரி மீண்டும் மத்திய பரிந்துரை ஆய்வகத்திற்கு (Referral Laboratory) அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், மறுசீராய்விலும் அந்த எண்ணெயில் வைட்டமின் 'டி' அளவு சட்டப்படி இருக்க வேண்டிய வரம்பை விடக் குறைவாக இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மத்திய உரிம ஆணையத்தின் ஒப்புதலுடன் கோவா தீர்ப்பு அதிகாரி (Adjudicating Officer) மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தரம் குறைந்த செறிவூட்டப்பட்ட எண்ணெயை தயாரித்து சந்தைப்படுத்தியதற்காக AWL அக்ரி பிசினஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. இருப்பினும், விதிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு என்பதை FSSAI அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

நிறுவனத்தின் விளக்கம் :
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள AWL அக்ரி பிசினஸ் நிறுவனம், "இது நுகர்வோரின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை அல்ல; எண்ணெயில் சேர்க்கப்படும் வைட்டமின் செறிவூட்டல் அளவு தொடர்பான விஷயம் மட்டுமே. எண்ணெயில் சேர்க்கப்படும் செயற்கை வைட்டமின்கள், நீண்ட நாள் சேமிப்பு, வெளிச்சம் மற்றும் வெப்பநிலை காரணமாகக் காலப்போக்கில் குறைய வாய்ப்புள்ளது. தீர்ப்பு நகல் முழுமையாகக் கிடைத்த பிறகு, சட்டப்பூர்வ மேல்முறையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் தவறான விளம்பரங்கள் மீது FSSAI தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்