சென்னை : தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று நவம்பர் 10ம் தேதியான இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. வழக்கமாக எதிர்க்கட்சிகள் தான் ஆளும் கட்சிக்கு ஏதாவது பிரச்சனை, இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஆனால் தவெக ஆட்சியில் மட்டும் தான் எதிர்க்கட்சிகளை விட அவர்கள் அரசுக்கு, அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களே பிரச்சனையாகவும், ஆபத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் மாறி வருகிறார்கள். இது வியப்பளிப்பதாக உள்ளது.
மின்சாரம், சட்ட ஒழுங்கு, போதை பொருள், சிறைகளில் கைதிகள் தப்பியோட்டம், குழந்தைகள் மாயம் என பல பிரச்சனைகள் தவெக அரசுக்கு ஏற்கனவே பெரும் சவாலாக இருந்து வருகிறது. தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் போன்ற ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். ஆனால் முதல்வர் விஜய் எதற்கும் வாய் திறக்காமல் அமைதி காத்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் தவெக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்து வரும் நிலையில் அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல தவெகவினரும் தொடர்ந்து நெருக்கடி தரும் வகையில் செயல்பட்டு வருவது தவெக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.

தவெக எம்எல்ஏ.,க்கள் சிலர் மீது தொடர்ந்து விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் அமைச்சர்கள் சிலர் மீது புகார் எழுந்த போது, அமைச்சரவை கூட்டத்தின் போது, " தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன்" என முதல்வர் விஜய் எச்சரித்திருந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் துணை சபாநாயகராக இருக்கும் தவெக எம்எல்ஏ., ரவிசங்கர், தன்னை கேள்வி கேட்ட வாக்காளர் ஒருவரை கொடுமையாக தாக்கி உள்ளதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி, அவர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதற்கிடையில் தவெக எம்எல்ஏ., அருள் விக்னேஷ் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கே ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தப் புகாரை தற்போது அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். தன் மீது அவதூறு பரப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மீது மட்டுமல்ல மேலும் பல எம்எல்ஏக்கள் மீதும் ஏற்கனவே சர்ச்சைகள் உள்ளன. தவெக எம்எல்ஏ.,க்கள் மீது அடுத்தடுத்து சர்ச்சைகள், புகார்கள் எழுந்து வரும் நிலையில் எம்எல்ஏ.,க்கள் உடனான அவசர ஆலோசனை கூட்டத்தை நவம்பர் 11ம் தேதியான நாளை பனையூர் அலுவலகத்தில் கூட்டியுள்ளார் முதல்வரும், தவெக தலைவருமான விஜய்.
தவெகவினர் மீது படிப்படியாக மக்களிடையே அதிருப்தி ஏற்படுவது போல தெரிகிறது. இது ஆட்சிக்கும், தவெகவுக்கும் குறிப்பாக முதல்வர் விஜய்க்கும் நல்லது அல்ல என்று அவரது தோழமைக் கட்சியினரே எச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். தவெக எம்எல்ஏ.,க்கள் வரம்பு மீறி நடந்து கொள்ளும் நிலை தொடர்வதும், இவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, சாட்டையை சுழற்றாமல் இன்னும் நாகரீக அரசியல் செய்து கொண்டிருந்தால், அது தவெக அரசுக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறி விடும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்களே ஆதரவு தெரிவிக்க துவங்கி விடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல மாற வேண்டும் என்று தவெக தொண்டர்களே எதிர்பார்க்கிறார்கள். ஆட்சி செய்வதிலும், சொந்த கட்சியினரை அடக்கி வைப்பதிலும் சாட்டையை சுழற்ற வேண்டும். இரும்புக் கரம் கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஒடுக்க வேண்டும். காவல்துறையை முழுமையாக செயல்பட விட வேண்டும். சொந்தக் கட்சியினர் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
முதல்வர் விஜய் இப்போதும் சுதாரிக்காவிட்டால், தவெக அரசிற்கு மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்தி விடும். விஜய்யை திரையில் சூப்பர் ஹீரோவாக பார்த்ததால், நிஜத்திலும் அவர் ஹீரோவாகி அதிரடி காட்டி, மக்களுக்கு நல்ல செய்வார் என நம்பி பெரும்பான்மையான மக்கள் விஜய் மீதான அபிமானத்தால் ஓட்டளித்து, அவரை முதல்வராக்கி உள்ளார்கள். ஆனால் மக்கள் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக முதல்வர் விஜய்யின் செயல்பாடு உள்ளது.
அனைவரிடமும் பொறுமையும், இரக்கமும் காட்டுவது விஜய்யின் சுபாவம் தான். ஆனால் ஒரு ஆட்சியாளர் அனைத்து நேரங்களிலும், அப்படியே இருந்தால் ஆட்சி செய்ய முடியாது. அரசை நிர்வகிப்பவர்கள் எப்போது கண்டிப்பு காட்ட வேண்டும், எப்போது அதிரடி காட்ட வேண்டுமோ அப்போது காட்டியே ஆக வேண்டும். பாரபட்சம் இன்றி நடவடிக்கைகள் பாய்ந்தால் சொந்த கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, அதிகாரிகளுக்கும் அச்சம் ஏற்படும். இதனால் அரசு பணிகள் சரியாக நடக்கும். மக்களின் ஆதரவும் பெருகும். இல்லாவிட்டால் சிக்கல்தான்!
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு : திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி
இரும்புக்கரம் கொண்டு அடக்குவாரா விஜய்? இனியும் சுதாரிக்காவிட்டால் தவெக அரசுக்கு சிக்கல்!
"ஓ... மேடமுக்கு கோபம் வந்திருச்சா".. அழாதே அனாமிகா (2)
கந்தசஷ்டி விரதம் எப்படித் தோன்றியது தெரியுமா?
பெண் ஆட்சியருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினேனா?: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு
சமையல் With ஸ்வர்ணா: காரசாரமான கத்தரிக்காய் தக்காளி சட்னி!
சுயும்புவாக உருவாகி அருள் தரும்.. ஸ்ரீ வாராகி அம்மன்.. சென்னை to ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (5)
ரூ.500 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்துங்க - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு யோசனை
தமிழக அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி ஆன்லைன் திருட்டு: சைபர் குற்றப்பிரிவு தீவிர விசாரணை!
{{comments.comment}}