"ஓ... மேடமுக்கு கோபம் வந்திருச்சா".. அழாதே அனாமிகா (2)

Nov 10, 2026,01:36 PM IST

- ந.தீபலட்சுமி


"என்னங்க.... இங்க பாருங்க, இந்த கலர் அனுவிற்கு அழகாக இருக்கும் இல்ல?" என மாலா கேட்க, அவள் கையில் இருந்த பச்சை கலர் கவுனை மேலும் கீழும் அளந்தான் ரஞ்சித். 


"அய்யே... பச்சையா? ரொம்ப டார்க்கா இருக்கும் மாலாம்மா",அவன் அவளை அப்படித்தான் எப்பொழுதும் அழைப்பான்.


"அட போங்க இதுவரைக்கும் பத்து, பதினைந்து கலர் காட்டிட்டேன் எதுவுமே உங்களுக்கு பிடிக்கலையா, அப்போ நீங்களே உங்க மகளுக்கு எடுத்துக்கோங்க", என்று பொய்க் கோபத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் மாலா.


" ஓ... மேடமுக்கு  கோபம் வந்திருச்சா, ஓகே... நீ எனக்கு ஒரு டாஸ்க் கொடுத்துட்டே, இப்ப பாரு", எனக் கூறியவன் தன் செல்போனை உயிர்ப்பித்து யாருடனோ பேசினான்.


பத்தே நிமிடம்.... அந்த பிரபல பெரிய துணிக்கடையின் முதலாளி ஓடோடி வந்தார். " என்னப்பா ரஞ்சித்... நீ பர்ச்சேஸ்க்கு வந்து இருக்கேன்னு முதலிலேயே சொல்லி இருக்கலாம் இல்ல?" என் சிரித்துக் கொண்டே அவனை நெருங்கினார் துரைசாமி.


"நோ ஃபார்மாலிட்டிஸ் சார். என்னோட மகளுக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் அதான் அவளுக்கு டிரஸ் எடுக்கலாம்னு வந்தோம். ஆனா ...பாருங்க...இங்க இருக்கிற எதுவும் என் ஒய்ஃப்க்கு பிடிக்கல. அதான் பேசாமல் கடையை விலைக்கு வாங்கிட்டு அவளுக்குப் பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் மாற்றலாம் என்று பார்க்கிறேன்", என்ற ரஞ்சித்தை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மாலா.


"அட ..என்னப்பா நீ ! கோபித்துக்கொள்ளாதே... இதோ உடனே, புதுசா வந்திருக்கிற எல்லா டிரஸ்ஸையும் கொண்டு வர சொல்றேன். உங்களுக்கு பிடிச்சா எல்லாத்தையுமே எடுத்துக்கோங்க", என்ற துரைசாமி சொன்னதுடன் நிற்காமல் உடனே அருகில் இருந்த மேனேஜரை அழைத்து தன் வீட்டில் இருக்கும் , கோடவுனில் அன்று காலையில் வந்திருந்த புது வரவுகளை எடுத்து வர அவசர அவசரமாக அனுப்பி வைத்தார்




அதுவரை அவர்கள் இருவரையும் தன் அலுவலகத்திலேயே அமரச் செய்தார்.


மாலாவிற்கு தலையைச் சுற்றியது. இப்பொழுதுதான் முதன்முதலில் ரஞ்சித்தின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கிறாள் அவள். அவன் பேசியது ஜோக்கா அல்லது அச்சுறுத்தலா என அவனுக்கும் துரைசாமிக்கும் மட்டுமே தெரியும்.


வீட்டிற்கு வந்து சேரும் வரை மாலா வாயடைத்து இருந்தாள். ரஞ்சித் பேசிய பிறகு நடந்தது எல்லாமே அவளுக்கு ஒரு கனவு மாதிரி இருந்தது. நூற்றிற்கும்  மேற்பட்ட வெரைட்டீஸ். எதை எடுப்பது, எதை விடுப்பது என்றே தெரியாமல் கண்களை அகல விரித்து ஆச்சரியமாக பார்த்தாள் மாலா.


அத்தனையும் அவ்வளவு அழகு. ஒவ்வொரு டிசைனிலும், மாலா, அனாமிகாவிற்கு ஏற்றது என எதை எதை நினைத்தாளோ அது அத்தனையும் பேக்கிங் ஆனது. கிட்டத்தட்ட அனைத்துமே அவர்கள் வாங்கியது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. முதன்முறையாக அவள் மனதிற்குள் மெதுவாக ஒரு பயம் ஓடி வந்து சம்மணம் போட்டு அமர்ந்தது. 


"மாலா...மாலாம்மா... என்ன தூங்கிட்டியா?"


"ஆங்..இல்லைங்க, சும்மா தான்,கொஞ்சம் கண் அசந்துட்டேன்".


" சரி, வீடு வந்தாச்சு, இறங்கற ஐடியா இல்லையா?",எனக் கேட்டுக் கொண்டே,கீழே இறங்கி அவள் அமர்ந்திருந்த பக்கம் வந்து கார் கதவைத் திறந்து ,அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.


அவ்வளவுதான்...அவள் அவசர அவசரமாக கீழே இறங்கி வீட்டுக்குள் ஓடினாள். ரஞ்சித் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே நின்று நிதானமாக தன் செல்போனை எடுத்து டயல் செய்தான். 


"அங்கிள், நான் ரஞ்சித் .அங்கு வந்திருக்கிற பார்சல்களை எல்லாம் இறக்கி வைங்க. நாளை நானும் மாலாவும் அங்கு வர்றோம்", எனக் கூறி அவரின் பதிலுக்கு காத்திருக்காமல் அழைப்பை துண்டித்து வேக வேகமாக உள்ளே சென்றான்.


சித்த பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள் மாலா. வேலையாட்கள் கொடுத்த ஜூஸைக் கூட குடிக்க மனம் இல்லாமல் மறுத்து விட்டாள். ஒரே மகளின் பத்தாவது பிறந்தநாள், முன் எப்போதும் இந்த அளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்ததில்லை அவன். இன்று மட்டும் ஏன்? என அவள் மனம் குழம்பியது. என்னவாயிற்று அவனுக்கு? தான் பார்த்து ,ரசித்து, விரும்பி திருமணம் செய்த ரஞ்சித் இல்லையே இவன்! என நினைக்கும் பொழுதே கண்களில் அடக்க முடியாமல் பீறிட்ட அழுகையுடன் தன் கால்களில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள் மாலா. எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ...திடீரென அவள் தோளின் மீது ஒரு "கை " விழுந்தது.


" பாப்பா... பாப்பா...கண்ணை தொறம்மா.


"பாப்பா... பாப்பா.... நான் பேசுறது கேட்குதா....?"


பலவிதமான குரல்கள்.


யார் யாரோ அவளை அழைப்பது போன்ற உணர்வு.


தலை விண் விண் என வலித்தது.


கண்கள் மிகவும் பாரமாக இருந்தது. 


உடல் வலி சொல்லவே வேண்டாம். கால்களை அசைக்கவே முடியவில்லை.


ஏன்? கால்கள் இருக்கிறது  என்ற உணர்வே அவளுக்கு  இல்லை.


"ஐயோ! ஒரு மாசமா இப்படியே இருக்கியேம்மா. கொஞ்சம் கண்ணை தொறம்மா!"


அனாமிகாவின் கைகள் அசைந்தது. கண்களை மெதுவே திறக்க முயன்று  பின்பு அதில் வெற்றியும் பெற்றாள்.


"அம்மா... அம்மா..." கண்களில் வழியும் கண்ணீருடன் அவள் மெதுவாக அழைத்தாள்.


அவள்தான், ஜோதி. அனாமிகாவின் கேர் டேக்கராக நியமிக்கப்பட்டவர். அந்த ஒரு மாதம் முழுவதும் அவளை விட்டு எங்கும் நகராமல் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக அவள் அருகிலேயே இருந்து கவனித்து வருபவள். சந்தோஷம் தாங்க முடியவில்லை அவளுக்கு.


" நர்ஸம்மா.... நர்ஸம்மா.... ஓடி வாங்க, பாப்பா கூப்பிடுது."


ஜோதியின் குரலைக் கேட்டதும் நர்ஸ் வேக வேகமாக ஓடி வந்தாள்.


"அனாமிகா... அனாமிகா.... "என நர்ஸ் அழைக்க, மெதுவே கண் திறந்த அனாமிகா ,"சிஸ்டர், அம்மா எங்கே?" என கேட்க," இதோ இப்போ வந்துருவாங்க" என அவளிடம் கூறிவிட்டு ஜோதியிடம் திரும்பியவள்," நான் சாருக்கும் டாக்டருக்கும் இன்பார்ம் பண்ணிடறேன். அதுவரைக்கும் அவளிடம் ஏதாவது பேச்சு கொடுத்துக் கொண்டே இருங்க" என சொல்லிவிட்டு அவசர அவசரமாக வெளியேறினாள் நர்ஸ்.


அனாமிகா தன் கண்களை அகல விரித்தாள். சுற்றும் மற்றும் சுழற்றினாள். அவளுக்கு புரிந்தது இது அவர்கள் வீடு இல்லை. அவ்வளவுதான் மீண்டும் மயக்க நிலைக்கு போனாள் அனாமிகா.


" அனு...அனு குட்டி...ஒடாதேம்மா...விழுந்திடுவே..."


சொல்லி முடிப்பதற்குள் தொப்பென அவள் கீழே விழ, "அய்யோ...அனாமிகா...."


"அம்மா....ஆஆஆஆ..." என' ஓ 'வென அழுது கொண்டே கைகளை காற்றினில் துழாவினாள் அனாமிகா.


(தொடரும்)


(N DEEPALAKSHMI , B.T.ASST IN ENGLISH , GHSS - SATHUVACHARI , VELLORE)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"ஓ... மேடமுக்கு கோபம் வந்திருச்சா".. அழாதே அனாமிகா (2)

news

கந்தசஷ்டி விரதம் எப்படித் தோன்றியது தெரியுமா?

news

பெண் ஆட்சியருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினேனா?: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு

news

சமையல் With ஸ்வர்ணா: காரசாரமான கத்தரிக்காய் தக்காளி சட்னி!

news

சுயும்புவாக உருவாகி அருள் தரும்.. ஸ்ரீ வாராகி அம்மன்.. சென்னை to ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (5)

news

ரூ.500 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்துங்க - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு யோசனை

news

தமிழக அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி ஆன்லைன் திருட்டு: சைபர் குற்றப்பிரிவு தீவிர விசாரணை!

news

Tueseday Morning Kitchen: வாழைப்பூ கூட்டு.. சாப்பிடலாம் வாங்க!!

news

The Dancing Peacock

அதிகம் பார்க்கும் செய்திகள்