சுயும்புவாக உருவாகி அருள் தரும்.. ஸ்ரீ வாராகி அம்மன்.. சென்னை to ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (5)

Nov 10, 2026,01:04 PM IST

- எம்.எல்.பிரபா


உத்தரகோசமங்கை கோவிலுக்கு அருகிலேயே ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் மிகவும் பழமையான ஸ்ரீ சுயம்பு வராகி அம்மன் கோவில் உள்ளது. உலகின் முதல் வராகி அம்மன் கோவில் என்று  போற்றப்படுகிறது. இங்குள்ள வராகி அம்மன் சிலை மனிதர்களால் செதுக்கப்படாமல், சுயம்புவாக தோன்றியது என்று கூறப்படுகிறது. மூலவர் சிலையை வெள்ளிக் கவச த்தால் மூடப்பட்டு வைத்துள்ளார்கள்.


மங்கள நாதர் சுவாமி கோயிலைப் போலவே இந்த வாராஹி அம்மன் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது. மும்மூர்த்திகளின் அம்சமும், சக்தியும் கொண்டவராக இந்த ஆதி வராகி அம்மன் காட்சியளிக்கிறார். அம்மன் வடக்கு நோக்கி உக்கிரத்துடன் காட்சியளிக்கிறார். அம்மனின் இடது பாதத்திற்கு கீழே அரை அடி உயரத்தில் சிறிய விநாயகர் சிலை உள்ளது .இந்த விநாயகர் அம்மனின் கோபத்தை தன் வசம் ஈர்த்து பக்தர்களுக்கு சாந்தமான அருளை மட்டும் வழங்குகிறார். அம்மனின் காலடியில் பஞ்சபூதங்களும் அடக்கம். இதனை குறிக்கும் வகையில் ஐந்து பூதகணங்கள் அம்மனின் காலடியில் உள்ளன.




கோயிலின் வெளிப்புறத்தில் வாசலில் 100க்கும் மேற்பட்ட அம்மிக்கல் உள்ளது .அந்த அம்மிக்கல்லில் பக்தர்கள் மஞ்சள் வாங்கி அரைத்து அம்மனுக்கு சாத்துகிறார்கள். நாங்களும் மஞ்சள் வாங்கி அரைத்தும், மஞ்சள் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வந்தோம். பக்தர்கள் தங்களுடைய  பிரார்த்தனைகளை அம்மனிடம் வேண்டிக்கொண்டு மஞ்சளை வைத்து பூஜை செய்து பிறகு பிரசாதம் ஆக அதை பெற்றுக் கொள்கின்றனர். அதில் சிறிது சாப்பிட்டுவிட்டு  மீதியை வீட்டிற்கு கொண்டு சென்று அவர்களது பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை.




பல பேருக்கு நினைத்த காரியம் நிறைவேறியும் உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் அங்கு இருக்கும் வேப்ப மரத்தில் மஞ்சள் கயிறு மற்றும் தொட்டில் கட்டியும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சப்த கன்னியரில் வராகி அம்மன் ஐந்தாவது கன்னி ஆவார். வாராஹி அம்மனுக்கு ஒரு சில இடங்களிலேயே கோயில் உள்ளது. அதில் இந்த கோவில் மிகவும் பழமையானது, முதன்மையானது.


இங்கு வராகி அம்மனுக்கு இரண்டு உற்சவமூர்த்திகள் உள்ளன. நான்குபுஜம் கொண்ட உற்சவமூர்த்தியை "ருத்ர வராகி" என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடித்திருவிழாவில் வீதி வலம் வருவார். எட்டுபுஜம் கொண்ட உற்சவமூர்த்தி நவராத்திரி விழாவில் வீதி வலம் வருவார். இது தவிர "மங்கை மாகாளி "அம்மனுக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. பைரவர் சன்னதியும் உள்ளது. இந்த வராஹி அம்மனை நாங்களும் தரிசனம் செய்து விட்டு  திருவருள் பெற்றோம். அடுத்த கோயிலுக்கு செல்ல புறப்பட்டோம்.


பயணம் தொடரும்


(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்