ஒரு சீட்டுக்காக திமுக அரசை ஆதரித்து நடிக்கிறார் கமல்ஹாசன்.. அண்ணாமலை பாய்ச்சல்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக நடிகர் கமல்ஹாசன் மீது பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கரூர் சென்று நேற்று பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசும்போது, கரூரில் நடந்தது துயரமான சம்பவம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது சுமத்தக்கூடாது. அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு இது நேரமில்லை. காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்துள்ளனர். அவர்களை விமர்சிக்கக் கூடாது. முதலமைச்சர் மரியாதையுடன் செயல்பட்டுள்ளார். அதைப் பாராட்ட வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
இதுகுறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கமல்ஹாசன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது ஆன்மாவை விற்றுவிட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலை கூறுகையில், கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசியலில் அவர் பேசுவது ஒருதலைப்பட்சமானது. கரூர் சம்பவம் போன்ற விஷயங்களில் கூட திமுகவுக்கு ஆதரவாகவே பேசுகிறார்.
என்னதான் கமல் ஹாசன் பேசினாலும், தமிழ்நாட்டு மக்கள் அவரை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கரூர் சென்று நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்று சொன்னால் யார் ஏற்றுக்கொள்வார்கள்? என்றார் அவர்.