பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலைக்கு கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான 51 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் குழுவை பாஜக நியமித்தது. இதில் அண்ணாமலையின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அவருக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான 2 நாட்களிலேயே தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்தார். தன்னுடைய தந்தை உடல்நிலை காரணமாக, அவரை கவனித்துக் கொள்ள நேரம் ஒதுக்க வேண்டி உள்ளதால் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும், அதே சமயம் களத்தில் முழு வீச்சில் பணியாற்ற தயாராக உள்ளதாகவும் அவர் கூறி இருந்தார்.
ஆனால் அண்ணாமலையின் அதிருப்தியின் வெளிப்பாடாக இது பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்களை சந்தித்து, நேற்று அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இந்த சமயத்தில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அண்ணாமலைக்கு விரைவில் 'சக்தி கேந்திரா' என்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், பூத் அளவிலான பணிகளை ஒருங்கிணைப்பதிலும் இந்தப் பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தப் புதிய பொறுப்பு குறித்த முடிவுகள் எடுப்பதற்கு முன்னதாக, கடந்த சில நாட்களாக முக்கியமான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. நேற்று சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை கலந்துகொண்டு தனது தரப்பு நியாயங்களையும், கருத்துகளையும் விரிவாக எடுத்துரைத்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இன்று, சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான 'கமலாலயத்தில்' முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தத் தீர்க்கமான கூட்டத்திற்கு பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்த காலத்தில் கட்சி பல போராட்டங்களையும், மாற்றங்களையும் சந்தித்தது. தற்போது அவர் ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தீவிர கட்சிப் பணிகளுக்குத் திரும்ப உள்ளதையே இந்த நகர்வுகள் காட்டுகின்றன.
குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தேசியத் தலைமையுடன் நடத்தப்பட்ட இந்தத் தொடர் சந்திப்புகள், அண்ணாமலைக்கு தேசிய அளவிலோ அல்லது மாநில அளவில் ஒரு வலுவான கட்டமைப்பையோ உருவாக்கும் பொறுப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.