மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. தவெக தலைவர் விஜய் வீட்டில் குவிந்த போலீஸ்..!
சென்னை: தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து போலீஸார் மோப்ப நாய்கள் சகிதம் சோதனையில் ஈடுபட்டனர். கடைசியில் அது புரளி என்று தெரிய வந்தது.
சமீப காலமாக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. குறிப்பாக விஜய் வீட்டுக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல திரிஷா வீட்டுக்கும் மிரட்டல் வந்தது. நேற்று நயன்தாரா வீட்டுக்கு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு அடுத்தடுத்து 2 முறை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து போலீஸார் அவரது நீலாங்கரை வீட்டுக்கு மோப்ப நாய்கள் சகிதம் விரைந்து சென்று சோதனையிட்டனர். சோதனையில் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பின் கீழ் விஜய் உள்ளார். சமீபத்தில் அவரது வீட்டுக்குள் ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நபர் உள்ளே புகுந்து மாடியில் அமர்ந்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பெரும் பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்பட்டது. இப்போது அடுத்தடுத்து 2 முறை அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.