சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!

Su.tha Arivalagan
Apr 30, 2026,11:04 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவில், விழாவின் சிகர நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவும், கோலாகலமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இவ்விழாவினை காண  லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவது வழக்கம். இந்த திருவிழா சைவ, வைணவ ஒற்றுமையின் அடையாளமாக கருதப்படுகிறது.

 

சித்திரை திருவிழா :


இந்த ஆண்டு 20 26 சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து மே 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி நாளன்று, அதிகாலை  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.


கள்ளழகர் கோவில்:


 


மதுரையில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் திருமாலிருஞ்சோலை,  மா விருங் குன்றம்  ,சோலை மலை என்ற பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் மூலவராக பரம சுவாமியும், உற்சவராக  சுந்தரராஜ பெருமாளும் அருள் பாலிக்கின்றனர்.


கள்ளழகர் வருகை:


சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக தன் தங்கை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வேண்டி, திருமாலிருஞ்சோலையில் இருந்து அழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.அப்போது, அவர் கள்ளர் வேடமிட்டு பலவிதமான ஆயுதங்களுடன் கையில் வளரித்தடி, (இதனை ஆங்கிலத்தில் Boomerang என்பர், கள்ளர் இனத்தவர் இதனை பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் ), கொண்டை தலையின் நடுப்பகுதியில் நேராக அமையும் தனித்துவமான கொண்டை,தலையில் கட்டப்படும் தலைப்பாகை, வண்டு கடுக்கன்,காது மடலோடு ஒட்டாமல் பெரிய வளையமாக தொங்கும் கடுக்கன், சாட்டைக் கம்பு, கருப்பு புடவை ஆகியவற்றுடன் கள்ளழகர் காட்சி தருகிறார். அவர் இவ்வாறு கள்ளர் வேடமிட்டு பலவிதமான ஆயுதங்களுடன் வருவதனால் அவர் 'கள்ளழகர் 'என்று அழைக்கப்படுகிறார்.


கணக்கு காட்டும் கள்ளழகர்:


அழகர் மலைக்கோவிலில் காவல் தெய்வமாக இருப்பவர் 18ஆம் படி கருப்பண்ணசாமி. சித்திரை திருவிழாவில் கள்ளழகர்,அழகர் மலையில் இருந்து மதுரைக்கு புறப்படும் போது அவர் அணிந்திருக்கும் நகைகளை கருப்பண்ணசாமி முன்பாக வைத்து கணக்கு காட்டுவார். பின்னர், வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டு அழகர் மலைக்கு திரும்பும் போதும் கருப்பண்ணசாமியிடம் கணக்கு காட்டி விட்டு தான் கோவிலுக்குள் செல்வார்.


கள்ளழகர் உடுத்தும் பட்டாடை : 


கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது எந்த வண்ண பட்டாடை உடுத்துகிறார் என்பது முக்கியமான நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் அழகர் எந்த வண்ண பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குகிறாரோ, அதற்கு ஏற்றவாறு அந்த ஆண்டில் பலன்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி அழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும் என்றும், மஞ்சள் பட்டு உடுத்தி வந்தால் மங்களகர நிகழ்வுகள் நடக்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது.


வரலாறு:


மதுரையில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு தாமதமாக வந்த அழகர், தங்கை மீனாட்சியின் திருமணத்தை காணாமலேயே கோபமடைந்து வைகை ஆற்றில் இறங்கி விட்டு, மக்களுக்காக மதுரையிலேயே தங்கி பின் மீண்டும் அழகர்மலைக்கு திரும்புகிறார். அதன்படி கள்ளழகர் வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி, பின்பு கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கும் மோட்சம் அருள்வார். அதைத்தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார  திருக்கோலங்களில்  காட்சி தருவார்.இறுதி நிகழ்வாக கள்ளழகர் மதுரையில் இருந்து அழகர் மலைக்கு திரும்புவார்.


எதிர் சேவை :


கள்ளழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு மதுரை மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் நிகழ்வு 'கள்ளழகர் எதிர் சேவை' என்று அழைக்கப்படுகிறது.( ஏப்ரல் 30ஆம் தேதி எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது ) இதனைத் தொடர்ந்து ஆண்டாள் தொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்வார்.


கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்:


சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் அமர்ந்து வைகை ஆற்றில் இறங்குவார். இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரளாக வந்த வண்ணம் இருக்கிறார்கள். அப்போது பக்தர்கள் அனைவரும் எழுப்பும், "கோவிந்தா" எனும் கோஷம் மதுரையை அதிர வைக்கும்.


தூங்கா நகரம் மதுரையில் நடைபெறும் இந்த சிறப்பான சித்திரை திருவிழாவில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையும், கள்ளழகர் வைகை  ஆற்றில் இறங்கும் நிகழ்வையும் கண்டு களித்தால் இனிமையான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி