விநாயகர் தலையில் அகத்தியர் வைத்த மூன்று கொட்டு.. நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில் மகிமை!
- ஸ்வர்ணலட்சுமி
அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா.. வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், காங்கயம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் காவிரி ஆற்றின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாவடிப்பாளையம் புதூர் நால் ரோட்டில் இருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காங்கயம் பாளையம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் ஸ்ரீ அன்னபூரணி அம்பிகா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஸ்ரீ நல்லநாயகி உடனமர் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் அருள் பாலிக்கிறார்.
இங்கு அமைந்துள்ள விநாயகருக்கு புராணக்கதை உள்ளது. அதைப் பற்றி சிறு தகவல் பார்ப்போம்.
திருக்கையிலாயத்தில் சிவன் -பார்வதி திருக்கல்யாணத்தின் போது தேவர்களும், முனிவர்களும் மற்ற ஏனையர்கள் அனைவரும் வடக்கே சென்றதால் வட பாகம் தாழ்ந்து, தென் பாகம் உயர்ந்து காணப்பட்டது. இதனை அறிந்த சிவபெருமான் தனக்கு நிகரான அகத்தியரை அழைத்து தெற்கில் செல்ல ஆணையிட்டார். அதனைக் கேட்ட அகத்தியர் சிவபெருமானிடம் அனைத்து ஜீவராசிகளும் பெருமானே தங்கள் திருக்கல்யாணத்தை பார்க்கும் பொழுது எனக்கு அந்த பாக்கியம் இல்லையா? என வருந்தி வேண்டுகிறார். சிவபெருமான் நீர் இருக்கும் இடத்தில் எங்களது திருக்கல்யாணம் வைபவத்தை பார்க்கலாம் என்று கூறி ,தனது ஜடா மகுடத்தில் உள்ள கமண்டலத்தில் அடைத்து அகத்தியருக்கு ஆசி கூறி தெற்கே வழியனுப்புகிறார்.
சீர்காழியில் சூர பத்மனின் இம்சையால், தேவர்கள் மறைந்து கொண்டு சிவ வழிபாடு செய்து வந்தனர்.சிவ வழிபாடு செய்ய நந்தவனங்களுக்கு தண்ணீர் இல்லாததால் விநாயகரை வழிபட்டு அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள கங்கை நீரை பூமிக்கு வரவழைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். விநாயகர் தேவர்களின் பக்தியை கண்டு குடகு மலையில் ஆடு மேய்க்கும் இடைச்சிறுவன் வேடம் பூண்டு ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அவ்வழியே வரும் அகத்தியர் அச்சிறுவனிடம் கமண்டலத்தை கொடுத்து யான் மாலை வழிபாட்டை முடித்துவிட்டு வரும் வரை இந்த கமண்டலத்தை பூமியில் வைக்காதே என்று கேட்டுக்கொள்கிறார்.
அதற்கு அச்சிறுவன் யான் மூன்று முறை தங்களை அழைப்பேன். அதற்குள் தாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் இல்லையேல் பூமியில் வைத்து விடுவேன் என்று கூறினான். அகத்தியர் சென்ற சில வினாடிகளில், அச்சிறுவன் (விநாயகர்) மூன்று முறை அழைத்துவிட்டு பூமியில் வைத்து விடுகிறான். அகத்தியர் தனது மாலை வழிபாட்டை முடித்துவிட்டு வந்து பார்க்கும் பொழுது கமண்டலம் பூமியில் உள்ளதை அறிந்து அச்சிறுவனாக இருந்த விநாயகரை மூன்று கொட்டு கொட்டுகிறார்.
அப்போது சிறுவன் மறைந்து காக வடிவமாக கமண்டலத்தை கவிழ்த்து விடுகிறார். பின்பு விநாயகர் சுயரூப தரிசனம் தருகிறார். தரிசனத்தை கண்ட அகத்தியர் வணங்கி வழிபட்டு, ஐயனே! தங்களையா நான் கொட்டி விட்டேன்? என்று மிகவும் மனம் வருத்தப்படுகிறார். அதற்கு விநாயகர், அகத்தியரே வருந்த வேண்டாம், இப்பொழுது தாங்கள் கொட்டியது போல் என்னை வந்து வழிபடும் பக்தர்கள் என் முன் நின்று மூன்று முறை கொட்டிக்கொண்டு வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் அருளுவேன் என்று கூறுகிறார்.
யான் காகம் வடிவில் வந்து கமண்டலத்தை கவிழ்த்து இந்த ஜீவநதி உற்பத்தியானதால் 'கா' விரி என்ற பெயரில் விளங்கட்டும் என்று கூறி விநாயகர் அகத்தியருக்கு ஆசி வழங்கி மறைந்தார், என்று புராணங்களில் கூறப்படுகிறது.
இங்குள்ள விநாயகரை வழிபட மன அமைதி,மன தைரியம், நேர்மறை எண்ணங்கள் கிடைக்கப் பெறலாம். மேலும் இத்திருத்தலத்தை பற்றிய சுவாரசியமான தகவல்களை அடுத்த பதிவிலும் காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.