மாமன் அடிச்சானோ.. மல்லிகைப் பூ செண்டாலே.. கிறங்கடிக்கும் தாலாட்டுப் பாடல்கள்!

Su.tha Arivalagan
Feb 10, 2026,01:52 PM IST

- ஆ.வ. உமாதேவி 


குழந்தைகள் தாலாட்டு பாடல்கள் என்பவை குழந்தைகளை தூங்க வைக்கவும், அழுகையை நிறுத்தவும் தாய்மார்கள் பாடும் இனிமையான கிராமிய நாட்டுப்புற பாடல்கள் ஆகும். 


இதில் ஆராரோ ஆரிராரோ, நிலா நிலா ஓடி வா, மாமன் அடிச்சானோ, கண்ணே நீ தூங்கு போன்றபிரபலமான தமிழ் தாலாட்டுகள் அடங்கும். அவை குழந்தைகளின் தூக்கம், இதயத்துடிப்பு, மற்றும் மொழித் திறன்களை மேம்படுத்தி தாய்க்கும் குழந்தைக்கு இடையே பிணைப்பை உருவாக்குகின்றன. 


தால் என்றால் நாக்கு என்று பொருள். நாவை அசைத்து பாடுவதால், தாலாட்டு என பெயர் பெற்றது. இது தாய்க்கும் குழந்தைக்கு இடையே ஒரு அன்பான பிணைப்பை உருவாக்கும். 




மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ செண்டாலே

மன்னவனே அழலாமோ தேம்பித் தேம்பி அழலாமோ! 

அம்மா அடிச்சாலும் அள்ளிப்போ செண்டாலே 

ஆனந்த பொன்மணியே தேம்பித் தேம்பி அழலாமோ!

அத்தை அடித்தாரோ அரளிப்பூ செண்டாலே 

ஆடிவரும் மயில் அழகே தேம்பித் தேம்பி அழலாமோ!

பாட்டி அடித்தாரோ பாலூட்டும் கையாலே 

பட்டு வண்ண ரோசாவே தேம்பித் தேம்பி அழலாமோ! 

தாத்தா அடித்தாரோ தாழை நார்த் தலைப்பாலே

தத்தி வரும் பூ ரதமே தேம்பித் தேம்பி அழலாமோ! 

சித்தி அடிச்சாலோ செண்பகப் பூ செண்டாலே 

சின்னஞ்சிறு ஓவியமே தேம்பித் தேம்பி அழலாமோ! 

ஆரடித்தார் நீ அழ, அடிச்சாரைச் சொல்லி அழு 

ஆணையிட்டு, விளங்கிடுவோம் இனியும் அழுகை வேணாம் அப்பா.


இப்பாடலில் உறவு பெயர்களையும் பூக்களின் பெயர்களையும் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.


தாய் வழி உறவுகளையும் தந்தை வழி உறவுகளையும் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கும் விதமாய் அமைந்த அற்புத பாடல்.  உறவுகளின் அருமையை உணர்த்தும் அழகான பாடல்.  தற்காலத்தில் குழந்தைகளுக்கு தூளி ஆட்டி பாட்டுப்பாடும் வழக்கம் மருவி வருகிறது.


பால் கொடுத்து முடித்ததும் தாய் தன் தோளில் போட்டு தட்டி ஏப்பம் விட்டதும் தூளியில் போட்டு அதுவும் தாயின் நூல் சேலையில் கட்டப்பட்ட தூளியில் போட்டு தாலாட்டு பாடும் அக்கால நினைவுகள் நெஞ்சில் நீங்கா இனிமையான நினைவுகள். 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)