மறக்க முடியாத மார்ச் 4.. யார் இந்த அய்யா வைகுண்டர்?

Su.tha Arivalagan
Mar 04, 2026,11:12 AM IST

- சோ.மங்களேஸ்வரி


கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்றைய "பூவண்டன் தோப்பு" எனும் பகுதியில் மாசி மாதம் 20ஆம் தேதி பொன்னு நாடார்- வெயிலாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். 19ஆம் நூற்றாண்டில் தென் திருவிதாங்கூரில் அவதரித்த, சமூக மற்றும் ஆன்மீக சீர்திருத்தவாதியாவார் இவர். 


தன் 22 ஆம் வயதில் கடுமையான நோய்வாய்ப்பட்டு, பின்னர் குணமடைந்து, சாமி தோப்பில் தவம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. இவரது இயற்பெயர் முத்துக்குட்டி. இவர் சாதி பாகுபாடுகளை ஒழித்து, சமத்துவத்தை நிலைநாட்டவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் பாடுபட்டவர். ஆதலால் அய்யா என மக்களால் அழைக்கப்படுகின்றார். "ஏக பரன்" அதாவது ஒரே கடவுள் என்ற கொள்கையை வலியுறுத்தியவர்.


 "அகிலத்திரட்டு அம்மானை" எனும் நூலின் படி விஷ்ணுவின் அவதாரமாக இவர் போற்றப்படுகின்றார். அம்மானை என்பது ஒரு சிற்றிலக்கிய வகை.  இதில் வினா - விடைப் பாங்கில் பாடல்கள் அமையும். 1939-ல் அகிலத்திரட்டு அச்சுவடிவில் வந்துள்ளது. அதற்குமுன் ஏட்டில் இருந்தது. இன்றும் மார்கழி மாதம் அகிலத்திரட்டு அம்மானையை வாசிக்கும் நிகழ்ச்சி திருஏடு வாசிப்பு என்றே அழைக்கப்படுகிறது.




அக்காலகட்டத்தில் கீழ் ஜாதியினர் மேலாடை அணியத் தடை இருந்தது. அதை உடைத்தெரிய மக்களை ஊக்குவித்து, வழிபாட்டு உரிமையைக் கோர வலியுறுத்தியவர். "அய்யா வழி" என்ற சமய, சமூக இயக்கத்தை உருவாக்கி, மக்களுக்கு சுயமரியாதையை போதித்தவர். இவரது போதனைகள் திருவிதாங்கூர் பகுதியில் சமூக மாற்றத்திற்கு வழி வகுத்தன. 1851இல் அய்யா வைகுண்டர் மறைந்தாலும் அவரது கொள்கைகள் மக்களால் இன்றும் பின்பற்றப்படுகின்றது. 


கலியழிப்பு , தர்மயுகத் தோற்றம் என்ற இரு நோக்கங்களுக்காக வைகுண்டர் அவதரித்ததாகக் கூறப்படுகின்றது. அவருடைய போதனைகள் அகிலத்திரட்டிலே காணப்படுகின்ற போதிலும் , அவரது வாய்மொழி போதனைகள் பத்திரம், திங்கள் பதம், சாட்டு நீட்டோலை என பல புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. அய்யா வைகுண்டர் கடலில் இருந்து வெளிப்பட்ட தினமான மாசி 20ஆம் நாள் வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகின்றது .


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.


(சொ.மங்களேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்)