Tamil Short Story: அழகு கோலம்!

Su.tha Arivalagan
Jun 06, 2026,10:54 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


'அம்மா! இன்று நான் கோலம் போடட்டா?'' என்று கேட்டாள்; ஐந்து வயது தங்கம்.


“உனக்கு கோலம் போடத் தெரியுமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்; பூசத்தாயி. 


“போட்டுப் பார்த்தால் தானே தெரியும்; எனக்கு கோலம் போடத் தெரியுமா; தெரியாதா;” என்று; 'பட்'என பதில் வந்தது. பாருங்க!


முதலில் சாக்பீஸில் போட்டுக் காண்பிக்கிறேன்' என்று, ஸ்லேட்டில் சாக்பீஸால் தங்கம் வரைந்து காண்பிக்க; அசந்து போய் நின்றாள் பூசத்தாயி.




“மண் வாசலில் இதே கோலத்தைப் போடு; பார்க்கலாம்” என்று சொல்ல; கோலப்பொடி மரவையுடன் வாசலில் இறங்கினாள் தங்கம்.


அழகாக மூன்று வரிசையில், வரிசைக்கு மூன்றாக புள்ளிகளை ஈர்க்குச்சியால் குத்தினாள். கோல மாவினால் புள்ளிகளை இட்டாள். கோலமிட ஆரம்பித்தாள். கோலப்பொடியை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே எடுக்க கோலப்பொடி விரல்களிலிருந்து மாரியாய் கொட்டியது


பூசத்தாயி,” தங்கம்! அப்படியில்லை. கட்டைவிரலாலும் ஆள்காட்டி விரலாலும் ஒரு சிமிட்டா எடுத்துக் கொண்டு கட்டை விரலை மெதுவாக முன்னுக்கு நகர்த்திக் கொண்டே கோல வரியின் வடிவமைப்பில் வளைத்துக் கொண்டே போனால் கோலம் தானே போட்டுக் கொள்ளும்' என்றாள் 


தங்கம், தன் அம்மா சொல்படி செய்ய முயன்றாலும்; சில இடத்தில் பட்டையாகவும், மற்றும் சில இடத்தில் மிகவும் சன்னமாகவும் இருந்தாலும்; அந்த சிறு கோலத்தை அந்த ஐந்து வயது குழந்தை அழகாக போட்டு முடித்தாள்.


அழகான அந்தக் கோலத்தில் தங்கத்தின் வீட்டு வாசல், இன்னும் அழகாக மிளிர்ந்தது.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)