அழாதே அனாமிகா.. ந. தீபலட்சுமியின் திரில் தொடர்!
- ந. தீபலட்சுமி
அப்பப்பா...... என்ன பரபரப்பு......
புற்றீசல் போல பரபரவென மக்கள்....
அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர்.
ஏனிந்த வேகம் .....
யாரைப் பார்க்க இந்த வேகம்......
ஏனிந்த பரபரப்பு......
ஏனிந்த ஆர்ப்பரிப்பு ......
இதற்கான பதில்களை அவர்களே அறிவர்.
கண் திறக்க மனம் இல்லாமல் சிணுங்கி, சிணுங்கி, புரண்டு, புரண்டு பார்த்து, ஒருவழியாக மெல்ல கண் மலர்ந்து புன்முறுவலுடன் மெதுவாக எட்டிப் பார்த்தது, சூரியன்.
பச்சை பட்டுத்தாவணி உடுத்தி, தலையில் வெள்ளி கிரீடம் வைத்தது போல் அங்கு பரந்து விரிந்து கிடந்த பச்சைப் புல்வெளியின் தலையின் மீது ஒய்யாரமாக அமர்ந்திருந்தது பனித்துளி.
சூரியனைப் பார்த்ததும் வெட்கப்பட்டு தலை கவிழ்ந்து ,"இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ்", என கேட்பது போல் இருந்தது அவளுக்கு.
அவள்....அனாமிகா.
பெயருக்கு ஏற்றாற் போல், தனியாக, யாருமற்றவளாக இருந்த அவளை, அரவணைத்து, அன்பு மழையில் அவளை நனைத்துக் கொண்டிருந்தனர் அருண் ராஜ் தம்பதியர்.
பால்கனியில் இருந்து தன் கண்களில் பட்டவற்றையெல்லாம் தன் கற்பனை குதிரையில் அமரச் செய்து முடுக்கிவிட்டு ஓடவிட்டுக் கொண்டிருந்தாள் அனாமிகா.
"அனு.... டிபன் சாப்பிடலாம்,வாம்மா"
என அம்மா அழைத்ததும் அவளிற்குள்ளும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.
"எட்டு மணி தானேம்மா ஆகுது அதுக்குள்ள சாப்பிட கூப்பிடுறீங்களே" என இவள் பால்கனியில் இருந்து பதில் கொடுக்க....
"இங்க பாரும்மா.. டயத்துக்கு சாப்பிட்டாதான் ஹெல்தியா இருக்க முடியும், சரியா ? வா.... போய் சாப்பிடலாம்," எனக் கூறிக் கொண்டே மாடிப்படி ஏறி வந்தாள் ஜமுனா.
அளவெடுத்து செதுக்கியது போன்ற முகம், கள்ளம் கபடம் இல்லாத பளீச் சிரிப்பு, கூர்மையான மூக்கு, அதில் ஒளிரும் ஒற்றை கல் மூக்குத்தி அதனுள் சூரிய ஒளி ஊடுருவி தன்னுள் இருக்கும் ஏழு நிறங்களையும் ஒளிரச் செய்தது.
அப்பப்பா..... என்ன ஒரு அழகு.
உண்மையில் அழகு தேவதை தான்....என் மகள் ...என நினைத்து ரசித்து கொண்டிருந்த ஜமுனாவைப் பார்த்து கண் சிமிட்டியது சூரியன்.
"ஹலோ....ஹலோ....அம்மா.....அம்மா....."
"ஆங்.....சாரிடா...கொஞ்சம் அசந்துட்டேன்,சரி போகலாமா" எனக் கேட்ட அவளின் கண்களில் கண்ணீர் துளிகள் விழலாமா வேண்டாமா? என கேட்டுக்கொண்டு முட்டி நின்றது.
" மம்மி, ஆர் யூ கிரையிங்?"
" நோ.... நோ..... பேபி.. கண்ணுல தூசி விழுந்துடுச்சு, அதான்.... சரி வா போகலாம் அப்பா நமக்காக கீழே காத்திருக்கிறார்" என சொல்லிக்கொண்டே அனாமிகா அமர்ந்திருந்த வீல்சேரை தள்ளினாள் ஜமுனா.
பத்து வயது அனாமிகா...
பல கோடி சொத்திற்கு அதிபதியான ரஞ்சித், மாலாவின் ஒரே மகள்.
அன்று அவளுடைய பிறந்தநாள்.
வழக்கம்போல் மகளின் பிறந்தநாளை தானும் தன் மனைவியும் வளர்ந்த, தன் பகுதியில் இருக்கும்" கருணை இல்லத்தில்" கொண்டாடிவிட்டு தன் குடும்பத்துடன் கோவிலுக்குப் புறப்பட்டான் ரஞ்சித்.
அழகான பிங்க் நிற கவுனில் பார்பி பொம்மை போல் இருந்த அனாமிகாவை வாரி அணைத்து முத்தமிட்டு பின் இருக்கையில் அமர்த்தினாள் மாலா.
பின்பு வழக்கம்போல் முன் இருக்கையில் தன் கணவனின் அருகில் அமர்ந்து முன்னே ஓடிக்கொண்டிருக்கும் சாலையை ரசித்துக்கொண்டே வந்தாள் அவள்.
இதயத்தை வருடும் இளையராஜா பாடல்கள் மெல்ல ஒலித்துக் கொண்டிருக்க, பின் சீட்டில் அமர்ந்திருந்த அனாமிகா அம்மாவை ரசித்துக் கொண்டிருந்தாள்.
மனைவியை ஒரு கண்ணிலும் மகளை மறு கண்ணிலும் கவனித்து வந்த ரஞ்சித் எதிரில் வந்த லாரியை கவனிக்க தவறியதால் ஏற்பட்ட விளைவு...
'டமார்......'என்ற பெருத்த சத்தத்துடன் இடித்து காற்றில் பறந்து பல குட்டி கரணங்கள் போட்டு ஒரு மூலையில் போய் விழுந்தது அவர்கள் பயணம் செய்த கார்.
(தொடரும்)