ஒரு சிறிய உதவி… ஒரு பெரிய மாற்றம் - கடைசி பெஞ்சில் இருந்த பெண் (5)

Nov 02, 2026,11:19 AM IST

- கவிஞர் கே.பிரியங்கா


அடுத்த நாள் காலையில் பிரியா அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு சாரதாவைச் சந்தித்தாள்.


சாரதா, உன்னுடைய அம்மா இந்தக் கடிதத்தை என் அம்மாவுக்கு எழுதியிருக்கிறார். ஆனால் இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.”


சாரதா கடிதத்தைப் படித்தாள். அவளுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.


"என் அம்மா எப்போதும் ஒரு விஷயம் சொல்வாங்க, பிரியா. நம்முடைய வாழ்க்கையில் யாராவது நமக்கு உதவினால், அந்த உதவியை நாமும் ஒருநாள் இன்னொருவருக்குச் செய்ய வேண்டும் என்று".


சாரதா தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். குழந்தைகள் இல்லத்தில் இருந்தபோது, பல நாட்கள் அவள் தனியாக அழுதிருக்கிறாள். ஆனால் பள்ளியில் பிரியா கொடுத்த டிபன் பாக்ஸை நினைத்துக்கொண்டு தைரியமாக இருந்திருக்கிறாள்.அவள் வளர்ந்து செவிலியராக ஆன பிறகும் அந்த நினைவை மறக்கவில்லை.




அவள் வேலை பார்த்த மருத்துவமனையில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி தேவைப்படும்போது தன்னால்  முடிந்ததைச் செய்வாள். ஒருநாள் அவள் ஒரு சிறிய குழந்தையைப் பார்த்தாள். அந்தக் குழந்தை மருத்துவமனையில் தனியாக இருந்தது. யாரும் அதைப் பார்க்க வரவில்லை. உணவு கொடுத்தாலும் சாப்பிட மறுத்தது.


சாரதா அதன் அருகில் அமர்ந்து பேசினாள்.


“கண்ணா, உனக்குப் பசிக்கலையா?”


குழந்தை தலையசைத்தது.


“உனக்கு யாரும் இல்லையா?”


அந்தக் குழந்தை அழ ஆரம்பித்தது. அப்போது சாரதாவுக்கு தன்னுடைய சிறுவயது நினைவுக்கு வந்தது. அவள் அந்தக் குழந்தையைத் தனியாக விடவில்லை. தினமும் அதனுடன் பேசினாள். உணவு ஊட்டினாள். தைரியம் கொடுத்தாள்.

சில நாட்களுக்குப் பிறகு அந்தக் குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. அப்போது சாரதாவிற்கு பிரியா கொடுத்த டிபன் பாக்ஸ் நினைவுக்கு வந்தது.


அன்று பிரியா கொடுத்த உணவு, இன்று சாரதாவின் வழியாக இன்னொரு குழந்தைக்குக் கிடைத்தது. இதுதான் அந்தச் சிறிய உதவியின் உண்மையான மதிப்பு.பிரியா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். 


சாரதா, அப்போ உன்னுடைய வாழ்க்கையை நான் மாற்றிட்டேனா?


சாரதா சிரித்தாள். நீ மட்டும் என் வாழ்க்கையை மாற்றவில்லை. உன்னுடைய அன்பு என்னுடைய வாழ்க்கையை மாற்ற உதவியது. அதற்குப் பிறகு நான் எடுத்த முடிவுகள்தான் என்னை இங்கே கொண்டு வந்தன. அந்த வார்த்தைகள் ப்ரியாவுக்குப் புதிய புரிதலைக் கொடுத்தன.


ஒருவருக்கு உதவி செய்வது என்பது அவர்களுடைய எல்லாப் பிரச்சினைகளையும் நாமே தீர்ப்பது அல்ல.


சில நேரங்களில் அவர்கள் மீண்டும் எழுந்து நிற்பதற்கான முதல் நம்பிக்கையைக் கொடுப்பதுதான். அன்றிலிருந்து பிரியாவும் சாரதாவும் சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ ஆரம்பித்தார்கள். பிரியா தன்னுடைய அலுவலகத்தில் நண்பர்களிடம் பேசினாள். பழைய புத்தகங்கள், உடைகள், பள்ளிப் பொருட்கள் ஆகியவற்றைச் சேகரித்தாள். சாரதா குழந்தைகளுடன் நேரம் செலவிட்டாள். பிரியாவின் அம்மாவும் அவர்களுடன் இணைந்துகொண்டார்.


அன்று பிரியா  படித்த பழைய பள்ளியில் ஒரு சிறிய நிகழ்ச்சி நடைபெற்றது. பல வருடங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளிக்குள் பிரியா காலடி எடுத்து வைத்தாள். அவளுடன் சாரதாவும் வந்திருந்தாள். பள்ளியின் பழைய வகுப்பறையைப் பார்த்ததும் பிரியாவுக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்தன. குறிப்பாக, கடைசி பெஞ்சில் அமைதியாக அமர்ந்திருந்த சாரதாவின் முகம் அவள் கண்முன்னே தோன்றியது.


நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். "இந்தப் பள்ளியில் படித்த இரண்டு மாணவிகள் இன்று பல குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நம் பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்."


அந்த இரண்டு மாணவிகளும் ப்ரியாவும் சாரதாவும் தான்.. சாரதா மைக்கைப் பிடித்துப் பேசத் தொடங்கினாள்.


நான் சிறிய வயதில் மிகவும் கஷ்டப்பட்டேன். சில நாட்களில் சாப்பிடக்கூட உணவு இருக்காது. அப்போது என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு சிறுமி, தன்னுடைய மதிய உணவை என்னுடன் பகிர்ந்து கொண்டாள். அவளுக்கு அது ஒரு சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம். ஆனால், எனக்கு அது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அன்பு." 


அவள் பிரியாயைப் பார்த்தாள்.


அன்று அவள் பகிர்ந்த உணவு என் பசியை மட்டுமல்ல… என் மனதையும் நிறைத்தது. ஒருநாள் நானும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று அன்றுதான் முடிவு செய்தேன்."


அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்.  பிரியா சாரதாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். பிறகு இருவரும் சேர்ந்து, பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி உதவியும் மதிய உணவும் வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார்கள்.


"பிரியா, உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்" என்றாள். என்ன சாரதா?"


"நான் இத்தனை வருடங்களாக உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன். உனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல… உன்னிடம் ஒரு விஷயத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும்." என்று சொல்லி ஒரு பழைய டைரியை பிரியாவிடம் கொடுத்தாள். அதைத் திறந்த பிரியாவுக்கு ஆச்சரியம்!


அந்த டைரியில் அவளுடைய பள்ளி நாட்களின் நினைவுகள் இருந்தன. ஒவ்வொரு பக்கத்திலும் சாரதா ப்ரியாவைப் பற்றி எழுதியிருந்தாள். கடைசிப் பக்கத்தில் மட்டும் ஒரு வரி இருந்தது: "எனக்கு அன்று உணவு கொடுத்தவள் பிரியா. ஆனால், வாழ்க்கையில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தவளும் அவள்தான்."


பிரியாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அப்போது சாரதா சொன்னாள்:


"பிரியா, அன்று நீ எனக்காகச் செய்த உதவியை நான் மறக்கவில்லை. அதனால்தான் இன்று என்னால் முடிந்தவரை பலருக்கு உதவி செய்து வருகிறேன். ஆனால், இந்த நல்ல மாற்றத்திற்கான முதல் காரணம் நீதான்."


பிரியா அந்த டைரியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். இருவரும் பள்ளியை விட்டு வெளியே வந்தார்கள். வாசலில் இருந்த பள்ளியின் பெயர்ப்பலகையைப் பார்த்த பிரியா மெதுவாகச் சிரித்தாள்.


அன்று அந்தப் பள்ளியில் அவர்கள் படித்த பாடங்கள் மறந்திருக்கலாம். தேர்வு மதிப்பெண்கள் மறந்திருக்கலாம். ஆனால் ஒரு மதிய உணவைப் பகிர்ந்த அந்தச் சிறிய செயல் மட்டும் காலத்தைக் கடந்தும் உயிரோடு இருந்தது.


கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த சாரதா அன்று தனியாக இருந்தாள். ஆனால் இன்று அவளுடைய அன்பால் பலரின் வாழ்க்கையில் ஒரு இடம் கிடைத்திருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கையில் நாம் எவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறோம் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம்… ஆனால் நாம் செய்த ஒரு சிறிய நன்மை, அவர்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய நினைவாக இருக்கலாம்.


முற்றும்


(கே.பிரியங்கா, M.Sc., M.Ed. படித்தவர். 2019ல் ஜெட்லி உலக சாதனை புத்தகத்தின் "சமூகப் பிரச்சினைகளும் தீர்வுகளும்" தொடர் சொற்பொழிவு. 2019ல் ஜெயா தொலைக்காட்சியின் "உன்னை அறிந்தால்" நிகழ்ச்சியில் பங்கேற்பு. 2019ல் சென்னை விமான நிலைய ஆணையத்தின் "மெகா சுவர் ஓவியப் போட்டியில் பங்கேற்பாளர். 2021ம் ஆண்டு, அசிஸ்ட் உலக சாதனையின் "ஆசிரியர்களின் பங்கு" இணையவழி கருத்தரங்கில் பங்கேற்பாளர். அதே ஆண்டில் அகில இந்திய சாதனை புத்தகத்தின் "145 மணி நேரத் தமிழ் இணையவழி விவாதத்தில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்