செட்டிநாடு ரெசிப்பி.. தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட்.. தித்திக்கும் கந்தரப்பம்

Nov 02, 2026,10:27 AM IST

- மணிமா


செட்டிநாட்டு அடுப்படியின் ரெசிபிகளுக்கு அமோக ஆதரவும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் அன்பு உள்ளங்களே உங்கள் அனைவருக்கும் அன்புடன் வணக்கம் கூறுவது உங்கள் - மணிமா!


தித்திக்கும் தீபாவளி வந்துவிட்டது. அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்


தீபாவளி ஸ்பெஷல் ஆக தீபாவளி அன்று செட்டிநாட்டின் அனைத்து வீடுகளிலும் சுடப்படும் தித்திப்பான கந்தரப்பம் குறித்து தான் இன்று பார்க்க போகிறோம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மிக எளிதாக செய்யலாம். மாவு அரைத்தவுடன் உடனே பணியாரமாக ஊற்றி சாப்பிடலாம். புளிக்க வைக்கத் தேவையில்லை. தித்திப்பானது தெவிட்டாதது. வாருங்கள் பார்க்கலாம்


தேவையான பொருட்கள்




பச்சரிசி ஒரு கப் 250 மில்லி கிராம்

உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன்

வெல்லம்.கால் கப் 100 மில்லி கிராம்

ஏலத்தூள் ஒரு ஸ்பூன்

தேங்காய் துருவல் கால் கப்

ஒரு சிட்டிகை உப்பு

பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்


அரிசி உளுந்தை அளப்பதற்கு மிகத் துல்லியமான ஒரு வழி சொல்லுகிறேன்


ஒரு பாத்திரத்தை கீழே வைத்துக் கொண்டு அதன் மேல் நீங்கள் எடுக்கப் போகும் கப் அல்லது ஆழாக்கு அல்லது டம்ளர் ஏதோ ஒன்று அதில் வையுங்கள். அதில் பச்சரிசியை நிரப்புங்கள் (குவியலாக வேண்டாம் ஒரு விரலால் வழித்து விட்டு சமமாக எடுத்துக் கொள்ளவும்).


அதற்கு மேல் ஒரு ஸ்பூன் அல்லது ஒன்னரை ஸ்பூன் அளவு உளுந்து வைக்கவும். அதன் மேல் எவ்வளவு குவியலாக நிற்கிறதோ அதுதான் சரியான அளவு. இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.


இந்த அரிசி உளுந்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு மூன்று முறை நன்கு கழுவி விட்டு ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் ஊற விடவும்.


ஊறியதை மிக்ஸியில் விட்டு நைசாக அரைக்கவும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரைக்கலாம். நைசாக அரைத்த பின் அதற்குள் துருவிய வெல்லம் துருவிய தேங்காய் ஏலத்தூள் சிட்டிகை உப்பு இவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். (அரைத்த மாவு, இட்லி மாவை விட தளர்வாக இருக்க வேண்டும். தோசை மாவை விட சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்)


அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு சூடான பின் தீயை மிதமாக வைத்து மாவை நன்கு கலக்கி விட்டு ஒரு சிறிய கரண்டியால் எடுத்து எண்ணெய்க்குள் ஊற்றவும். 




எண்ணெய் வடிக்கும் அரி கரண்டியை வைத்து அதன் மேல் சிறிது சிறிது எண்ணெயை எடுத்து ஊற்றினால் லேசாக உப்பி வரும். பின்பு திருப்பி விடவும். ஓரம் அழகாக நெளி நெளியாக வரும். இப்போது எண்ணெய்யை வடித்து விட்டு ஒரு தட்டில் வைக்கவும். இதுபோல் மாவை ஒவ்வொரு முறையும் நன்கு கலக்கி விட்டு ஒவ்வொன்றாக எண்ணெயில் ஊற்றி எடுக்கவும் (உளுந்து வடை போல் நான்கைந்து போட முடியாது, ஒவ்வொன்றாகத்தான் போட வேண்டும்).


அரைத்த மாவு ரொம்ப கெட்டியாக இருந்தால் இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு கலக்கி கொள்ளலாம். அரைத்த மாவு தண்ணியாக இருந்தால் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலக்கி கொள்ளலாம்.


அவ்வளவுதாங்க. சுவையான கந்தரப்பம் தயார்.


தேங்காய் ஏலக்காய் மணத்தோடுஅளவான இனிப்போடு சாப்பிட சாப்பிட தெவிட்டாது.  பஞ்சு போல் இருக்கும். சூடாகவும், ஆறினாலும் நன்றாக இருக்கும். நமக்கு தேவையான அளவு சுட்டுவிட்டு மீதி மாவை பிரிட்ஜுக்குள்ள வைத்து தேவைப்படும்போது சுட்டுக் கொள்ளலாம்.


நாளைக்கு தேவை என்றால் முதல் நாளே தயார் செய்தும் பிரிட்ஜுக்குள் வைத்துக் கொள்ளலாம். திரும்பத் திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான கந்தரப்பம் ரெடி. 


இந்த தீபாவளிக்கு அனைவரும் செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் பகிர்ந்து குடும்பத்துடன் குதூகலமாக கந்தரப்பம் சாப்பிட்டு மகிழுங்கள். டேஸ்ட் எப்படி இருந்தது என்று சொல்வீர்கள் என்றும் எதிர்நோக்குகிறேன்.


நீங்கள் தரும் உற்சாகத்திற்கும் நீங்கள்தரும் வாழ்த்திற்கும் மீண்டும் நன்றி கூறி அடுத்த ஒரு ரெசிபியுடன் சந்திக்கிறேன்.


என்றென்றும் அன்புடன் உங்கள் -மணிமா!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்