வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
- ஸ்வர்ணலட்சுமி
வாழை மரத்தின் சிறப்புகள், பழமொழிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி இத்தலைப்பில் காண்போம்.
"வாழை வாழவைக்கும் "
இந்த பழமொழி பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் ஆரோக்கிய உணவுப் பழக்கங்களிலும் பெரிதும் பேசப்படும் ஒரு பழமொழி ஆகும்.
வாழை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் வாழை இலை, காய், பழம், தண்டு,பூ, நார், வாழைப்பட்டை என அனைத்தும் மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தந்து ஆரோக்கியமான வாழ்வை தருகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, செரிமானத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் வாழை மரத்தின் பாகங்கள் பெரிதும் உதவுகின்றன. ஒவ்வொரு பாகத்தின் பயன்பாடுகள் பற்றி சிறு தகவல்களை பார்ப்போம்..
வாழை இலை:
கல்யாண விருந்துகளில், பூஜைகளில் மற்றும் விசேஷ நாட்களில் உணவு பரிமாறுவதற்கு வாழை இலை மிகவும் விசேஷமானது. வாழை இலையில் உணவு உண்பதாலே கண்ணுக்கு குளிர்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல் உணவின் ருசியும் அதிகரிக்கும்.
வாழைப்பழம்:
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் வீடுகளில் நடைபெறும் விசேஷ நாட்களிலும், பூஜைகளிலும் வெற்றிலை &பாக்கு,பழம் என்பது பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு முதலில் தருவது பாலும்& பழமும் தான். அதில் வாழைப்பழம் முக்கியமான இடத்தை பெறுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல் ஏற்படாமல் தடுத்து நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது வாழைப்பழம். பல வகையான வாழைப்பழங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
வாழைப்பூ:
சமையலில் குருமா, தொக்கு,வாழைப்பூவடை, பொடிமாஸ், பொரியல், வாழைப்பூ கட்லெட் என பல வகையான உணவுகள் சமைக்க பயன்படுகிறது. வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு சத்து உடலுக்கு அதீத நன்மை தருகிறது. இதனை பாசிப்பருப்பு சேர்த்து நன்றாக கடைந்து நெய் விட்டு சாப்பிட உடலுக்கு அதீத நன்மை பயக்கும். வயிற்றுப்புண் ஆற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. வாழைப்பூ நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவு. வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
வாழைக்காய்:
வாழைக்காய் என்றாலே சூடான பஜ்ஜி தான் அனைவர் நினைவிலும் வரும்.நன்றாக ஜோ வென மழை பெய்யும் பொழுது சூடான வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட அடடே.. என்ன ருசி.. வாழைக்காய் பொரியல், பொடி மாஸ்,பஜ்ஜி, வாழைக்காய் சிப்ஸ், வாழைக்காய் சில்லி என பல வகையான உணவுகள் தயாரிக்க உதவுகிறது.
வாழைநார் :
உணவு பரிமாறவும் சமையலுக்கும் பயன்படும் மற்ற வாழை மரத்தின் பாகங்கள் பயன்படுவதை காட்டிலும் தற்போது ட்ரெண்டிங்காக இருப்பது வாழைநார் பட்டுப்புடவை. வாழை நாரிலிருந்து புடவை தயாரிக்கப்பட்டு பல வண்ணங்களில் பல டிசைன்களில் அனைவரையும் கண்கவரும் வகைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழைநார் பட்டுப்புடவை உடுத்தும் பொழுது உடலுக்கு நல்ல குளிர்ச்சி தருகிறது. பெரும்பான்மையான மகளிர் இந்த வாழைநார் பட்டுப்புடவைகளை விரும்பி வாங்கி உடுத்தி வருகின்றனர்.
வாழைத்தண்டு:
வாழைத்தண்டு ஜூஸ் இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரக கல்லையே கரைக்கும் ஆற்றல் இதனுள் அடக்கம். வாழைத்தண்டு, தேங்காய் துருவல், பாசிப்பருப்புடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட சிறந்த நார்ச்சத்து நிறைந்த உணவாக உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தருகிறது.
வாழைப்பட்டை :
வாழைமரம் காற்றில் இருக்கும் துர்நாற்றத்தை போக்கிவிடும்.மேலும், வாழை பட்டைச்சாறு விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. தீப்புண் ஏற்பட்டால் வாழை பட்டை மற்றும் இலையில் வைத்து வைத்தியம் செய்வார்கள். எனவே பத்து பேர் ஒன்றாக கூடும் இடத்தில் அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்தால் உதவுவதற்காகவே வாழை மரத்தை கட்டி வைத்தனர்.
திருமணம், வீடு கிரிஹப்பிரவேசம் மற்றும் கோவில் திருவிழாக்கள் என பல சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் கும்பல் அதிகமாக இருக்கும். அதனால், கரியமில வாயு என்று அசுத்தமான காற்று உண்டாகி சுகாதாரக் கேடு ஏற்படும். குலை தள்ளிய வாழைமரம் வெட்டப்பட்ட பிறகும் அதன் ஆயுள் தன்மை நீடிப்பதால் ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு அந்த கரியமில வாயுவை உட்கொண்டு சுத்தமான பிராணவாயுவை மட்டும் வெளியிடுகிறது. சுத்தமான காற்று சுவாசிப்பதால் மக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுக்கிறது. இதற்காகவே வாழைமரம் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்டப்படுகிறது.
வாழை மரத்தில் இவ்வளவு நன்மைகளா!.. இதனாலே தான் "வாழை வாழ வைக்கும்" என்ற பழமொழி நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் போலும்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.