ஐபிஎல் ஒளிபரப்பிற்கு வங்கதேச அரசு அதிரடித் தடை
டாக்கா : ஐபிஎல் 2026 தொடருக்கான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்த நாட்டு அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் முஸ்தாபிசுர் ரஹ்மானை 9.20 கோடி ரூபாய்க்கு கோல்கத்தா அணி வாங்கியது. ஆனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அறிவுறுத்தலின் பேரில், கோல்கத்தா அணி அவரை நீக்குவதாக அறிவித்தது. இதற்கு வங்கதேச அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், முஸ்தாபிசுரை நீக்கியதற்கு பிசிசிஐ முறையான அல்லது தர்க்கரீதியான காரணங்களை வழங்கவில்லை என்று வங்கதேச அரசு கூறியுள்ளது.
பிசிசிஐ.,யின் இந்த முடிவு வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் உணர்வுகளை மதித்தும், நாட்டின் நலன் கருதியும் ஐபிஎல் தொடர்பான அனைத்து ஒளிபரப்புகள் மற்றும் விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வங்கதேச தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB), இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடத் தங்கள் அணியை அனுப்பப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. அதற்குப் பதிலாக, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, வங்கதேசம் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் இதுகுறித்துக் கூறுகையில், "எந்தச் சூழ்நிலையிலும் வங்கதேச கிரிக்கெட்டையோ அல்லது எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் காலம் முடிந்துவிட்டது" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தடையானது அடுத்த உத்தரவு வரும் வரை வங்கதேசம் முழுவதும் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.