வலிகளில் வாழ்க்கை...!
Jan 24, 2026,01:13 PM IST
- பா.பானுமதி
நாட்கள் எல்லாம்
வாட்களாய் வெட்ட
ஆட்கள் எல்லாம்
முட்களாய் குத்த
சுற்றி இருப்பவை எல்லாம்
சுத்திகளாக
பற்றி இருப்பவை எல்லாம்
கோடாரியாக
மாற்றவும் முடியாமல்
தேற்றவும் தெரியாமல்
ஏற்றியும் கொள்ளாமல்
ஆற்றவும் அறியாமல்
தினம் தினம் திருப்பங்கள்
திருக
களை இழந்த சிலைகளாய்
விலை கொள்ள நிலை
ஓடி ஓடி பாதங்கள்
உஷ்ணம் கொட்ட
ஆடி அலைந்த தோள்கள்
பூசனம் பிடிக்க
தேடி அலைந்தது என்னவோ
தென்படவில்லை
வாடி இருப்பது அறியாமை
ஓடிக் கொண்டிருந்தால் புரியாமை
நாடினாலும் சாடினாலும்
விளைவுகள் விளங்காதவை
அதிகமான அன்பும் எதிர்பார்ப்பில்லாத பண்பும்
அடிபட்டு அடங்கும்
அளவுகள் மாறினாலும்
பிளவுகள் உண்டாகும்
சித்தன் செயல்கள் முறையானது
ஆனால் அது...
அனுபவம் கிடைக்கும் வரை ஆடி
அடங்கும் வரை புரியாதது
பின்னர்
நெஞ்சை விட்டு அகலாதது
வாழ்க்கையின் பாதை புதிர் தான்
வலிமிக்கது தான்..!