எந்த நிறமானாலும்.. ஏற்புடையதே.. இதயத்தில் தெளிவு இருந்தால்!
Feb 06, 2026,12:40 PM IST
- பா.பானுமதி
நிறம் நிரந்தரம் இல்லை தான்
சிவந்தவன் நிழல் கருப்பு
கருத்தவன் குருதியோ சிவப்பு
உயர்ந்தவன் உள்ளமோ வெண்மை
உண்மையற்றவன் உயர்வு கருமை
வாழ்வில் கிடைக்கும் நல் உறவுகளே நல் நிறம்
வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் வேலையே
நிறத்தை மீட்டும் சுரம்
நம்மிடம் இருக்கும் பணமே
சமூகத்தில் தரும் நிறத்தில் தரம்
நம்முடன் பிறந்த குணமே என்றும்
நிறத்தில் நிம்மதி தரும் நிரந்தரம்
வெளுத்த பகலில் உழைத்தாலும்
கருத்த இரவிலே உறக்கம் கொண்டாலே
அடுத்த நாள் முதல் வாழ்க்கை வண்டி
பகலை காட்டிலும் இரவே ரம்மியமானது
இரவைக் காட்டிலும் பகலே
பயம் நீக்கி பளபளப்பது
எந்த நிறம் ஆனாலும் ஏற்புடையது தான்
இதயத்தில் தெளிவு இருந்தால்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)