அது என்ன....!

Su.tha Arivalagan
Oct 01, 2026,10:32 AM IST

- பா.பானுமதி


வெட்ட வெட்ட தளிரும் 

குட்ட குட்ட மலரும் 

பட்டுப் போனாலும் துளிரும் 

எட்டி போனாலும் பிடிக்கும் 


தட்டி விட்டாலும் ஒட்டிக் கொள்ளும் 

கட்டி போட்டாலும் அடங்காது 

விட்டு போனாலும் விடாது

விரட்டி அடித்தாலும் விலகாது


குணம் கெட்டுப் போகும் 

மனம் விட்டுப் போகும்

சினம் தொட்டு போனால் 

சிரிப்பு சிதறிப் போகும் 




உறவு பதறி போகும் 

கோபத்தில் கொண்டாட்டம் இல்லை 

அது  திண்டாட்டத்தின் தொல்லை 

உண்டாக்குமே வெறுப்பின் எல்லை


துறக்க முயன்றாலும் துடிக்க செய்யும்  

சினம் கொண்டோரை கொன்று 

அவர் குணங்களை வென்று 

நல்ல மனங்களை தின்று 


நாளும் நடை போடும் முரட்டுத்தனமாய் 

சீற்றம் என்பது பெரும் குற்றமாய் கொள்ளப்படுகிறது ஆதிகாலம் முதல் 

சுற்றத்தை பொடியாக்கி கொற்றத்தை வெடி போட்டு தகர்த்து 

நாற்றத்தை நாளும் பரப்பவும் 


தூள் பறந்த துரியோதனன் கோபத்தால் தலைமுறை சாய்ந்தது

வேல் போன்ற ராவணன் கோபத்தால் சரித்திரம் தீய்ந்தது 

கோபத்தில் கனல் தீர்ந்த பின்னும் அனலாய் வாட்டி வதக்கும் 

அடங்காத சினத்தால் ஆளுமை தேயும் 


சீர்தூக்கி பார்த்த பின்னும் நஷ்ட கணக்கு காட்டும் 

சினத்தோடு சேராதே 

கோபத்தை கொண்டாடாதே 

ஆத்திரத்தோடு ஆடாதே


அமைதி கொள் ஆனந்தம் கிடைக்கும்!

 

(பா. பானுமதி, ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், மதுரை)