நான் யார்....?
- பா.பானுமதி
நானிலத்தில் பேரா...
பூ நிலத்தில் வேறா...
இறைவன் தந்த சீரா...
பெற்றோர்க்கு கிடைத்த பேரா....
இயங்கி வரும் தேரா...
இயக்கம் நின்றிடும் நீரா...
ஞானம் இல்லா ஊரா...
கானம் பாடும் ஆறா...
உடலக்குள் இருக்கும் உயிரா...
உயிரில் கலந்த உறவா...
உறவில் உண்டான பயிரா...
பயிரில் விளையும் உணவா...
பெயர் இல்லாவிட்டால் அறிவா...
அறிவில் ஏற்பட்ட தெளிவா...
தெளிவிற்கு பின் வரும் குழப்பமா...
குழப்பத்தில் ஏதேனும் திருப்பமா...
ஆய்வு செய்யும் அற்பமா...
அற்பம் என்பதே சொற்பமா...
பேசும் சிற்பமா...
பேசாவிட்டால் விசும்புமா...
இறைவனை தேடும் இசையா...
இயல்பறியா இரைச்சலா...
வாழ்க்கை கடல் ஆடும் துரும்பா...
வசப்படுத்த பாடும் அரும்பா...
துரு பிடிக்காத இரும்பா...
தூணில் ஏறும் எறும்பா...
அலசினால் அகப்படவில்லை
உரசினால் ஒட்டவில்லை
உடலா...ஊனா... உயிரா..
மனமா...குணமா...இனமா..
தேடினேன் தென்படவில்லை
அலசினேன் அகப்படவில்லை...
ஆராய்ந்தேன் பிடிபடவில்லை..
அலறினேன் அசையவில்லை...
ஆரம்பமா...முடிவா... அதுவும் தெரியவில்லை...
இது சித்தன் செயலா..
இல்லை பித்தன் பணியா...
எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து எதற்காக வாழ்ந்து...
தெரிந்தாலும்... தெளிந்தாலும்... மறந்தாலும்...
காலம் மட்டும் கடந்து கொண்டே இருக்கிறது...
வினாவிற்கு விடை சொல்வார் யார்...?
விடை இல்லா விடுகதை தான் வாழ்க்கையா...
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)