சென்னை ரிப்பன் பில்டிங் அருகில் உள்ள விக்டோரியா ஹால்.. ஒன்டே பிக்னிக்குக்கு சிறந்த ஸ்பாட்!
- பாரதிராஜன்
புகழ்பெற்ற ரிப்பன் பில்டிங் அருகில் அமைந்துள்ளது விக்டோியா ஹால். சுமார் 32.62 கோடி ரூபாய் செலவில், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு, 23.12.2025 முதல் பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒருநாள் நான், என் சகோதரன் மற்றும் சகோதரி மகனுடன் சென்று பார்க்க முடிவு செய்தோம். என் சகோதரி மகன் முன்பதிவு மூலம் பதிவு செய்திருந்தார். அதன்படி மாலை சரியாக 5.00 மணிக்கு சென்று சுற்றிப் பார்த்தோம்.
கைபேசியில் வந்திருந்த அனுமதிச் சீட்டை ஸ்கேன் செய்த பிறகு, கையில் ஒரு பட்டை கட்டி உள்ளே அனுமதித்தனர்.
புதுப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் காட்சிப் பொருட்கள் மூலம் நமக்குத் தெரிந்த விஷயங்களை விட தெரியாத பல தகவல்களை அறிய முடிந்தது. இங்குதான் சபாபதி, ரத்னாவளி போன்ற படங்கள் முதலில் நாடகங்களாக அரங்கேறியுள்ளன என்பது தெரிந்தது.
திரை நட்சத்திரங்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் உள்ளிட்ட பலர் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன. அதேபோல் விளையாட்டு வீரர்களான பாஸ்கரன், டென்னிஸ் சகோதரர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி சென்னை வந்த நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.
மகாகவி பாரதியார் ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணத்தில் நடத்திய கூட்டத்திற்கு திரண்ட பொதுமக்கள் பற்றிய தகவல்களும் இருந்தன.
பயாஸ்கோப் மூலமாக சர்வர் சுந்தரம் மற்றும் பராசக்தி திரைப்படக் காட்சிகளைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
என்ன ஒரு வருத்தமான விஷயம் என்றால், புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை!
செஸ், பெரிய அளவிலான சைக்கிள் உள்ளிட்ட பல அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மிருதங்கத்தின் இன்னொரு பெயர் தண்ணும்மை என்பது போன்ற தகவல்களும் அறியக் கிடைத்தன. மாடியில் மிகப் பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஹாலும், அங்கிருந்த பெஞ்சுகள் மற்றும் நாற்காலிகள் பழைய கால தேக்கு மரத்தில் செய்யப்பட்டவை என்பதையும் தெரிந்துகொண்டோம்.
வெளியே வந்தபோது, 03.06.1973 வரை புழக்கத்தில் இருந்த கைரிக்ஷா ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்ஷா அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுத் தகவலும் காணப்பட்டது. ஒருகாலத்தில் சென்னையில் இயங்கிய டிராம் வண்டியின் மாதிரியும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும், அகழ்வாராய்ச்சியில் பல்லாவரத்தில் முதன்முதலாக மண்வெட்டி கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய தகவல் ஆச்சரியமளித்தது.
நுழைவுக் கட்டணம்:
சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.10, மற்றவர்களுக்கு ரூ.25.
குழந்தைகளை அழைத்துச் சென்று இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் காண்பிக்கலாமே!
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)