புதுவருட டைரி!
- பாரதிராஜன்
பள்ளிக்கூட நாட்களில் அப்பா ஒரு டைரி வைத்திருப்பார். அந்த டைரி ஒரு நாளைக்கு ஒரு பக்கம். ஆனால் அந்த பக்கம் முழுக்க எழுதியிருப்பார். அதை ப்பார்க்கவே பயந்து பயந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் அப்பா தாசில்தார், ஆபீஸ் பைல்கள் கூட இருக்கும். அது கலைந்தது தெரிந்தால் அடி தான் விழும்.
பள்ளிக்கூட படிப்பு முடிந்து காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரியில் பி.யூ. சியில் 1971ஜூன் மாதம் சேர்ந்தேன். ஆகஸ்ட் மாதம் ராமதாஸ் என்கிற ஆங்கில விரிவுரையாளர் டயரி என்றால் என்ன எப்படி பயன்படுத்த வேண்டுமென சொன்னார்.
ஆஹா டைரி எழுதுவதில் இவ்வளோ விவரமா என தெரிந்து கொண்ட நான் ஜனவரி 1972 எப்ப வரும் என காத்திருந்தேன்.
ஜனவரி மாதம் வந்ததும் என் மாமா ஆச்சரியமாக டேய் டயரி வேணுமா என்றதும், ஆம் என்றேன். உடனே 1972புது டயரி கொடுத்தார். அது ஒரு பக்கத்தில் இரண்டு தேதிகள். சரி எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு டயரி பற்றிய விவரம் சொன்ன ஆசிரியரிடம் அவருடைய வீட்டில் காண்பித்தேன்.
ஆஹா ஆஹா நல்ல விஷயம் எழுது, ஆனால் எனக்கு இந்த டயரி கொடு என்றதும், யோசிக்காமல் சார் இந்தாங்க குரு தட்சிணை என்றதும், அவர் சிரித்தபடியே எனக்கு வேண்டாம் என்று என்னிடமே கொடுத்து விட்டார்.
தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் புது டயரி ஒசி தான் வாங்கி 1972முதல் 2000ஆண்டு வரை எழுதினேன். பிறகு எழுதவில்லை. மறுபடியும் 2010 ல் இருந்து இன்று வரை எழுதி வருகிறேன்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)