Tamil Short Story: தெர்மாஸ் பிளாஸ்க்!

Su.tha Arivalagan
May 02, 2026,12:53 PM IST

- பாரதிராஜன்


ஷ்ரவனுக்கும் ஷைலஜாவிற்கும் திருமணம் முடிந்து ஓராண்டாகிறது. இருவரும் ஐடி (IT) நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். நல்ல ஜோடி; பெற்றோர்கள் தேடித்தேடிச் சலித்துக் கண்டெடுத்த வரன். இருவரின் பெற்றோர்களும் கிராமத்தில் வசிக்கின்றனர். ஷ்ரவன் தம்பதியினருக்குச் சிறுசேரியில் வேலை.


ஷைலஜாவிற்கு ஐடி வேலை பிடிக்கவில்லை. அரசுப் பணிக்காகக் காத்திருந்தாள். அதற்கான தேர்வினை எழுதித் தேர்ச்சியும் பெற்றாள். அவளுக்கு அரசுப் பணி கிடைத்து, அரக்கோணத்தில் பணியில் சேர வேண்டிய சூழல் உருவானது. ஷ்ரவன், குடும்பத்தை எங்கே அமைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.


பிறகு, அரக்கோணத்தில் வாடகை குறைவு, காற்றோட்டமான சூழல், ரசாயனம் இல்லாத அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் பழ வகைகள் நியாயமான விலையில் கிடைப்பதால் ஷ்ரவன் அங்கு வாடகைக்கு இருக்கச் சம்மதித்தான். மேலும், அரக்கோணத்திலிருந்து வேளச்சேரிக்குப் புறநகர் ரயிலில் பயணம் செய்வது சுகமான ஒன்றாக இருக்கும் என்பதால் 'சரி' என்றான். ஆனால், தினமும் இரவு வீட்டிற்கு வர மிகவும் தாமதமானது.




ஷ்ரவன் காலையில் அலுவலகம் செல்லும்போது, ஷைலஜா அவருக்குப் பிளாஸ்க்கில் காபி கொடுத்து அனுப்புவாள்; அதேபோல் அவளும் பள்ளிக்கு எடுத்துச் செல்வாள். ஷ்ரவன் மாலையில் வீட்டிற்கு வரும்போது, அவர்கள் இருவரும் மட்டுமே குடிப்பதற்காக ரோஸ் மில்க் வாங்கி வருவான். இருவரும் இரவு உணவை முடித்த பின்னர், ரோஸ் மில்க் குடித்துவிட்டுத் தூங்கப் போவார்கள். ஆனால், இப்போது ஷ்ரவன் அலுவலகத்திலிருந்து வரத் தாமதமாவதால் தினமும் ரோஸ் மில்க் வாங்கி வர இயலவில்லை. இதனால் அவன் மிகவும் வருத்தப்பட்டான்.


இதற்கிடையில் ஷைலஜா கர்ப்பமானாள். பள்ளியில் விடுமுறை எடுத்து வீட்டில் தங்கி இருக்க ஆரம்பித்தாள். ஷ்ரவன் வேறு வேலை தேடலாமா என்று யோசித்தான். அதற்கு ஷைலஜா சம்மதிக்கவில்லை. "வேலை என்றால் அப்படித்தான் இருக்கும். அரசு வேலை ஒரு மாதிரி, தனியார் வேலை ஒரு மாதிரி. இந்த ரோஸ் மில்க் விஷயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை" என்றாள்.


அதற்கு ஷ்ரவன், "ஷைலு, உனக்கு ஒரு விஷயம் தெரியாது. என் தந்தை அரசுப் பணியில் இருந்த காலத்தில் நான், என் தம்பி மற்றும் சகோதரி ஆகிய மூவரும் எங்கள் பாட்டி வீட்டில் தங்கிப் படித்தோம். வாரம் தோறும் சனிக்கிழமை இரவு எங்களைப் பார்க்க வரும்போது, அவர் எங்கள் மூன்று பேருக்கும் ரோஸ் மில்க் வாங்கி வருவார். நாங்கள் மூவரும் அதற்காகவே தூங்காமல் விழித்திருப்போம். அதனால் தான் பிளாஸ்க்கைப் பார்க்கும்போதெல்லாம் என் தந்தை வாங்கி வந்த அந்த ரோஸ் மில்க் நினைவுக்கு வருகிறது. அதன் மீது எனக்கு ஒரு தனிப் பிரியம் உண்டு," என்று கூற, ஷைலஜா ஆச்சரியப்பட்டாள்.


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)