உழைப்பாளிகளின் மெளன பாஷை.. செயல் பேசட்டும்!

Su.tha Arivalagan
Apr 18, 2026,05:03 PM IST

- புவனா மதிமன்னன்


நமது சமூகத்தில் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், உண்மையாக உழைக்கும் மனிதர்கள் அமைதியாக தங்கள் கடமையை செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் புகழையும் பாராட்டையும் எதிர்பார்க்காமல், தங்கள் பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவதே அவர்களின் நோக்கம். 


ஆனால் சிலர் வேலை செய்யாமல், பாவ்லா (show) காட்டி நல்ல பெயர் பெற முயல்கிறார்கள். இந்த நிலைமை சமூகத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது.


உழைப்பாளிகள் பெரும்பாலும் பேசாமல் செயல்படுவார்கள். “செயல் பேசட்டும்” என்ற மனப்பான்மையுடன் அவர்கள் தினமும் கடமையில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் செய்த உழைப்பின் பலன் உடனே தெரியாமல் போகலாம்; ஆனால் அது நீண்ட காலத்தில் நல்ல விளைவுகளை தரும். இவர்கள் தான் எந்த ஒரு நிறுவனத்திற்கும் அல்லது சமூகத்திற்கும் முதுகெலும்பாக இருப்பவர்கள்.


மாறாக, சிலர் வேலை செய்யாமல் வெளிப்படையாக மட்டும் தங்களை காட்டிக் கொள்வார்கள். அவர்கள் பேசுவதில் அதிகம், செயல்பாட்டில் குறைவு. இவர்கள் மற்றவர்களின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் செய்தது போல காட்டிக் கொள்வார்கள். இது “காற்றில் கட்டிய மாளிகை” போல – வெளியில் அழகாக தோன்றினாலும், உள்ளே வெறுமையாக இருக்கும்.




இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றால், நாம் உண்மையான உழைப்பை மதிக்க வேண்டும். ஒரு மனிதனின் மதிப்பு அவன் பேசும் வார்த்தைகளால் அல்ல, அவன் செய்யும் செயல்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள், மேலாளர்கள், தலைவர்கள் ஆகியோர் உண்மையாக உழைக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களை பாராட்ட வேண்டும்.


முடிவில், “உழைப்புக்கு மாற்று இல்லை” என்பதே உண்மை. நடித்துப் பெறப்படும் புகழ் தற்காலிகமானது; ஆனால் உண்மையான உழைப்பால் கிடைக்கும் மரியாதை நிலையானது. ஆகவே நாம் எல்லோரும் செயலில் நேர்மையாக இருந்து, உண்மையான உழைப்பை முன்னிறுத்த வேண்டும்.


,(புவனா மதிமன்னன், ஆசிரியர், தஞ்சாவூர்)