பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில், பாஜக மற்றும் ஆர்ஜேடி ஆகிய இரு கட்சிகளும் போட்டி போட்டு முன்னேறி வந்தன. இருப்பினும் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கை ஓங்கி விட்டது.
இதற்குக் காரணம், பாஜகவின் கூட்டணிக் கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தின் வலுவான செயல்பாடு ஆகும். நிதீஷ் குமார் கட்சியின் நல்ல பெர்பார்மான்ஸ் காரணமாக பாஜகவுக்கும் உயர்வு கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துக்குத் தேவையான எண்ணிக்கையைத் தொட்டு முன்னேறி வருகிறது.
மறுபுறம், ராஷ்ரிடிய ஜனதாதளம் போராடி வருகிறது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் பலவீனமான செயல்பாடு மொத்தக் கூட்டணியின் நிலையையும் கீழே தள்ளியுள்ளது. காங்கிரஸும் சற்று கடும் போட்டியைக் கொடுத்திருந்தால் கூட்டணியின் பலம் சற்று மேம்பட்டிருக்கும்.
காலை 9.40 மணி நிலவரப்டி
தேசிய ஜனநாயகக் கூட்டணி 159 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 75 இடங்களிலும், பிற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. மொத்த இடங்கள் 243 ஆகும். பெரும்பான்மைக்குத் தேவை 122 ஆகும்.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி 59 இடங்களில் முன்னிலை வகித்தது
பாஜக 79 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 70 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
காங்கிரஸ் 10 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி மொத்தம் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில், ஆர்ஜேடி 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிட்டன. மீதமுள்ள இடங்கள் இடதுசாரி கட்சிகள் மற்றும் முகேஷ் சஹானியின் விகாஸீல் இன்சான் கட்சி உட்பட மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்து அளிக்கப்பட்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளும் தலா 101 இடங்களில் போட்டியிட்டன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற), மற்றும் உபேன் குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகியவை மற்ற கூட்டணிக் கட்சிகள்.
2020 பீகார் தேர்தலில், ஆர்ஜேடி அதிக தொகுதிகளை வென்ற ஒற்றைப் பெரிய கட்சியாக இருந்தது. ஆனாலும், காங்கிரஸ் சரியாகச் செயல்படாததால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. இப்போதும் கிட்டத்தட்ட அதே நிலைதான் ஏற்படும் என்று தெரிகிறது.
என்னதான் காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணிகளை அமைத்தாலும் அந்தக் கட்சி வலுவடையாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகளும் உணர்த்தும் என்று தெரிகிறது.