பாட்னா: பீகார் மாநிலத்தின் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2025 தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 அன்று நிறைவடைந்தது. இப்போது அனைவரின் கவனமும் எக்ஸிட் போல் முடிவுகள் மீது திரும்பியுள்ளது.
நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை அறிய மக்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். முக்கியமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மஹாகத்பந்தன் ஆகிய இருபெரும் கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் இன்றைய இறுதி வாக்குப் பதிவுக்குப் பின்னர் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலானவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வெற்றி என்று கூறியுள்ளன.
இந்த முறை பீகார் தேர்தல், நிதீஷ் குமார் தலைமையிலான பாஜக-ஜனதா தளம் (ஐக்கிய) கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டியாக அமைந்துள்ளது. அரசியல் வியூக நிபுணரும், தற்போது அரசியல்வாதியுமான பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி (JSP) அனைத்து 243 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மேலும், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் (AIMIM) கட்சியும் 25 தொகுதிகளில் போட்டியிடுவதால், தேர்தல் பலமுனைப் போட்டியாக மாறியுள்ளது.

NDA கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி (BJP), ஜனதா தளம் (ஐக்கிய), லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM), மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (RLM) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மஹாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), இந்திய தேசிய காங்கிரஸ் (INC), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன், விகாஸ்சீல் இன்சான் கட்சி (VIP), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போன்ற கட்சிகள் உள்ளன. இவர்களுடன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் (AIMIM), ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (RLJP), ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்), அப்னி ஜனதா கட்சி (AJP), ஆம் ஆத்மி கட்சி (AAP), பகுஜன் சமாஜ் கட்சி (BSP), ஜனதா தளம் ராஷ்ட்ரவாதி (JDR), ஜெய் மகா பாரத் கட்சி (JMBP) மற்றும் பல சுயேச்சைப் வேட்பாளர்களும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.
கடந்த 2020
பீகார் சட்டமன்றத் தேர்தலில், NDA கூட்டணி 125 இடங்களை வென்று 37.26% வாக்கு சதவீதத்தைப் பெற்றது. மஹாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களை வென்று 37.23% வாக்கு சதவீதத்தைப் பெற்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சி 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாரதிய ஜனதா கட்சி 110 தொகுதிகளில் போட்டியிட்டு 74 இடங்களை வென்று, முக்கியக் கட்சிகளிலேயே அதிக வெற்றி விகிதத்தைப் பதிவு செய்தது. ஜனதா தளம் (ஐக்கிய) கட்சி 115 தொகுதிகளில் போட்டியிட்டு 43 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களையும் வென்றன.
2020 பீகார் தேர்தல் முடிவுகள் பல அரசியல் ஆய்வாளர்களையும், கருத்துக்கணிப்பு நிறுவனங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள் மஹாகத்பந்தன் கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்திருந்தன. சில கணிப்புகள் தொங்கு சட்டமன்றம் அமையும் என்றும் கூறியிருந்தன. ஆனால், 'Politique Marquer (P-Marq)' என்ற ஒரே ஒரு கருத்துக்கணிப்பு நிறுவனம் மட்டுமே NDA கூட்டணிக்கு ஒரு சிறிய பெரும்பான்மை கிடைக்கும் என்று சரியாகக் கணித்திருந்தது.
இந்த தேர்தலில் வெளியாகியுள்ள சில கருத்துக் கணிப்பு முடிவுகள்:
ஜேவிசி எக்ஸிட் போல் கணிப்பின்படி, லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மஹாகத்பந்தன் கூட்டணி 88 முதல் 103 இடங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாட்ரிஸ் கரு்துக் கணிப்பு: தேசிய ஜனநாயகக் கூட்டணி 147 முதல் 167 வரை, மஹாகத்பந்தன் - 70 முதல் 90. மற்றவர்கள் 2 முதல் 6.
டைம்ஸ் நவ்: தேசிய ஜனநாயகக் கூட்டணி- 135 முதல் 150 வரை, எம்ஜிபி - 88 முதல் 103 வரை, ஜேஎஸ்பி அதிகபட்சம் 1, மற்றவர்கள் 3 முதல் 6 வரை.
டெய்னிக் பாஸ்கர் - தேசிய ஜனநாயகக் கூட்டணி 145 முதல் 160, எம்ஜிபி 73 முதல் 91, மற்றவர்கள் 5 முதல் 10.
பீப்பிள்ஸ் இன்சைட் - தேசிய ஜனநாயகக் கூட்டணி 133 முதல் 148 வரை, எம்ஜிபி 87 முதல் 102, மற்றவர்கள் 3 முதல் 6
நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதன் பிறகுதான் யார் அடுத்த பீகார் சட்டமன்றத்தை ஆளப்போகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும். இந்தத் தேர்தல் முடிவுகள் பீகாரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
{{comments.comment}}