அக்டோபர் 12 ல் நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணம்...அனுமதி கிடைக்குமா?

Su.tha Arivalagan
Oct 07, 2025,01:07 PM IST

சென்னை : திட்டமிட்டபடி அக்டோபர் 12ம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிமுக, தவெக, திமுக கட்சிகளை தொடர்ந்து பாஜக.,வும் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்க திட்டமிட்டிருந்தது. அக்டோபர் 12ம் தேதி மதுரையில் நடைபெறும் தொடக்க விழாவில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு, நயினார் நாகேந்திரனின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரச்சார பயணத்தை நயினார் நாகேந்திரன் துவக்குவார் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.


கரூரில் தவெக.,வின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு, அரசியல் கட்சிகளின் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு உரிய நெறிமுறைகள் வகுக்கப்படும் வரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல்லில் நடக்க இருந்த பிரச்சார கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போல் பாமக தலைவர் அன்புமணி நடத்த இருந்த பிரச்சார நடைபயணத்திற்கும் அனுமதி தர போலீசார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  




அதிமுக சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்த இடங்கள் மறுக்கப்பட்டு விட்டதால், தனியாருக்கு சொந்தமான இடத்தில் பிரச்சாரத்தை நடத்த அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் அந்த இடத்திலும் பிரச்சாரம் செய்ய போலீசார் தரப்பில் அனுமதி வழங்கப்படுமா என தெரியவில்லை. இத்தகைய சூழலில் தற்போது பாஜக தேர்தல் சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவே வந்து துவக்கி வைக்க உள்ள இந்த பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி வழங்குவார்களா? அல்லது மறுப்பு தெரிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.