சென்னை: தமிழ்நாடு யாருடன் போராடும். யாரும் தமிழ்நாட்டுடன் போராடவில்லை என்று பேசிய ஆளுநர் ஆர். என். ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான விளக்கத்துடன் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிலடிக்கு முன்னாள் ஆளுநரும், முன்னாள் பாஜக தலைவருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும் ஒரு பதில் அளித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த வள்ளலார் விழாவில் தமிழ்நாட்டில் எங்கு போனாலும் தமிழ்நாடு போராடும் வெல்லும் என்று போஸ்டர்களில், சுவர்களில் எழுதியுள்ளனர். தமிழ்நாடு யாருடன் போராடும்... யாருமே தமிழ்நாட்டுடன் போராடவில்லையே. அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம் என்று கூறியிருந்தார்.
ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக விரிவாக விளாசித் தள்ளி விட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கை:
தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும் என்று முதல்வர் காட்டமாக கூறியிருந்தார்.
டாக்டர் தமிழிசை பதில்:
முதல்வரின் இந்த அறிக்கைக்கு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கை:
முதலமைச்சர் அவர்களே இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி என்று எக்காலத்திலும் மத்திய அரசு சொல்லவில்லை.. புதிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியை ஊக்குவிப்பது தானே தவிர இந்திமொழி ஊக்குவிப்பது அல்ல... நீங்கள் இந்தி மொழியை எதிர்த்து போராடுகிறேன் என்றால் இந்தி மொழியை தமிழகத்தில் திணித்த காங்கிரஸோடு நீங்கள் போராட வேண்டும்....
அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு மொழி.. ஆனால் தனியார் பள்ளிக்கு மூன்று மொழி என்று உங்களது பாராபட்சமான கல்வித் திட்டத்திற்கு எதிராக போராடுங்கள்...
நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்... நீட் எதிர்த்து போராடுவேன் கையெழுத்து விடுவேன் என்று பொய் சொன்னது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்...
Delimitation.. என்று இன்று இல்லாத ஒன்றை எதிர்த்து போராடுகிறேன் என்பது உங்களது திராவிட மாடல் என்கின்ற பொய் மாடல் ....
உலகத்திற்கே பொதுவான வள்ளுவர் ஆரம்ப காலத்தில் காவி உடையில் தான் இருந்தார். இறை வணக்கத்தோடு இறை உணர்வோடு இருந்த வள்ளுவரை வெள்ளுடை உடுக்க வைத்த பாவம் செய்பவர்கள் நீங்கள்... ஆக உங்களையே எதிர்த்து போராடப் போகிறீர்களா..?..
முதலமைச்சரே! மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நாடு முழுவதும் மறைந்திருக்கின்ற நேரத்தில் உங்கள் சொந்த தொகுதியிலேயே துப்புரவு தொழிலாளர்கள் மரணித்திருக்கிறார்களே அதை எதிர்த்து போராடுங்கள்..
வேங்கைவயலில் நலமுடன் தண்ணீர் இல்லாமல் மலமுடன் தண்ணீர் குடித்த மக்களுக்கு இன்றும் நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு எதிராக உங்களுக்கு எதிராக? நீங்களே போராடுங்கள்!
கள்ளச்சாராயத்தினால் 67 உயிர்களை பலிவாங்கி.. அங்கு ஆறுதல் கூட செல்ல முடியாத உங்களது மனிதாபிமானமற்ற செயலை எதிர்த்து போராடுங்கள்...
இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...
பல்கலைக்கழகமாக இருக்கட்டும், காவலர்களிடம் இருந்து இருக்கட்டும்... பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்கள் அவல நிலையை எதிர்த்து போராடுங்கள்.. திராவிட மாடல் ஆட்சியில் இன்று பள்ளி குழந்தைகளுக்கிடையே தலைவிரித்தாடும் சாதிய வேற்றுமையை எதிர்த்து போராடுங்கள்..
ஒரு வானூர்தி சாகசத்தில் கூட பாதுகாப்பு கொடுக்க முடியாமல் ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய உங்களது காவல்துறைக்கு எதிராக போராடுங்கள்... ஒரு அரசியல் கட்சிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காமல் 41 உயிர் பலியாக காரணமாக இருந்த உங்களது பாதுகாப்பு நடவடிக்கை எதிராக போராடுங்கள்... இன்று தமிழகத்தில் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் பொழுது... அதை எதிர்த்து நீங்கள் போராடினால் தான் சரியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பௌர்ணமி நிலவில்.. அதாவது இன்று சரத் பூர்ணிமா .. லட்சுமிக்கும், கிருஷ்ணருக்கும் அர்ப்பணம்!
அறத்தின் வழி நடந்து .. அன்பின் அருமை உரைத்தவர் .. உலக உத்தமர் காந்தியடிகள்!
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அதிரடி சரவெடி... புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் 88,000த்தை கடந்தது
கன மழை, நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கும் நேபாளம்.. உதவிக் கரம் நீட்டும் இந்தியா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இன்று மாலை தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
ஆளுநரின் பேச்சு.. விலாவரியாக விளாசித் தள்ளிய முதல்வர் ஸ்டாலின்.. பொசுக்கென்று பதிலடி தந்த தமிழிசை!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 06, 2025... இன்று அதிர்ஷ்டம் தேடி வரும்
தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
{{comments.comment}}