நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!

Mar 02, 2026,03:54 PM IST

தமிழன்னைத் தொழுதே என் எழுத்துப் பயணம் தொடங்குகிறது.


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை என் மண். 1989ஆம் ஆண்டு அப்பா லாரன்ஸ் – அம்மா கோமதி தம்பதியருக்கு பிறந்தேன். வாழ்க்கையின் முதல் நண்பனும் குருவும் என் தந்தைதான்.


சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் கல்வி தொடங்கியது. ஆறாம் வகுப்புக்கு பின் அது நின்றது. அந்த இடைநிறுத்தம் இன்று வரை என் மனதில் ஒரு மௌன வலியாக நிற்கிறது. ஆரம்பக் கல்வியை அன்போடு கற்றுத்தந்த டேணியல் ஆசிரியரை நன்றியுடன் நினைக்கிறேன்.


2000ஆம் ஆண்டு கனரக வாகனப் பணிமனையில் தினம் பத்து ரூபாய் சம்பளத்தில் உழைத்தேன். பின்னர் அப்பாவின் முடித்திருத்தகத்தில் இணைந்து தொழிலை கற்றேன். அங்கே வேலை மட்டுமல்ல — ஒழுக்கமும் உறுதியும், விழுந்தாலும் எழும் மனவலிமையும் கற்றுக்கொண்டேன்.




அம்மாவின் வாசிப்பு பழக்கம் என்னுள் விதை போட்டது. அரசு நூலகம் என் இரண்டாம் பள்ளியாகியது. அங்கே நான் முதலில் வாசித்த நூல் “உன் அழகுக்கு ஆயிரம் முத்தங்கள்”. அந்த நூலுடன் கவிதை என் உள்ளத்தில் குடியேறியது. வார்த்தைகள் என் தோழனானது; வரிகள் என் வழிகாட்டியானது.


முகநூலில் எழுதத் தொடங்கினேன். பாராட்டும் விமர்சனமும் சேர்ந்து என்னை செதுக்கிய பேரன்புக் கவிப்பெருந்தகைகள் கொன்றைக்காடு கலைவேந்தன், ஸ்ரீ வீ. முத்துவேல். என் கவிதைகளின் முதல் வாசகி என் அம்மா; பின்னர் என் மனைவியும். அவர்களின் நம்பிக்கையே என் எழுத்தின் முதுகெலும்பு.


கல்வியை மீண்டும் அணைத்தேன். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். பத்தாம் வகுப்பை நோக்கி பயணிக்கிறேன். கற்றலுக்கு வயது எல்லையில்லை; மனதின் விழிப்பே எல்லை என்பதை என் முயற்சி சாட்சி பேசுகிறது.


இணையக் குழுமங்கள், கவிதைப் போட்டிகள் என என் வரிகள் பல சோதனைகள் கண்டன. 2020ஆம் ஆண்டு முதல் மேடையாக கிருஷ்ணகிரி கவியரங்கம் அமைந்தது. அதன் பின் திருச்சி, குற்றாலம், சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் என் கவிதை ஒலித்தது. ஒவ்வொரு மேடையும் என் உள்ளத்தின் நடுக்கத்தையும் நம்பிக்கையையும் ஒரே நேரத்தில் கண்டது.


அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை வெளியிட்ட “சிறகு முளைத்த வானம்” நூலில் என் கவிதைகள் இடம்பெற்றது பெருமை. 2024ஆம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி நடத்திய கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூப் போட்டியில் தேர்வாகி “மெல்ல அசையும் கோயில் யானை” நூலிலும் என் கவிதைகள் இடம் பெற்றது — என் எழுத்தின் இன்னொரு மைல்கல்.


தியாகி விஸ்வநாததாஸர் விருது, காமராஜர் விருது, முத்தமிழ் ஹைக்கூ பேரொளி, ஹைக்கூ சிற்பி, பாரதியார், கவிக்கோ, கவிமுகில் உள்ளிட்ட அங்கீகாரங்கள் எனக்கு கிடைத்துள்ளன.


ஆனால் எல்லாவற்றையும் விட பெருமை தருவது — கவிஞன் என்ற அடையாளம். பள்ளி வாசலில் நின்று திரும்பிய என் வாழ்க்கை, நூலக வாசல் வழியாக மீண்டும் எழுந்தது.


முடித்திருத்தகக் கண்ணாடியில் நான் பார்த்தது தொழிலாளியை மட்டும் அல்ல; கனவுகளை விடாமுயற்சியால் செதுக்கும் கவிஞனை.


இன்று நான் என் குழந்தைகளுக்கும் வாசிப்பின் உன்னதத்தை உணர்த்துகிறேன்.




ஒரு புத்தகம் வாழ்க்கையை மாற்றும்; ஒரு வரி மனதை விழிப்பிக்கும்; ஒரு சொல் மனிதனை உயர்த்தும்.

நீங்களும் கிடைக்கும் நேரத்தை வாசிப்பதை நேசியுங்கள்.


ஏனெனில் வாசிப்பு என்பது அறிவைப் பெறுவதற்கான வழி மட்டும் அல்ல —  உள்ளத்தை விரிவாக்கும் ஒரு அமைதியான புரட்சி. 


விரைவில் என் கவிதைகள் தனி நூலாக உருவெடுக்க உள்ளன. பொருளாதார நெருக்கடி சிறிது குறைந்ததும், என் கனவுகள் அச்சு வடிவம் பெறும்.


இன்றைக்கு காகிதம் காத்திருக்கிறது; நாளை அது என் உள்ளத்தின் இசையை தாங்கும். என் எழுத்து என் உழைப்பின் வியர்வை. என் கவிதை என் உள்ளத்தின் துடிப்பு. தமிழன்னையின் அருளோடு என் பயணம் தொடர்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு

news

பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்

news

இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!

news

மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!

news

இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!

news

நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!

news

இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works

news

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்

news

நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்