சென்னை: மத்திய கிழக்கு பற்றி எரிகிறது. ஈரானை வளத்து வளைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கி வருகின்றன. ஈரான் சுப்ரீம் தலைவரான அலி கமேனி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரானும் விடுவதாக இல்லை. இஸ்ரேலை தொடர்ந்து தாக்கி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள தனது பக்கத்து நாடுகளையும் விடாமல் அடித்து நொறுக்கிக் கொண்டுள்ளது.
இப்படி முரட்டுத்தனமாக நடந்து வரும் இந்த சண்டை இன்று நேற்று அல்ல, பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் பெரும் சோகக் கதையாகும். ஆனால் இந்த போரில் ஒரு விஷயத்தை எல்லோரும் பார்க்கலாம். மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தில் மற்ற முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவுடன் இணக்கமான போக்கைக் கடைத்து வருகின்றன. ஆனால் ஈரான் மட்டும் தனித்து விடப்பட்டுள்ளது.
1400 ஆண்டு கால வரலாறு

இது ஏன் என்று தெரியுமா? காரணம், இது வெறும் அரசியல் மோதல் மட்டுமல்ல; இதற்குப் பின்னால் 1,400 ஆண்டுகால மத வரலாறு, இன அடையாளம் மற்றும் அதிகாரப் போட்டி எனப் பல விஷயங்கள் புதைந்துள்ளன. ஈரான் அடிபடும்போது மற்ற இஸ்லாமிய நாடுகள் அமைதியாக இருக்க பல காரணங்கள் உள்ளன. அதைப் பார்க்கலாம். அதற்கு முன் ஒரு சுவாரஸ்யத்தையும் பார்ப்போம்.
அது என்னென்னா ஒரு காலத்தில் அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் ஆகியவை நட்பு நாடுகளாகத்தான் இருந்தன. ஈரானுக்கு அமெரிக்கா ஏராளமான ஆயுத உதவிகளையும் கூட செய்து வந்தது. என்ன நம்ப முடியலையா.. உண்மைதான்.
1979-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, ஈரான் மன்னர் முஹம்மது ரெசா பஹ்லவியின் ஆட்சியில் அமெரிக்காவின் மிக நெருக்கமான கூட்டாளியாக இருந்தது. இஸ்ரேலுடன் கூட ஈரான் அப்போது சுமுகமான உறவையே கொண்டிருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியனின் கம்யூனிசப் பரவலைத் தடுப்பதற்கான ஒரு அரணாக ஈரானை அமெரிக்கா பார்த்தது. இதனால் ஈரானுடன் அது நட்பு பாராட்டி வந்தது. காரணம், இஸ்ரேலின் நலனைக் கருத்தில் கொண்டு ஈரானுடன் நட்பு பாராட்டியது அமெரிக்கா.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ மற்றும் பிரிட்டிஷ் உளவு அமைப்பு ஆகியவை இணைந்து, ஈரானின் பிரதமராக இருந்த முஹம்மது மொசாடெக்கை பதவி நீக்கம் செய்து, மன்னர் பஹ்லவியின் அதிகாரத்தை நிலைப்படுத்தின.
மன்னர் பஹ்லவிக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களையும், போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் வழங்கியது. பதிலுக்கு, அமெரிக்காவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகத்தை ஈரான் உறுதி செய்தது.
மன்னரின் ரகசிய போலீஸ் படையான சாவாக் அமைப்பை உருவாக்குவதிலும், பயிற்சி அளிப்பதிலும் சிஐஏ முக்கிய பங்கு வகித்தது.
அரபு நாடுகளுக்கு இடையே ஒரு முஸ்லிம் நாடு இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுவது அப்போது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. உண்மையில் ஈரானை அரபு நாடாக பார்க்க முடியாது. அரபு அல்லாத நாடுதான் ஈரான். இதை விட பெரிய ஆச்சரியம் என்ன தெரியுமா.. இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்த நாடும் ஈரான்தான். முதலில் துருக்கி அந்த அங்கீகாரத்தைக் கொடுத்தது. அடுத்த நாடாக ஈரான் வழங்கியது. 1950ம் ஆண்டு இஸ்ரேலை அங்கீகரித்தது ஈரான்.
அரபு நாடுகள் ஒருங்கிணைந்து இஸ்ரேலுக்கு எண்ணெய் வழங்க மறுத்தபோது, ஈரான் இஸ்ரேலுக்குத் தேவையான 60% எண்ணெயை வழங்கியது. இதற்காக எய்லாத்-அஷ்கெலோன் என்ற குழாய் வழித்தடத்தையும் இரு நாடுகளும் இணைந்து உருவாக்கின. அது மட்டுமா, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் மற்றும் ஈரானின் சாவாக் ஆகியவை ரகசியத் தகவல்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன.
அயதுல்லா கொமேனியின் வருகை

ஆனால் இதெல்லாம் 1979ம் ஆண்டு வரைதான்.. 1979-ல் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சி, இந்த ஒட்டுமொத்தப் போக்கையும் மாற்றி அமைத்தது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான உறவு மொத்தமாக முடிந்து போனது அந்தப் புரட்சிக்குப் பிறகுதான்.
ஈரானில் நடந்த மிகப் பெரிய புரட்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார் அயதுல்லா கொமேனி. வந்த வேகத்தில், அமெரிக்காவை பெரிய சாத்தான் என்றும், இஸ்ரேலை சிறிய சாத்தான் என்றும் அறிவித்தார். அமெரிக்காவுடனான தூதரக உறவுகள் துண்டிக்கப்பட்டன. இஸ்ரேலுடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டு, ஈரானிலிருந்த இஸ்ரேல் தூதரகம் பாலஸ்தீன விடுதலை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
அயதுல்லா கொமேனியின் வழி நடத்தலில் நடக்க ஆரம்பித்த ஈரான் மூன்று முக்கியக் கொள்கைகளை கையில் எடுத்தது.
மேற்கத்திய ஆதிக்கத்தை எதிர்த்தல், இஸ்ரேலின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை நிராகரித்தல் மற்றும் ஷியா இஸ்லாமிய அரசியல் இறையியல் அடிப்படையில் ஆட்சி செய்தல்.. இதுதான் அந்தக் கொள்கை.
இதனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான பகை என்பது ஈரானின் வெளியுறவுக் கொள்கையாக மட்டும் இல்லாமல், அந்த நாட்டின் அடையாளமாகவே மாறிப் போனது. இன்று வரை அதுதான் தொடர்கிறது.
நபிகள் நாயகத்தின் மறைவும்.. மதப் பிளவும்

இன்னும் சற்று விரிவாக ஆழமாக, மத்திய கிழக்கின் மோதல்களைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் கி.பி 632-க்கு செல்ல வேண்டும். இறைதூதர் முஹம்மது நபியின் மறைவுக்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்தை யார் வழிநடத்த வேண்டும் என்பதில் ஒரு குழப்பமும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் பிளவுபட ஆரம்பித்தது அப்போதுதான்.
ஒரு பிரிவைச் சேர்ந்த (சன்னி) இஸ்லாமியர்கள் தகுதியுள்ள எவரும் (அபூபக்கர் போன்றோர்) தலைவராகலாம் என்று வலியுறுத்தினர். அதையே நம்பினர். அதேசமயம், ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள், நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரே தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று கூறினர். அதாவது நபிகளாரின் மகன் அலி மற்றும் அவரது அவரது வாரிசுகள். அங்குதான் இந்த இரு பிரிவுகளும் தனித் தனியாக முரண்பட்டு நிற்க ஆரம்பித்தன.
உலக அளவில் முஸ்லீம்களை எடுத்துக் கொண்டால், அதில் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள்தான் அதிகம். அதாவது கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் சன்னி பிரிவினர்தான். மற்றவர்கள்தான் ஷியா பிரிவினர். ஈரானில்தான் ஷியா பிரிவினர் அதிகம் உள்ளனர். அதாவது அங்குள்ள இஸ்லாமியர்களில் 95 சதவீதம் பேர் ஷியா பிரிவினர்தான்.
சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், ஈராக், குவைத் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் சன்னி பிரிவினர்தான் அதிகம். அதிலும் சவூதி அரேபியா தன்னை சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் தலைவனாக உலக அரங்கில் நிலை நிறுத்திக் கொள்வது வழக்கம்.
ஈரான் வேறு.. அரபு நாடுகள் வேறு

ஈரான் நாடு பல வகையிலும் அரபு மற்றும் முஸ்லீம் நாடுகளிடமிருந்து வேறுபட்டுக் காணப்படும். அரசு நிர்வாக முறை முதல் எல்லாவற்றிலுமே அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்களாக உள்ளன. சன்னி இஸ்லாமில் இல்லாத ஒரு விஷயம் ஷியா இஸ்லாமிடம் உள்ளது. அதாவது Hidden Imam என்ற கோட்பாடு இங்கு உள்ளது. அதாவது கடைசியாக இருந்தவர் 12வது இமாம். அவர் திடீரென மறைந்து விட்டதாகவும், அவர் மஹ்தியாக மீண்டும் பிறந்து வருவார் என்றும் ஷியாக்கள் நம்புகின்றனர். அவர் வரும் வரை அரசியல் ஆட்சியில் நேரடியாக ஈடுபடுவதை ஷியா மத குருக்கள் பல நூற்றாண்டுகளாகத் தவிர்த்து வந்தனர்.
அயதுல்லா கொமேனி வந்த பிறகு இதை மாற்றினார். விலாயத்-இ பகிஹ் என்ற புதிய கோட்பாட்டை அவர் அறிமுகப்படுத்தினார். அதாவது இமாம் இல்லைதான்.. அவர் வரும்போது வரட்டும்.. அதேசமயம் அவர் இல்லாத நிலையில் மத குருதான் ஆள வேண்டும். இதை அடிப்படையாக வைத்துத்தான் மத உச்சத் தலைவர் அதாவது Supreme Leader என்ற பதவி உருவானது. அதை கொமேனிதான் முதலில் வகித்தார். பிற இஸ்லாமிய நாடுகளில் குறிப்பாக சன்னி பிரிவு இஸ்லாமிய நாடுகளில் மதத் தலைவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடப்பதில்லை.
ஈரானுக்கும் பிற இஸ்லாமிய நாடுகளுக்கும் மேலும் பல வேறுபாடுகளைப் பார்க்கலாம். அரபு நாடுகளில் அரபிதான் மொழியாக உள்ளது. ஆனால் ஈரானில் பார்சிதான் மொழி. அது அரபு நாடும் கிடையாது. பாரசீகம். ஈரானின் வரலாறு இஸ்லாத்திற்கு முந்தைய பேரரசுகளை உள்ளடக்கியது. இதற்கு நேர்மாறாக, சவுதி அரேபியா உள்ளிட்ட பெரும்பாலான அண்டை நாடுகள் அரபு நாடுகள். இந்த மொழி மற்றும் இன வேறுபாடும் ஈரானை அரபு உலகிலிருந்து தனிமைப்படுத்திக் காட்டுகிறது.
முஸ்லிம் நாடுகள் ஏன் அமெரிக்காவுடன் இணக்கமாக உள்ளன?

பெரும்பாலான அரபு நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அமெரிக்காவைச் சார்ந்திருக்கின்றன. சவுதி அரேபியா, 1945 முதல் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை வைத்துள்ளது. நாங்க எங்க எண்ணெய்யைத் தர்றோம்.. பதிலுக்கு நீங்க பாதுகாப்பு கொடுங்க என்பதே இவர்களின் தாரக மந்திரம்.
எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகியவை அமெரிக்காவிலிருந்து பெரும் ராணுவ உதவியைப் பெறுகின்றன. ஒரு நேரத்தில் இஸ்ரேலுடன் இவை மோதல் போக்கில் இருந்து வந்தன. யாசர் அராபத் மறைவுக்குப் பின்னர் அது மாறி விட்டது.
இந்த நாடுகள் இஸ்ரேலை முழுமையாக ஆதரிக்காவிட்டாலும், ஈரானின் எழுச்சி தங்களுக்கு ஆபத்தாக முடியும் என்று கருதுகின்றன. இதனால் வேறு வழியில்லாமல் அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணக்கமாகப் போய்க் கொண்டுள்ளன. இதே நிலையில்தான் பல நாடுகள் உள்ளன.
ஆனால் ஈரான் யாரையும் எப்போதும் எதிர்பார்த்துக் காத்திருந்தது கிடையாது. தனது பாதுகாப்புக்கு தானே பொறுப்பு என்றுதான் அது தன்னை எப்போதும் பலமாக பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சித்து வந்துள்ளது. தனக்கு சாதகமாக பெரும்பாலான முஸ்லீம் நாடுகள் இல்லை என்ற நிதர்சனத்தையும் ஈரான் புரிந்தே வைத்திருக்கிறது. இதனால்தான் அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகியவற்றில் அது முழுமையாக தன்னைத் தானே நம்பி செயல்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் போராட்டம் என்பது மதக் கோட்பாடு, பாரசீகப் பெருமிதம் மற்றும் எதிர்ப்பு அரசியல் ஆகியவற்றின் கலவையாகும். மற்ற நாடுகள் நிலைத்தன்மைக்காக அமெரிக்காவுடன் கைகோர்க்கும்போது, ஈரான் தனது தனித்துவமான புரட்சிகர அடையாளத்தைத் தக்கவைக்கப் போராடுகிறது. இதுவே மத்திய கிழக்கில் தீராத பதற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.
Iran Vs Israel : ஒரு காலத்தில் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் நல்ல தோஸ்த் தெரியுமா?
Khamenei Assasination: விரைவில் வரலாறு காணாத கொடூரத் தாக்குதல்.. ஈரான் எச்சரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: வாழ்த்துவதில் முந்திய பிரதமர் மோடி.. லேட்டாக வந்த ராகுல் காந்தி!
Poem: அதிகாரத்தின் குழந்தை.. ஆனாலும் எளிமையின் அடையாளம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!
களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்
Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?
ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!
வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை
{{comments.comment}}