தமிழகத்திற்கு இப்போதே தேர்தல் பொறுப்பாளரை நியமித்த பாஜக.. மாஸ்டர் பிளான் என்னவோ!

Su.tha Arivalagan
Sep 25, 2025,05:15 PM IST

சென்னை : பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் வேலைகளை கவனிக்க அந்த மாநிலத்திற்க தான் தற்போது தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமித்திருக்க வேண்டும். ஆனால் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்திற்கும் சேர்த்தே தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 


இதை மேலோட்டமாக பார்த்தால், தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கையில் இப்போதே எதற்கு தேர்தல் பொறுப்பாளர்கள்? என்ற கேள்வி வரலாம். அல்லது தேர்தல் நடக்க போகும் அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தமாக பொறுப்பாளர்களை நியமித்திருக்கலாம். இது ஒரு பெரிய விஷயமா என கேட்க தோன்றலாம். ஆனால் இதற்கு பின்னால் பாஜக போட்டிருக்கும் மாஸ்டர் பிளான் இருப்பதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் என்ன பிளான் இருக்கிறது என்கிறீர்களா? வாங்க கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.




அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி சென்ற போதும், தற்போது தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டில்லி சென்று அமித்ஷாவை சந்தித்த போதும் தேர்தல் பிரச்சார வியூகங்கள் குறித்து தான் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாம். இதன் தொடர்ச்சியாக தான் இந்த தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனமும். அக்டோபர் 05ம் தேதி முதல் நயினார் நாகேந்திரன் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்க போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். அவரது ஆரம்ப கட்ட சுற்றுப் பயணத்தில் அவருடன் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே கிட்டதட்ட 160 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்து விட்டார். இப்போது நயினார் நாகேந்திரனும் பிரச்சாரத்தை துவக்க போகிறார். அண்ணாமலையை திமுக தான் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற சந்தேகங்கள் அரசல் புரசலாக எழுவதால், திமுக.,விற்கு எதிராக பிரச்சார பீரங்கியாக அண்ணாமலையை தான் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். பிரச்சாரம் வழக்கமாக தேர்தல் காலத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் செய்வது தான். ஆனால் பாஜக.,வின் பிளான் இது கிடையாது. 


தேர்தல் பிரச்சாரம் தீவிரமடையும் சமயத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் அந்தந்த தொகுதி பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம். தொகுதி பிரச்சனைகள் என்று வரும் போது அதில் திமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள், நிறைவேற்றப்படாத திட்டங்கள், வெறும் அறிவிப்போடு இருக்கும் திட்டங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து ஒவ்வொரு தொகுதியிலும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக தான் இந்த தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம். ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் பிரச்சனைகளையும், அந்த தொகுதிக்கு திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் கணக்கெடுத்து பட்டியல் தயார் செய்வது தான் இந்த தேர்தல் பொறுப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முதல் வேலையாம்.


தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் பிரச்சனைகளை மக்கள் முன் வைக்கும் போது அது வாக்காளர்களின் மனங்களில் மிகப் பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும். இது திமுக வெறுப்பை அதிகப்படுத்துவதுடன், திமுக.,வின் மிகப் பெரிய பலமாக இருக்கும் சிறுபான்மையினர் ஓட்டுக்களையும் பதம் பார்ப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள் திமுக அரசிற்கு எதிரான மக்களின் மனநிலையையும், கேள்விகளையும் அதிகரிக்க செய்து, திமுக.,விற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுக்கும். பணம், தேர்தல் வாக்குறுதி என்பதை தாண்டி உள்ளூர் பிரச்சனைகள் தமிழக சட்டசபை தேர்தலில் பிரதான இடத்தை பிடிக்க செய்வதற்காக தான் பாஜக இப்படி ஒரு பிளானை போட்டுள்ளதாம்.