பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

Su.tha Arivalagan
Nov 15, 2025,05:01 PM IST

டில்லி : பீகார் சட்டசபை தேர்தல் முடிந்து, முடிவுகளும் வந்து விட்டது. எதிர்பார்த்ததை போலவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று விட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நித்திஷ் குமார், 10வது முறையாக பீகாரின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த முறை முதல்வர் ஆக மாட்டார் என பேச்சுக்கள் அடிபட்டாலும், பீகார் முதல்வர் பதவிக்கு பாஜக.,வின் ஒரே சாய்ஸ் நித்திஷ் குமார் மட்டும் தான் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஒரு வழியாக பீகார் தேர்தல் முடிந்து விட்டது, இனி அடுத்து பாஜக.,வின் முழு கவனமும் 2026 ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தான் இருக்கும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தான் கிடையாது. தமிழகத்திற்கு முன் பாஜக.,வின் கவனமும், முன்னுரிமையையும் பெற போவது வேறு மாநிலம் தான். 


பாஜக., அடுத்து தேர்தலில் கவனம் செலுத்த போகும் மாநிலங்களில் பட்டியலில் நான்காவது இடத்தில் தான் தமிழ்நாடு உள்ளது. என்னங்க ஆச்சரியமா இருக்கா? உண்மை தான். 




தமிழகத்தில் 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் சட்டசபை தேர்தல் நடத்தப்படும். ஏப்ரல் கடைசி வாரத்தில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அசாமை பொருத்தவரை ஏற்கனவே அங்கு பாஜக., கூட்டணி ஆட்சி தான் நடந்து வருகிறது. அதனால் இந்த முறையும் பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு தான் அதிக வாய்ப்புக்கள் உள்ளது.


இந்த பக்கம் அசாம் தேர்தல் நடக்கும் அதே சமயத்தில், அந்த பக்கம் பாஜக பல காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் மேற்குவங்க சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு பல காலமாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி தான் நடந்து வருகிறது. பாஜக.,வை ஆட்சிக்கு வரவே விடக் கூடாது என பிடிவாதமாக இருக்கும் அரசியல் கட்சி தலைவர்களில் மம்தாவும் ஒருவர். ஆனால் அங்கு எப்படியாவது இந்த முறையை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பாஜக மிக தீவிரமாக உள்ளது. இந்த முறை பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அசாமை விடமும் மேற்குவங்க தேர்தலில் தான் பாஜக., தீவிரம் காட்ட உள்ளது.


அதற்கு அடுத்த படியாக புதுச்சேரி. இங்கும் 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுடன் சேர்த்து தான் புதுச்சேரி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படுவது தான் வழக்கம். இந்த முறையும் ஏப்ரல் மாத இறுதியில் இங்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரியிலும் பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி தான் நடந்து வருகிறது. அதற்கு அடுத்த படியாக தான் தமிழக சட்டசபை தேர்தல். இங்கு திமுக தலைமையிலான ஆட்சி நடக்கிறது.


2026ல் இறுதியாக மே மாதத்தில் நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தல். இங்கு இடதுசாரிகள் கட்சி தான் ஆட்சியில் உள்ளது. இடதுசாரிகள் வலுவாக இருக்கும் ஒரே மாநிலம் கேரளா மட்டுமே. அதே போல் பாஜக தடம் பதிக்க முடியாமல் போராடும் மாநிலங்களில் ஒன்றாகவும் கேரளா உள்ளது. இங்கு பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்றாலும் இடதுசாரிகளுக்கு பெரும்பான்மை கிடைக்க விடாமல் தொங்கு சட்டசபை அமைவதற்கான சூழலை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பும் குறைவுதான். இதனால் காங்கிரஸ் அங்கு ஆட்சிக்கு வராமல் போனாலே கூட அது பாஜகவுக்கு சந்தோஷம்தான்.


2026ம் ஆண்டில் அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி, தமிழகம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இருந்தாலும் பாஜக அதிக கவனம் செலுத்த நினைத்திருப்பது மேற்குவங்கம் மற்றும் தமிழகம் ஆகிய இரண்டில் மட்டும் தான். மற்ற மூன்று மாநிலங்களில் கேரளா தவிர மற்ற இரண்டு மாநிலங்களான அசாம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி தான் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.