தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
பாட்னா : 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் துவங்கி, தற்போது நடந்து முடிந்துள்ள பீகார் சட்டசபை தேர்தல் வரை பல மாநில தேர்தல்களிலும் பாஜக தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறது. லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என தேர்தல் என்றாலே பாஜக., தான் ஜெயிக்கும் என சொல்லும் அளவிற்கு தொடர் வெற்றிகளை பாஜக பதிவு செய்து வருகிறது. பாஜக.,வின் இந்த தொடர் வெற்றிக்கு அவர்கள் கையாண்டு வரும் வெற்றி ஃபார்முலா தான் காரணம் என சொல்லப்படுகிறது.
ஃபார்முலா என்றதும் யாருக்கும் தெரியாத ரகசியம் ஏதோ இருக்கிறது என நினைத்து விடாதீர்கள். அனைவரும் அறிந்த ரகசியம் தான் அது. எதிர்க்கட்சிகளின் பாணியில் சொன்னால் வாஷிங் மெஷின் பாலிட்டிக்ஸ்தான்.. !
அதாவது, பாஜக ஒரு மாநிலத்தில் கால் ஊன்றி, ஆட்சியில் அமர நினைத்த விட்டால் முதலில் அங்குள்ள பிரதான பிராந்திய கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைக்கும். அந்த கட்சியின் தலைவரை முன்னிலைப்படுத்தியே ஆரம்ப கால தேர்தல்களை எதிர்கொண்டு, வெற்றிகளை பதிவு செய்யும். இது ஒர்க் அவுட் ஆன பிறகு, அடுத்த தேர்தலில் அந்த கட்சியையும், கட்சி தலைவரையும் ஓரம் கட்டி விட்டு, தங்கள் தலைமையில் கூட்டணி என்பதை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்து, ஆட்சியை பிடித்து விடும். பாஜக அணி சேர்ந்த கட்சிகளின் நிலை அதற்குப் பிறகு அதோ கதிதான்.. இந்த வெற்றி பார்முலாவைத்தான் தொடர்ந்து பாஜக வெற்றிகரமாக கடைப்பிடித்து வருகிறது.
இந்தியாவின் வட மாநிலங்கள் பலவற்றிலும் பாஜக ஆட்சியில் இருப்பதற்கு இந்த ஃபார்முலா தான் கைகொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதை தற்போது பீகாரிலும் கையாண்டு வெற்றி கண்டுள்ளது பாஜக. பீகாரில் 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி தான் நடந்து வருகிறது. அதற்கு முன்பு வரை லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தான் பீகாரில் மாறி மாறி ஆட்சி நடத்தி வந்தன.
2015ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நித்திஷ் குமாரின் கட்சி 115 இடங்களில் தனித்து போட்டியிட்டது. பாஜக தனியாக 91 இடங்களில் போட்டியிட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு 2020 ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்த பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் போட்டியிட்டன.
ஆனால் 2025 சட்டசபை தேர்தலில் பாஜக, ஐஜத இரு கட்சிகளுமே தலா 101 இடங்களில் போட்டியிட்டன. இதில் பாஜக 96 தொகுதிகளிலும், ஐஜத 87 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஐஜத இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதோடு இந்த முறை பாஜக சொல்பவர் தான் பீகாரின் அடுத்த முதல்வராக அமரவும் வாய்ப்புள்ளது. பீகாரில் தனிப்பெரும் கட்சியாகவும் பாஜக உருவெடுத்துள்ளது. இதனால் இனி பீகாரில் பாஜக.,வின் கை தான் ஓங்கி இருக்கும். வழக்கமான பாஜக.,வின் வெற்றி ஃபார்முலா பீகாரிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதே பார்முலாவை அடுத்து நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக கையாள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போதே பாஜக.,வின் துணை இல்லை என்றால் அதிமுக.,வால் தனித்து வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவைத் தவிர்த்து விட்டு அதிமுகவால் செயல்படவும் முடியாத நிலை. 2021 தமிழக சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் ஆகிய இரண்டிலும் இது நிரூபணம் ஆகி உள்ளது. தற்போது அதிமுக உடன் கூட்டணி வைத்திருக்கும் பாஜக., இங்கும் தனது வளர்ச்சியை அதிமுகவை வைத்தே நடத்திக் கொண்டிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
உண்மையில் பாஜகவின் அரசியலை சமாளித்து தவிடு பொடியாக்கத் தெரியாமல், முடியாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தத்தளிக்கின்றன என்பது நிதர்சனம்.