கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

Su.tha Arivalagan
Mar 10, 2026,05:21 PM IST

சென்னை : கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் மார்ச் 15ம் தேதியன்று டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ இன்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.


2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணை உச்ச கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி மாதம் டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கனவே இரண்டு முறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், மார்ச் 10ம் தேதியான இன்று மீண்டும் ஆஜராகும் படி விஜய்க்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பி இருந்தது.




ஆனால் தவெக சார்பில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த வேட்பாளர்களுடனான நேர்காணல் இன்று நடைபெற்றது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. வேட்பாளர்கள் நேர்காணல் காரணமாக வேறு நாளில் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ.,யிடம் விஜய் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. அதோடு டில்லிக்கு பதிலாக சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி அளிக்கும் படியும் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராவதற்கு விஜய்க்கு சிபிஐ விலக்கு அளித்துள்ளது. அதோடு மார்ச் 15ம் தேதியன்று டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ, விஜய்க்கு இன்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் மார்ச் 15ம் தேதியன்று விஜய் டில்லி உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யை தொடர்ந்து மார்ச் 17ம் தேதி திமுக.,வின் செந்தில் பாலாஜியும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.