அன்பான “கூகுள் டிரான்ஸ்லேட் குடும்பத்தினர்” மற்றும் ஜூனூன் தமிழ் ரசிகர்களே!

Su.tha Arivalagan
Sep 30, 2026,04:58 PM IST

- சு.தா.அறிவழகன்


ஒரு மொழியில் இருக்கும் கருத்துகளையும் உணர்வுகளையும் இன்னொரு மொழிக்குக் கொண்டு சேர்ப்பதுதான் மொழிபெயர்ப்பு. ஆனா, நம்ம ஊர்ல சிலர் பண்ற மொழிபெயர்ப்பைப் பார்த்தா, "அடப்பாவிகளா, அதுக்கு அந்த மொழியே பேசாம இருந்திருக்கலாமே!"னு தான் தோணும்.


அதுவும் இந்த டிஜிட்டல் காலத்துல, எல்லாரும் ‘கூகுள் டிரான்ஸ்லேட்’டை நம்பி இறங்கி, தமிழை வச்சு செய்யுற கொலமாஸ் காமெடி இருக்கே... தாங்க மிடியடா சாமி!


சிலர் ஆங்கிலத்துல இருக்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் அட்சரம் பிசகாம தமிழாக்கம் பண்றேன்னு கிளம்புவாங்க. 

"I am dynamic"** அப்படிங்கறதை, "நான் இயக்கவியல் கொண்டவன்"னு மொழிபெயர்த்து வச்சிருப்பாங்க. 




மொழிபெயர்ப்புனாலே நமக்கு உடனே ஞாபகம் வர்றது ஒருகாலத்துல கொடிகட்டிப் பறந்த ‘ஜூனூன் தமிழ்’ தான்! மறக்க முடியுமா தலைவா அந்தத் தமிழ்க் கொலையை!


அந்தக் காலத்துல ‘ஜூனூன்’, ‘நாகின்’னு இந்தி சீரியல்களைத் தமிழில் டப் பண்ணிப் போடுவாங்க. அதுல வர்ற வசனங்கள் எல்லாம் தனி ரகம். இந்தி வசனத்தின் உதட்டசைவுக்கு ஏத்த மாதிரி தமிழை வளைச்சு நெளிச்சு மொழிபெயர்ப்பாங்க. "தமிழ் படாத பாடு பட்டது இவர்களின் வசம்பு தேய்க்காத வாய்களில் சிக்கி" (கடைசில என்னையும் ஜூனூன் தமிழில் எழுத வச்சிட்டீங்களேடா!)


"நீ என்னை ஏமாற்றிவிட்டாய்" அப்படின்னு இயல்பா சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்.. ஆனால் அவர்கள் எப்படிப் பேசுவார்கள் தெரியுமா.. ஏமாற்றி விட்டாய் நீ என்னை என்று ரிவர்ஸில் போய் நக்கல் பண்ணுவாங்க.

 

இதில் உச்சக்கட்டம் என்னவென்றால், கோபத்தில் பேசும்போது கூட "ஹே... பஸ்! நிறுத்து உன் பக்வாஸை!" என்றுதான் கத்துவார்கள். இதைக் கேட்கும்போதே நமக்கு சிரிப்பு தாங்காது.. சில்லு சில்லா தமிழை சிதைச்சு விளையாடிய காலம் அது.. கொரோனா காலத்தை விட கொடுமையானது.


கடைகளோட போர்டுலயும், விளம்பரங்கள்லயும் பண்ற மொழிபெயர்ப்பு அநியாயங்கள் தனி லெவல்:


Fine Dining என்பதை "அபராத உணவு" என்று மொழிபெயர்த்த கொடுமையெல்லாம் நம்ம ஊரில் அரங்கேறியிருக்கிறது. (ஒருவேளை முழசா சாப்பிட்டு முடிக்காட்டி ஃபைன் போடுவாங்களோ என்னமோ?)


மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை.. அதை கொலைக்கலனாக மாற்றி விளையாடியவர்கள்தான் அதிகம். மொழிபெயர்ப்புங்கிறது வெறும் வார்த்தைகளை மாத்துற வேலை இல்லைங்க; அது ஒரு உணர்வு! ஆங்கிலத்திலோ அல்லது வேற மொழியிலோ இருக்கிற நகைச்சுவையையோ, கோபத்தையோ தமிழ்ல சொல்லும்போது, நம்ம ஊர் மக்களோட பேச்சு வழக்குக்கு ஏத்த மாதிரி "சகஜமா" சொல்லணும்.


இல்லன்னா... கூகுள் டிரான்ஸ்லேட்டும், ஜூனூன் தமிழும் சேர்ந்து தமிழை என்ன பாடுபடுத்தியதோ, அதே நிலைமைதான் தொடரும்!


இன்னிக்கு உலக மொழிபெயர்ப்பு நாள்.. அதுக்காண்டிதான் இந்தக் கட்டுரை.. படிச்சுட்டு நல்ல மொழிபெயர்ப்பாளராக மாற முயற்சி பண்ணுங்க.. அந்த மொழிக்குப் புண்ணியமாகப் போகும்.


(இந்தக் கட்டுரையைப் படித்து யாராவது "என் மனசு ரத்தமாகிறது" என்று மொழிபெயர்த்தால், அதற்கு ஆசிரியர் பொறுப்பல்ல!)