ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு

Su.tha Arivalagan
May 07, 2026,10:38 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் நீடித்து வருவதால், தவெகவினர் ஜல்லிக்கட்டு போராட்டம் போல போராட்டத்தில் குதிக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. மறுபக்கம், தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரிக்குமாறு மத்திய உளவுத்துறை, தமிழ்நாடு காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.


தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ளது. அக்கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டதால், வேறு யாரிடமும் ஆதரவு கேட்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுக்கு ஆதரவாக வந்துள்ளது. வேறு யாரும் இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை.




இதனால் போதிய ஆதரவைத் திரட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது தவெக. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரிக்குமாறு காவல்துறைக்கு மத்திய உளவுத்துறை  அறிவுறுத்தியுள்ளது. போராட்டங்கள் நடைபெறக் கூடிய சூழல் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாம்.


மறுபக்கம் சென்னை மெரீனா கடற்கரையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது போல தவெகவினர் திரண்டு போராட்டம் நடத்தலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதையடுத்து உழைப்பாளர் சிலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் கூடுதலாக நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.