ஸ்ரீராமரே வழிபட்ட நவக்கிரக கோவில்.. சென்னை to ராமேஸ்வரம் ஒரு ஆன்மீக பயணம் (பகுதி-6)
- எம்.எல்.பிரபா
வராகி அம்மன் கோவிலில் இருந்து அடுத்ததாக நாங்கள் தேவிபட்டினம் நவபாஷாண நவகிரக கோவிலுக்கு சென்றோம். இந்த கோவில் ராமநாதபுரத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இராமாயண காலத்தில்"ஸ்ரீ ராமரே" இந்த நவக்கிரக கோயிலை வழிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இன்று வரை பக்தர்கள் தங்களின் தோஷங்கள் நீங்கவும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தும் இந்த கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர். இந்த கடலே புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் கடலில் ஸ்ரீ ராமரே தனது கைகளால் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் உள்ளது. இவற்றிற்கு நவபாஷாண சக்தி இருப்பதால் "நவபாஷாண நவகிரகங்கள்" என்று அழைக்கப்படுகின்றது.
இங்கே ராமபிரானுக்கும் சனி தோஷம் நீங்கியதாகவும், சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் உள்ள ராவணனை யுத்தம் செய்து வெற்றி பெற்று சீதாபிராட்டியை மீட்டு வந்ததாகவும் தல வரலாறு கூறப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டு கடல் நீரில் இருந்தாலும் இன்னும் இந்த நவகிரகங் களுக்கு சேதம் ஏற்படாமல் நல்ல நிலைமையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு கடல் நீரில் நீராடி நவதானியங்களை நவகிரகங்களுக்கு சமர்ப்பித்து ஒன்பது முறை சுற்றி வந்தால் பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம் போன்றவை நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி,தை, மகாளய அமாவாசை போன்ற நாட்களில் பக்தர்கள் ஏராளமாக கூடுகின்றனர். சிரார்தம், தர்ப்பணம் போன்றவைகளை இத்தலத்தில் கொடுக்கின்றனர்.
எல்லா நாட்களிலும் அதிகாலை 4:30 மணி முதல் நீராடி நவகிரகங்களை தரிசனம் செய்யலாம். 12 மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக கடலின் நீர்மட்டம் அதிகரிக்கிறது. தண்ணீர் கரையில் மேல் பகுதி வரை உயருகிறது. அப்போது நவக்கிரகம் தண்ணீரில் மூழ்கு கிறது விடியும் பொழுது தண்ணீர் தானாகவே கடலுக்குள் சென்று விடுகிறது. இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
கடலில் இறங்கி நவகிரகத்தை அர்ச்சனை செய்து கும்பிடும் பொழுது உடல் சிலிர்க்கிறது. அந்த அனுபவத்தை வாயினால் சொல்ல இயலாது. அவரவர்கள் மட்டுமே உணர முடியும். ஆதலால் நீங்களும் ஒருமுறை சென்று நவபாஷாண நவகிரகங்களை தரிசனம் செய்து தோஷங்கள் நீங்கி நவகிரகங்களில் அருளைப் பெற்று வாருங்கள்.
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)