Chettinadu Kitchen: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடியில்.. இது சைவமா ...அசைவமா??
- மணிமா
சிப்பி காளான் கிரேவி
சைவ சிப்பி காளான் கிரேவி மணத்தில்....
அசைவ குடல் கறி கிரேவி ருசியில் ....
செட்டிநாடு அடுப்படியின் சுவையான ரெசிபிகளுக்கு அன்போடு வரவேற்பு தரும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் .... உங்கள் மணிமாவின் ... வணக்கங்களும் வாழ்த்துக்களும் .....
வீட்டில் நாம் நித்தம் உபயோகிக்கும் சமையல் பொருட்களைக் கொண்டு அளவில்லா அன்பையும் மகிழ்வோடு சேர்த்தால் சுவையான சூப்பரான செட்டிநாடு ரெசிபி தயார்.
சிப்பி காளானில் கிரேவி செய்வது பார்க்கப் போகிறோம் மிக மிக எளிது ஆனால் ருசியில் குடல் கறி கிரேவி போல் இருக்கும். இதற்கு பட்டன் காளானும் உபயோகப்படுத்தலாம் ஆனால் சிப்பி காளான் தான் அசைவம் போலவே இருக்கும் ..
வாங்க வாங்க அடுப்படிக்குள் போகலாம் .......
தேவையான பொருட்கள்
சிப்பி காளான் 500 கிராம். இரண்டு பாக்கெட்
பெரிய வெங்காயம் இரண்டு
அல்லது சின்ன வெங்காயம் உரித்தது 30
தக்காளி பெரிய சைஸ் இரண்டு
ஒரு பிடித்தபடி கொத்தமல்லி தழை
வெள்ளைப் பூண்டு பத்து பல்
இஞ்சி தோல் சீவி ஒரு விரல் நீளம்
இரண்டு பச்சை மிளகாய்
சிவப்பு வற்றல் மிளகாய் எட்டு
மிளகு அரை ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன். சோம்பு பெரிய சீரகம் அரை ஸ்பூன்
கிராம்பு இரண்டு
பட்டை மிகச் சிறிது
முந்திரிப் பருப்பு நான்கு
தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் 50 மில்லி
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
கருவேப்பிலை 10 இலைகள்
நெய் அரை ஸ்பூன் அல்லது வெண்ணை சிறிது
அரை ஸ்பூன் சீனி அஸ்கா
செய்முறை பார்ப்போம் (மிக மிக எளிது) ..
முதலில் வெதுவெதுப்பான நல்ல தண்ணீரில் இரண்டு முறை காளான்களை அரிந்து கழுவி எடுக்கவும்.
அடுத்து மிக்ஸியில் பெரிய வெங்காயத்தை உரித்து ஒன்று இரண்டாக நறுக்கி சேர்க்கவும். சின்ன வெங்காயமானால் முழுதாக உரித்து சேர்க்கவும் வெள்ளை பூண்டு உரித்து சேர்க்கவும்.
தக்காளியை நான்காக நறுக்கி தலைப்பகுதியை நீக்கி விட்டு சேர்க்கவும். கொத்தமல்லி தண்டுடன் இரண்டு மூன்று முறை கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்து மிக்ஸியில் சேர்க்கவும் உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்.
வற்றல் மிளகாய் சோம்பு, சீரகம், மிளகு இவற்றை பச்சையாக அப்படியே அரைப்பதற்கு மிக்ஸியில் சேர்க்கலாம்.
எண்ணெய் விடாமல் லேசாக சூடு வர வறுத்து கருகி விடாமல் எடுத்து மிக்ஸியில் சேர்க்கவும் தண்ணீர் விட்டு எல்லாவற்றையும் மையாக அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தை வைக்கவும். மண் சட்டியில் செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.
50 மில்லி எண்ணெய் விட்டு காய்ந்ததும் (தேங்காய் எண்ணெய் எனில் ருசி கூடுதலாக இருக்கும்) .கடுகு போட்டு வெடித்ததும், உளுந்தம் பருப்பு போட்டு சிவந்ததும், கருவேப்பிலைகள் போட்டு அரைத்ததை ஊற்றவும். முக்கால் கிளாஸ் அளவு, மிக்ஸிக்குள் தண்ணீர் விட்டு அலசி அதனையும் சேர்க்கவும். அடுப்பு மிதமான தீயில் இருக்கட்டும்.
நன்கு கொதிக்கும் போது நான்காக கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை போடவும் (கருவேப்பிலை போட்டவுடன் உடனே பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்) .
கிரேவி கெட்டியாக இருந்தால் அடியில் பிடித்து விடும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அரைத்தது கெட்டியாக இருந்தால் இன்னும் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும் பொழுது குமிழி போல் கொதித்து வரும். அப்போது காளான்களை உள்ளே சேர்க்கவும்.
மூடி வைக்கவும். நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விடவும். மணக்க மணக்க பத்து நிமிடத்தில் கிரேவி ரெடி. தீயை அணைத்தபின் நெய் அரை ஸ்பூன் அல்லது சிறிது வெண்ணெய் அதை உள்ளே விடவும். ஒருமுறை கிளறிவிட்டு மல்லித்தழை தூவி பவுலுக்கு மாற்றி விடவும்..
இந்த சுவையான கிரேவி இட்லி தோசை சப்பாத்தி பூரி மற்றும் சாதத்தில் பிசறி சாப்பிட அருமையாக இருக்கும். சாப்பிடுவதற்கு பரிமாறிய பின் கண்ணைத் திறந்து கொண்டு சாப்பிட்டால் காளான் கிரேவியாக தெரியும். கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டால் ஆட்டுக்குடல் கிரேவி போல் மணமும் ருசியும் இருக்கும்
அன்புடன் சமைத்து ஆசையுடன் பறிமாறி, இன்பமுடன் உண்டு இனிமையாய் இளைப்பாறி மகிழுங்கள் .....
அடுத்து ஒரு இனிப்பான ரெசிபியுடன் வரும் வாரம் உங்களை சந்திக்கிறேன்
உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு
.... மணி மா.....