Chettinadu Recipes: வாய்க்குச் சுவையான ருசியில் எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி

Su.tha Arivalagan
Nov 27, 2026,12:08 PM IST

- மணிமா


செட்டிநாட்டின் அனைத்து ரெசிபிகளுக்கும் மகத்தான வரவேற்பு தந்து மகிழ்வில் ஆழ்த்தும் இனிய நல் உள்ளங்களுக்கு இதயம் கனிந்த வணக்கம் சொல்லிக் கொள்வது உங்கள் மணிமா.


இன்று நாம் பார்க்கப் போவது பிஞ்சு கத்திரிக்காயில் பிரியமான கிரேவி. (செட்டிநாட்டில் எண்ணெய் கத்திரிக்காய் கெட்டி குழம்பு) செய்வது மிகவும் எளிது மிகவும் ருசியானது. வாருங்கள் அடுப்படிக்குள்  செல்வோம்.

 

தேவையான பொருட்கள்




பிஞ்சு கத்திரிக்காய் அரை கிலோ

சிறிய வெங்காயம் உரித்தது 20

அல்லது பெரிய வெங்காயம் ஒன்று பொடியாக அரிந்து கொள்ளவும்

வெள்ளைப் பூண்டு பல் உரித்தது 20

சிறிய தக்காளி ஒன்று

சாம்பார் தூள் இரண்டு ஸ்பூன் 50 கிராம்

புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

கருவேப்பிலை 10 இதழ்கள்

கொத்தமல்லி தழை சிறிதளவு

மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் மிகச் சிறிதளவு

தேவையான அளவு உப்பு

வெல்லம் துருவியது கால் ஸ்பூன் அல்லது நாட்டு சக்கரை கால் ஸ்பூன்

தாளிப்பதற்கு

சிறிது கடுகு, சிறிது உளுந்தம் பருப்பு, சிறிது சோம்பு என்ற பெருஞ்சீரகம், மிகச் சிறிதளவு வெந்தயம் ஒரு பத்து,

எண்ணெய் ஆறு ஸ்பூன்


செய்முறை


கத்திரிக்காயின் மேல் காம்பை மட்டும் நீக்கிவிட்டு முழு கத்திரிக்காயாக பின்பக்கமாக வகிர்ந்து தண்ணீருக்குள் போடவும். அப்போதுதான் கத்திரிக்காய் காரல் (கசப்பு) இல்லாமல் இருக்கும். புளி நான்கு கப் தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

 

ஒரு கடாயில் ஆறு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமான தீயில் தண்ணீருக்குள் இருக்கும் கத்தரிக்காய்களை எடுத்து நன்கு துடைத்து விட்டு எல்லா கத்திரிக்காய்களையும் எண்ணெய்க்குள் சேர்த்து பிரட்டி பிரட்டி விடவும். ஐந்து நிமிடம் கழித்து எடுத்து தனியே வைக்கவும். பாதி வெந்து கிடைத்து விடும்.


கடாயில் மீதி இரண்டு ஸ்பூன் எண்ணெய் இருக்கும். அதில் கடுகு உளுந்தம் பருப்பு சோம்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் அனைத்தையும் சேர்க்கவும். அடுத்து கருவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் பூண்டு இரண்டாக நறுக்கி அவற்றையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.


தக்காளியை நறுக்கி சேர்க்கவும். எல்லாம் வதங்கிய பின் தேவையான அளவு உப்பையும், சாம்பார் தூள் இரண்டு ஸ்பூனையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து விட்டு நன்கு கொதி வந்த பிறகு எடுத்து வைத்துள்ள கத்திரிக்காய்களை உள்ளே சேர்த்து விடவும்.




ஐந்து நிமிடத்தில் ஒன்று சேர்ந்து ஒரு கிரேவியாக வந்துவிடும். பரிமாறுவதற்கு எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தூள் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும். கத்திரிக்காய்களை பிரட்டி விடும்போது உடைந்து விடாமல் முழுக் கத்திரிக்காயாகவே இருக்க வேண்டும்.


கொத்தமல்லி தழை தூவி விடவும். அபாரமான மணத்தில் அட்டகாசமான ருசியில் எண்ணெய் கத்திரிக்காய் ரெடி.


சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் தயிர் சாதத்தோடு சாப்பிடவும் மற்றும் இட்லி தோசை சப்பாத்தி உடனும் நன்றாகவே இருக்கும்.


அன்போடு சமைத்து ஆசையோடு கூடி அமர்ந்து குடும்பத்தோடு குதூகலமாக சாப்பிட்டு மகிழுங்கள். மீண்டும் அருமையான ரெசிபி ஒன்றுடன் வரும் நாட்களில் உங்களை எல்லாம் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது என்றென்றும் அன்புடன் உங்கள் .......... மணிமா.


(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் மணிமா என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)