Paruppu Vadai: வெளியில் மழை பெய்யுதா.. கிச்சனுக்குள்ள வாங்க.. பருப்பு வடை செய்வோம்!

Nov 26, 2026,03:47 PM IST

- பசுங்கிளி


மாலை நேரத்து மெல்லிய சாரல் மழையும், கையில் ஒரு கோப்பைச் சுடச்சுடத் தேநீரும் இருக்கும்போது, நம் மனம் முதலில் தேடுவது என்னவாக இருக்கும்? சந்தேகமே இல்லாமல், மொறுமொறுப்பான சூடான பருப்பு வடைதான்!


வெளியே கரகரப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த மசால் வடையின் மணமே தெருவையே சுண்டி இழுக்கும். மசால் வடை மசால் வடைதாய்யா என்று வடிவேல் சிலாகித்தபடி தின்னுட்டே நடப்பாரே.. அதை நினைச்சுப் பாருங்க.. அப்பத் தெரியும் இந்த பருப்பு வடையின் அருமை.


டீக்கடை பெஞ்சுகள் முதல் வீட்டு விசேஷங்கள் வரை எல்லா இடங்களிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் சுவையான பருப்பு வடையை, நம் வீட்டிலேயே மிக எளிமையாகவும் ருசியாகவும் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.


தேவையான பொருள்கள்




1. கடலைப் பருப்பு (அ) பட்டாணிப் பருப்பு — ¼ கிலோ

2. சின்ன வெங்காயம் — 100 கிராம்

3. மல்லி இலை — 1 கைப்பிடி

4. கறிவேப்பிலை — 1 கைப்பிடி

5. பச்சை மிளகாய் (அ) வரமிளகாய் — 2

6. இஞ்சி — 1 துண்டு

7. பூண்டு — 10 பல்

8. சோம்பு — 1 டீஸ்பூன்

9. உப்பு — தேவையான அளவு

10. எண்ணெய் — பொரிப்பதற்குத் தேவையான அளவு


செய்முறை:


முதலில் கடலைப் பருப்பை நான்கு மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும். சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கிப் பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றையும் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.


பருப்பு நன்றாக ஊறிய பிறகு, தண்ணீரை முற்றிலுமாக வடித்து எடுத்துக்கொள்ளவும் (தண்ணீர் இருந்தால் வடை எண்ணெய் குடிக்கும்). மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு, சோம்பு மற்றும் ஊறிய பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தண்ணீர் விடாமல் சற்றுக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.




அரைத்த விழுதை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி, அதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய விடவும். எண்ணெய் காய்ந்ததும், மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து வட்ட வடிவமாகத் தட்டி எண்ணெயில் மெதுவாக இடவும்.


மிதமான தீயில் இரண்டு பக்கமும் நன்றாகப் புரட்டி விட்டு, பொன்னிறமாக மொறுமொறுவென வந்ததும் எடுத்து விடவும்.


சுவையான, மணமணக்கும் மொறுமொறு மசால் வடை தயார்! மாவை அரைக்கும்போது தண்ணீர் சேர்க்காமல் பார்த்துக்கொண்டால், வடை நீண்ட நேரம் மொறுமொறுப்பு குறையாமல் இருக்கும். தேங்காய்ச் சட்னி அல்லது காரச் சட்னியுடன் சூடாகப் பரிமாறினால், தட்டு காலியாவது தெரியவே தெரியாது. இன்றே உங்கள் வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாட்டையெடுத்து காட்டு.. தானாய் திருந்தட்டும்.. மதிகெட்ட செம்மறிக்கூட்டம்!

news

Paruppu Vadai: வெளியில் மழை பெய்யுதா.. கிச்சனுக்குள்ள வாங்க.. பருப்பு வடை செய்வோம்!

news

அட்வைஸ் சொன்னால் வாங்கிக்கொள்ள வேண்டும்!

news

sankarankovil special: சங்கரன்கோவில் என்றாலே உடனே என்ன நினைவுக்கு வரும் தெரியுமா?

news

காத்திருப்பு!

news

அறிவு என்னும் ஒளியை ஏற்றுமே.. அன்பை தீப ஒளியாய் பரப்புமே!

news

"ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணு".. சிந்திக்க ஒரு கதை (1)

news

ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாட்டில் முதல்முறையாக 15 நாட்கள் விடுப்பு அறிவிப்பு!

news

ஆளுநரை சந்தித்த உதயநிதி : கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்

அதிகம் பார்க்கும் செய்திகள்