அட்வைஸ் சொன்னால் வாங்கிக்கொள்ள வேண்டும்!

Nov 26, 2026,03:38 PM IST

- ஜெயபாரதி மதிவாணன்


2011-ஆம் ஆண்டு. அப்போது மாலை நேரங்களில் அடிக்கடி, ஏன் தினமும் மின்சாரம் தடைபடும். யார் வீட்டிலும் UPS கிடையாது. 


எங்கள் வீட்டில் ஒரு விளக்கை ஏற்றிவைத்துவிட்டு, உடனே வெளியே வாசலுக்குச் சென்று உட்கார்ந்துவிடுவேன். பக்கத்து வீட்டைச் சேர்ந்த நந்தினியும் அவள் தங்கை ராஜியும் ஓடிவந்து என் அருகில் உட்கார்ந்துகொள்வார்கள். எங்கள் அரட்டை ஆரம்பமாகிவிடும். 


நந்தினியின் வீட்டில் அவளுடைய அம்மாவும், வாடகைக்குக் குடியிருந்தவர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். எதிர் வீட்டில் இருந்த யுவஸ்ரீயின் வீட்டிலும் யுவஸ்ரீ, அவளுடைய அம்மா ஜோதி, அண்ணன் கௌதம் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்களும் எழுந்து சென்று அந்த இரண்டு வீட்டு அரட்டைக் கூட்டங்களிலும் கலந்துகொள்வோம். நிறைய பேசுவோம், சிரிப்போம். 


அப்போது என்ன பேசினோம் என்பது இப்போது நினைவில்லை. ஆனால், அந்த மாலை நேரங்கள் நினைவுக்கு வரும்போதெல்லாம் மனதுக்குள் மகிழ்ச்சி பொங்குகிறது. இப்போது எல்லோர் வீட்டிலும் UPS இருப்பதால் மின்தடை ஏற்படுவதே தெரியவில்லை. அதேசமயம், எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசும் அந்த அழகான சந்தோஷத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டோம்.




ஒருமுறை, ராஜி ஏழாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்தபோது, தன் அக்கா நந்தினியுடன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் ராஜியிடம், "லீவில் தினமும் ஐந்து திருக்குறள்களை மனப்பாடம் செய் பாப்பா. பெரிய வகுப்புகளுக்குச் சென்ற பிறகு கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது, திருக்குறள்களை மேற்கோள் காட்டி எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்று அறிவுரை கூறினேன்.


உடனே என் மகன் ராஜா, "நீங்கள் யாருக்கும் அட்வைஸ் செய்யாதீர்கள். உங்களுக்கு அந்தத் தகுதியே கிடையாது!" என்று சத்தம் போட்டான். நான் அமைதியாக இருந்துவிட்டேன்.


உடனே ராஜி, "ராஜா அண்ணா, எதற்கு அத்தையைத் திட்டுகிறீர்கள்? அவர்கள் நல்லதைத்தானே சொன்னார்கள்!" என்று கூறிவிட்டு என்னைப் பார்த்து, "நீங்கள் சொல்லுங்கள் அத்தை. எவ்வளவு அட்வைஸ் வேண்டுமானாலும் சொல்லுங்கள். நான் எதுவும் நினைக்க மாட்டேன். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவேன்!" என்றாள்.


ராஜா பலமாகச் சிரித்துக்கொண்டே, "இதற்குத்தான் உங்களிடம் சொன்னேன். அட்வைஸைக் கேட்டு அதன்படி நடப்பவர்களுக்குத்தான் சொல்ல வேண்டும். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுபவர்களுக்கு அட்வைஸ் சொல்லக்கூடாது!" என்றான். 


ராஜி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் 'ஙே' என்று விழித்தாள். நாங்கள் அனைவரும் பலமாகச் சிரித்தோம். சிறிது நேரத்தில் ராஜியும் எங்களுடன் சேர்ந்து சிரித்தாள்.


(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர்.  கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Paruppu Vadai: வெளியில் மழை பெய்யுதா.. கிச்சனுக்குள்ள வாங்க.. பருப்பு வடை செய்வோம்!

news

அட்வைஸ் சொன்னால் வாங்கிக்கொள்ள வேண்டும்!

news

sankarankovil special: சங்கரன்கோவில் என்றாலே உடனே என்ன நினைவுக்கு வரும் தெரியுமா?

news

காத்திருப்பு!

news

அறிவு என்னும் ஒளியை ஏற்றுமே.. அன்பை தீப ஒளியாய் பரப்புமே!

news

"ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணு".. சிந்திக்க ஒரு கதை (1)

news

ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாட்டில் முதல்முறையாக 15 நாட்கள் விடுப்பு அறிவிப்பு!

news

ஆளுநரை சந்தித்த உதயநிதி : கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்

news

திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆளுநர் ஆர்லேகருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு –தமிழக அரசு மீது புகார்

அதிகம் பார்க்கும் செய்திகள்