ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்தும் ஒலிக்கும் பாண்டிய மன்னரின் பக்தி!

Nov 24, 2026,03:28 PM IST
- ஜெயபாரதி மதிவாணன்

அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் கி.பி. 1446-ஆம் ஆண்டு தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டது. கோயிலைக் கட்டி முடித்த மன்னருக்கு ஒரு கவலை ஏற்பட்டது. 

ஐந்நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரும் இந்தக் கோயில் நிலைத்து நிற்க வேண்டுமே! ஒருவேளை எதிர்காலத்தில் கோயிலுக்குப் பழுது ஏற்பட்டால் அதைச் சரிசெய்து பாதுகாப்பவர் யார்? என்ற எண்ணம் அவர் மனதை உறுத்தியது. அந்தக் கவலையுடன் இறைவன் சன்னதியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி ஒரு வேண்டுகோளை வைத்தார். அப்படி அவர் யாரிடம் வேண்டினார்? அவரது வேண்டுதலைக் கல்வெட்டுச் செய்யுளாகப் பார்ப்போம்.

"ஆராயினும் இந்தத் தென்காசி
மேவுபொன் ஆலயத்து
வாராததோர் குற்றம் வந்தால், அப்போ(து) அங்கு வந்து அதனை
நேராகவே யொழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாரார் அறியப் பணிந்தேன்
பராக்கிரம பாண்டியனே!"

இந்தச் செய்யுளின் பொருள் என்ன தெரியுமா?





இனிவரும் ஐந்நூறு ஆண்டுகளிலோ, ஆயிரம் ஆண்டுகளிலோ, எப்போது வேண்டுமானாலும் இந்தத் தென்காசியில் அமைந்துள்ள அழகிய பொற்கோயிலில் ஏதேனும் பழுதோ குறையோ ஏற்பட்டால், அப்போது அங்கு நேரில் வந்து அந்தக் குறையைச் சரிசெய்து, கோயிலைப் பாதுகாக்கும் நல்ல உள்ளம் கொண்ட தர்மவான்களை, உலகத்தார் அனைவரும் அறியும்படி நான் பணிந்து வணங்குகிறேன் என்று பராக்கிரம பாண்டிய மன்னர் கூறுகிறார்.

இந்த அரிய செய்யுள் கோயிலின் கோபுர வாசல் சுவரிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இது வெறும் பாடல் அல்ல; மன்னரின் உண்மையான பக்தியையும், எதிர்காலத் தலைமுறையினர் மீதான அவரது நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் அற்புதமான வரிகள்.

தான் கட்டிய கோயிலைப் பாதுகாக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் கோயிலைப் பாதுகாக்க முன்வரும் மனிதர்களையே இறைவனுக்கு நிகராகப் போற்றுகிறார் இந்த மன்னர். என்னே அவரது உயர்ந்த சிந்தனை!

இன்றோ சிலர் கோயிலுக்குச் சிறிய தொகையை நன்கொடையாக வழங்கிவிட்டு, தங்களது பெயரைப் பெரிய எழுத்துகளில் கல்வெட்டில் பொறிக்க விரும்புகிறார்கள். ஆனால் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த இந்தப் பாண்டிய மன்னர், தனது பெயரைப் பெருமைப்படுத்துவதைவிட, எதிர்காலத்தில் கோயிலைப் பாதுகாக்கப் போகும் நல்ல மனிதர்களைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.

அன்றைய மன்னரின் பக்திக்கும், இன்றைய மனிதர்களின் விளம்பர நோக்கத்திற்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம்! உண்மையான பக்தி என்பது புகழைத் தேடுவதல்ல; காலத்தைக் கடந்தும் நிலைத்து நிற்கும் நல்ல செயல்களைச் செய்வதுதான் என்பதைப் பராக்கிரம பாண்டியர் நமக்கு உணர்த்துகிறார்.

இந்தக் கட்டுரையின் மையக்கருத்து, ஒரு மன்னர் தனது காலத்திற்காக மட்டும் கோயிலைக் கட்டவில்லை; ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அதைப் பாதுகாக்கும் மனிதர்களைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார் என்பதுதான். இந்த வரலாற்றுச் செய்தி இன்றைய தலைமுறையினரும் சிந்திக்க வேண்டிய ஒன்று!

(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர்.  கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்).
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்