நீரின்றி அமையாது உலகு!

Nov 24, 2026,03:27 PM IST

- ரா. புஷ்பவல்லி


மழையே நம் வாழ்வின் மூலாதாரம். அந்த மழைநீரைச் சேமிப்பதும், சிக்கனமாகப் பயன்படுத்துவதும், அதைக் கடமையாகவும் சட்டமாகவும் நடைமுறைப்படுத்துவதுமே நமக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் நன்மை பயக்கும்.


இன்றைய அலட்சியங்கள் தொடர்ந்தால், வருங்காலத்தில் நன்னீர் என்பது அரிதிலும் அரிதாகிவிடும். பாட்டிலில் அடைக்கப்பட்ட நீருக்குக்கூடக் காலக்கெடு நிர்ணயிக்கப்படும் நாள் வரலாம்; நீரையும் பதுக்கும் நிலை உருவாகலாம். பணம் என்னும் கோடியில் புரளவும், நெருக்கடிகளைக்கூடச் சந்தையாக்கி லாபம் பார்க்கவும் தயங்காத மனிதர்களால், எளிய மக்கள் கடுமையாக வதைக்கப்படுவர்.


ஆடைகளின் நிறத்திற்கு நாம் ஆசைப்பட்ட அன்றே, சாயப்பட்டறைகள் தங்களின் கழிவுகளை மறைத்து, சாதுரியமாக நம்மை வளைத்துப் போட்டன. நச்சுக் கழிவுகள் ஆற்றில் கலந்தன; ஆனால், கண்களை ஏமாற்ற ஆற்றில் நுரை மட்டும் வெண்மையாகத் தவழ்ந்தது.


இதன் விளைவாக மண் மலடானது; நாம் உண்ணும் உணவும் நஞ்சானது. தூக்கி வீசப்பட்ட ஆடைகளும் குப்பைகளும் நீந்தியதால், உயிரோட்டமான ஆறுகள் சாக்கடையாகவும் குப்பைமேடாகவும் மாறின. மனிதர்களைத் தாண்டி, வாய் பேசாத கால்நடைகளும் தாகத்திற்குத் தவிக்கும் அவலம் நேர்ந்தது.




ஒரு கட்டத்தில், ஆறுகளையே விலைக்கு வாங்கி, "தாகம் என்னும் தீண்டாமையை" உருவாக்கும் கொடுமையும் நிகழலாம். "நீருக்கு மாற்று என்பதே இல்லை"—பரந்து விரிந்த சமுத்திரத்தில் மூழ்கினாலும், உப்புநீரால் தாகம் ஒருபோதும் தீராது.


எத்தனை கோடி பணம் கொடுத்தாலும், இயற்கையின் விதிகளை மீறி மழை வராது. நீரின்றிப் போனால், பனிக்குடமற்ற கருவறை சாத்தியமாகுமா?


அடுத்த நூறாண்டுகளில் மனிதர்களின் நிலை என்னவாகும்? சிந்திப்பீர்!


(ரா. புஷ்பவல்லி. சேலத்தைச் சேர்ந்த இல்லத்தரசி, தையல் கலை நிபுணர், கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், தமிழ் ஆர்வலர் மற்றும் சிற்ப ரசனையாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்