அரசமர டீக்கடைக்கு வந்த புதிய நெருக்கடி.. வேரில் இருந்து விழுது வரை (9)

Nov 24, 2026,02:56 PM IST

- கவிஞர் கே. பிரியங்கா


பொன்னுவேல் சொந்தமாக வாங்கிய கடையை ஆறு மாத காலத்திற்குள் காலி செய்து தருவதாகக் கூறிய அந்த நபர், காலம் வந்ததும் தனது வார்த்தையை மாற்றிக்கொண்டார். கடையைக் காலி செய்ய முடியாது என்று அவர் கூறியதைக் கேட்ட பொன்னுவேலுக்கு வாரிப்போட்டது.


தீயவர்களின் பெயர்களைப் பதிவு செய்து அவர்களுக்குப் பிரபலத்தைத் தேடித்தர நான் விரும்பவில்லை.  நடந்த சம்பவங்களை மட்டும் எங்கள் வாழ்க்கைப் பயணத்தின் பதிவுகளாக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.


பல சிரமங்களைக் கடந்து, கடனைச் சுமந்துகொண்டு, குடும்பத்தின் எதிர்காலத்திற்காகப் போராடி, ஒருவழியாக நல்லதொரு வாழ்க்கை பிறந்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த எங்கள் குடும்பத்திற்கு இந்தச் செய்தி இடியாக இறங்கியது.


பலர் அந்த நபரிடம் பேசியும் எந்தப் பயனும் இல்லை. என் தாத்தா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் மனம் மாறவில்லை. சொந்தமாக வாங்கிய கடையையே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டபோது, செய்வதறியாது தவித்தார் என் தாத்தா.


இறுதியாக, வேறு வழியின்றிக் காவல் நிலையத்தை நாட வேண்டிய துர்பாக்கியம் அவருக்கு ஏற்பட்டது.




காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த நபரை விசாரணைக்கு வருமாறு அழைத்தபோது, மறுநாள் வருவதாகக் கூறிவிட்டுச் சென்றார்.


மறுநாள் என் தாத்தாவும் செல்லதுரை தாத்தாவும் காவல் நிலையத்திற்குச் சென்றார்கள். அங்கே அந்த நபர் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து தாமதமாக வந்தார். வந்தவர் காவல் அதிகாரியிடம்,


“நான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுவிட்டேன். இனிமேல் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் மூலமாகவே பார்த்துக்கொள்ளலாம்!”


என்று கூறியதும், என் தாத்தா  அதிர்ச்சியில் உறைந்துபோனார்.


அதுவரை தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பேசி, ஏதாவது ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுவிட்டதாக அந்த நபர் கூறியதும், அவர்களின் நம்பிக்கை தளர்ந்துபோனது.


காவல் அதிகாரி என் தாத்தாவை அழைத்து,


“இது சிவில் வழக்கு தொடர்பான பிரச்சினை. இதை நாங்கள் நேரடியாகத் தீர்த்துவைக்க முடியாது. நீங்கள் ஒரு நல்ல வழக்கறிஞரைச் சந்தித்து நீதிமன்றத்தின் மூலம் முறையிடுங்கள்” என்று அறிவுறுத்தினார்.


அவ்வளவுதான்!


என் தாத்தாவும் செல்லதுரை தாத்தாவும் செய்வதறியாது திகைத்துப்போய் நின்றார்கள்.


கையில் இருந்தது உழைப்பு; மனதில் இருந்தது குடும்பத்தின் எதிர்காலம்; ஆனால், முன்னால் நின்றது சட்டப் போராட்டம்!


உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய உறவினர்கள் இருந்தும், அந்த இக்கட்டான நேரத்தில் எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.  எங்கள் குடும்பத்தின் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளக்கூட உறவுகளின் கரங்கள் நீளவில்லை.


இப்படிப்பட்ட சூழலில், யாரிடம் செல்வது? எந்த வழக்கறிஞரைச் சந்திப்பது? வழக்கை நடத்துவதற்குத் தேவையான பணத்தை எப்படித் திரட்டுவது?


கேள்விகள் மட்டும் மனதில் அணிவகுத்து நின்றன. பதில் சொல்ல யாருமில்லை.


என் தாத்தாவும் செல்லதுரை தாத்தாவும் கனத்த மனதுடன் ஊருக்குத் திரும்பினார்கள்.


ஒருபுறம் அரசமர டீக்கடை நல்ல வருமானத்தைக் கொடுக்கத் தொடங்கியிருந்தது. வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துக்கொண்டிருந்தது. என் பாட்டி தயாரித்த இட்லி, வடை போன்ற பலகாரங்களின் சுவை கடைக்குப் புதிய வாடிக்கையாளர்களை அழைத்துவந்தது. குடும்பத்தின் வறுமையைப் படிப்படியாகப் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையும் துளிர்விட்டிருந்தது.


ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.


கடையை நடத்தி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமா? அல்லது சொந்தமாக வாங்கிய கடையை மீட்டெடுக்க நீதிமன்றத்தின் கதவைத் தட்ட வேண்டுமா?


இரண்டுமே குடும்பத்தின் எதிர்காலத்தோடு தொடர்புடையவை. ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றைத் தேர்ந்தெடுப்பதும் எளிதான காரியமல்ல.


அரசமர டீக்கடையை நம்பித்தான் குடும்பத்தின் அடுத்தகட்ட வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது. இப்போது அந்தக் கடையின் உரிமையைப் பயன்படுத்துவதற்கே போராட வேண்டிய நிலை!


வறுமையிலிருந்து மீண்டுவிட்டோம் என்று நினைத்த நேரத்தில், விதி மீண்டும் எங்கள் கதவைத் தட்டியது.


மீண்டும் பழைய வறுமை எங்கள் குடும்பத்தைச் சூழ்ந்துகொள்ளுமா? கடனை அடைத்து, பிள்ளைகளின் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்ற என் தாத்தாவின் கனவு சிதைந்துபோகுமா? அல்லது இந்தப் புதிய சோதனையையும் எதிர்கொண்டு அவர் வெற்றிபெறுவாரா?


அரசமர டீக்கடை தொடர்ந்து இயங்குமா? நீதிமன்றப் போராட்டம் தொடங்குமா?


வாழ்க்கை எங்களுக்கு மீண்டும் ஒரு சவாலை முன்வைத்திருந்தது. அந்தச் சவாலை என் தாத்தா எப்படிச் சமாளித்தார் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.


(தொடரும்)


(கே.பிரியங்கா, M.Sc., M.Ed. படித்தவர். 2019ல் ஜெட்லி உலக சாதனை புத்தகத்தின் "சமூகப் பிரச்சினைகளும் தீர்வுகளும்" தொடர் சொற்பொழிவு. 2019ல் ஜெயா தொலைக்காட்சியின் "உன்னை அறிந்தால்" நிகழ்ச்சியில் பங்கேற்பு. 2019ல் சென்னை விமான நிலைய ஆணையத்தின் "மெகா சுவர் ஓவியப் போட்டியில் பங்கேற்பாளர். 2021ம் ஆண்டு, அசிஸ்ட் உலக சாதனையின் "ஆசிரியர்களின் பங்கு" இணையவழி கருத்தரங்கில் பங்கேற்பாளர். அதே ஆண்டில் அகில இந்திய சாதனை புத்தகத்தின் "145 மணி நேரத் தமிழ் இணையவழி விவாதத்தில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்