என் நெஞ்சுக்குள் ஏன் இன்னும் ஈரம் காயவில்லை?

Nov 25, 2026,04:29 PM IST

- ப.வினு


இறுதியாக ஒரு புயலுக்கு உன் பெயரை வைத்து விட்டேன்

காற்றின் திசையறியாமல் அலைக்கழியும்

என் நாட்களின் மேல்தான்

அது தன் முதல் கரையைக் கடக்கிறது.


எப்போதும் நீ மெதுவாகத்தான் பேசுவாய்

ஆனால்

உன் மௌனம் மட்டும்

எத்தனை மரங்களை வேரோடு சாய்த்திருக்கிறது

என்பது எனக்கு மட்டுமே தெரியும்.




வானிலை ஆய்வு மையம் சொல்கிறது

புயல் கரையைக் கடந்த பின்

வானம் தெளியும் என்று

உன் நினைவுகள் கடந்து சென்ற பிறகும்

என் நெஞ்சுக்குள்

ஏன் இன்னும் ஈரம் காயவில்லை?


நீ விட்டுச் சென்ற வாக்கியங்களின்

முற்றுப்புள்ளிகளில்

ஒளிந்து கொண்டிருக்கின்றன

என் உறக்கமற்ற இரவுகள்.

புயல் ஓய்ந்த பிறகு

எஞ்சியிருப்பது

உடைந்த கூரைகளும்

இடம் மாறிய பொருட்களும் மட்டும்தான்.


என்னிடமும் இப்போது

உடைந்த கனவுகளும்

இடம் மாறிய உன் நினைவுகளும் மட்டுமே.


பெயர் சூட்டப்பட்ட புயல்கள்

சில நாட்களில் கரைந்து போகின்றன

பெயரில்லாத உன் பிரிவு மட்டும்

என் வாழ்நாள் முழுவதையும்

கடலாகிப் போன கண்களால்

பார்த்துக் கொண்டிருக்கிறது.


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்