- சு.தா.அறிவழகன்
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தன்னிடம் தவறான முறையில் நடக்க முயற்சித்ததாகவும், அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியிடம், மாவட்ட ஆட்சித் தலைவர் பத்மஜா புகார் அளித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பத்தில் பல்வேறு புகார்கள் எழுந்தபோதே, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் நடவடிக்கை கோரி வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஆளும் தவெக தரப்பு இதனைத் திட்டவட்டமாக மறுத்து வந்தது. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், "இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை; திமுக எம்.பி கனிமொழிதான் இதில் அரசியல் செய்கிறார்" எனக் கூறியிருந்தார். இதற்கும் ஒரு படி மேலே போன காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்" என அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தார்.
இந்த நிலையில்தான் இந்த விவகாரம் நீதிமன்றப் படியேறியது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் இதுதொடர்பான வழக்கை விசாரித்தபோது, "சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் புகார் அளிக்காதபோது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், தலைமைச் செயலாளரிடமும் விளக்கம் கேட்குமாறு அரசுத் தரப்புக்கு அறிவுறுத்தியிருந்த நீதிபதி, "ஒருவேளை நடந்தது உண்மையாக இருந்தால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்றும் வேதனை தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில்தான் தற்போது ஆட்சித் தலைவர் பத்மஜா காவல்துறையிடம் முறைப்படி புகார் அளித்துள்ளார். இது அதிகார வர்க்கத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டு வரலாற்றில் இப்படியொரு சம்பவம் நடந்து, அது வெளிச்சத்திற்கு வந்திருப்பது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. அரசியல்வாதிகள் பலர் மீது அத்துமீறல் புகார்கள் எழுந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால், தங்கள் கட்சியின் ஆட்சி நடக்கும்போதே, ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரிடமே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்டதாகப் பகிரங்கமாகப் புகார் எழுந்திருப்பது தமிழக நிர்வாக வரலாற்றில் இதுவே முதன்முறை.

முதல்வர் விஜய்க்குப் பலமுறை பல்வேறு சம்பவங்கள் எச்சரிக்கை மணி அடித்தபடியே உள்ளன. ஆனால், அவர் இன்னும் சுதாரித்துக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இது மிக மிக ஆபத்தான போக்கு. அவரை நம்பி கிட்டத்தட்ட ஒன்றரை கோடி தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்; குறிப்பாக, அவரை அதிகம் நம்பி வாக்களித்தவர்கள் பெண்கள்தான். ஆனால், அந்தப் பெண்களுக்கே பாதுகாப்பற்ற, ஆபத்தான ஆட்சியாக தவெக ஆட்சி மாறி வருகிறதா என்ற பெருத்த சந்தேகத்தை அருள் விக்னேஷ் போன்றோரின் செயல்பாடுகள் எழுப்புகின்றன.
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரிடமே அத்துமீறும் தைரியத்தை தவெக எம்.எல்.ஏ-வுக்கு எது கொடுத்தது, யார் கொடுத்தது? முதல்வர் விஜய் உடனடியாக இதுகுறித்து விசாரித்து கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே அவரை நீக்க வேண்டும். தொடர்ந்து, எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் அவரை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். அதோடு நில்லாமல், கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாமானியப் பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி மக்களிடம் எழுவதற்கு முன் முதல்வர் செயல்பட வேண்டும். இதனால் ஆட்சிக்கு ஆபத்தே வந்தாலும் கூட விஜய் கவலைப்படக் கூடாது. காரணம், மக்களும் அவர்களின் பாதுகாப்பும் தான் முக்கியமே தவிர, ஆட்சி முக்கியம் அல்ல.
துரிதமான முறையிலும், உரிய வகையிலும் நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் தவறினால், அது அவருக்கு மிகப் பெரிய கெட்ட பெயரையும், அழிக்க முடியாத களங்கத்தையும் ஏற்படுத்திவிடும். அவரை மக்கள் நிரந்தரமாகப் புறக்கணிக்கும் நிலையும் ஏற்பட்டுவிடக் கூடும். மக்களின் நம்பிக்கை இன்னும் விஜய் மீது உள்ளது. அவர் சரியானவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஆனால் அவரைச் சுற்றியுள்ள பலரும் சரியில்லை. இதை முதல்வர் விஜய் உடனடியாக உணர வேண்டும்.
ஒரு மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்துதான் மக்கள் அவரை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்துள்ளனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய தலையாய பொறுப்பு விஜய்க்கு உள்ளது. தவறு செய்பவர் தன் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார் என்ற முன்மாதிரியை அவர் உருவாக்க வேண்டும்.
அநாகரிகமானவர்களையும், அதிகார மமதை பிடித்தவர்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்பதை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் தற்போது முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதில்தான் உள்ளது. அவர் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.
விடை தேடும் விடையோன்!
தென்தமிழ் தலையங்கம்: இனியும் விஜய் பொறுக்கக் கூடாது.. இரும்புக் கரத்துடன் கூடிய நடவடிக்கை தேவை!
நடிகர் அர்ஜுன் அளித்த புகார்: பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் : நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு வீட்டு காவல்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பெண் கலெக்டருக்கு எஸ்எம்எஸ் : தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் மகாதீபத் திருவிழா: மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்
Chennai Rains: சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நாளையும் மழை தொடரும் என எச்சரிக்கை
பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு!
{{comments.comment}}