சித்திரம் பேசுதடி (சிறுகதை)

Su.tha Arivalagan
Jan 19, 2026,01:59 PM IST

- தி. மீரா


வாணி ஒரு சிறந்த ஓவியம் வரைபவள். சிறு வயதிலிருந்தே அதில் ஆர்வம் அதிகம். அவளது தந்தை அவளை ஓவியப் பயிற்சி வகுப்பில் சேர்த்து அதற்கு இன்னும் மெருகு சேர்த்தார். அவளும் படிப்பதுடன் இதிலும் நன்கு ஆர்வமாக வரைந்தாள்.


ஒருவரை பார்த்தவுடன் அப்படியே வரைதல் அவளின் தனிச் சிறப்பு. அவளது ஓவியங்களை ஓவியக் கண்காட்சியில் வைத்த பொழுது அனைவரும் அவளது திறமையை புகழ்ந்தார்கள் பாராட்டினார்கள். நிறைய பரிசுகள்  எல்லாம் வாங்கினாள். ஓவியப் போட்டி கண்காட்சி எல்லாவற்றிலும் கலந்து கொள்வாள். கல்லூரிக்கு வந்தவுடனும் தொடர்ந்தது. 


அவளது தந்தை தாய்க்கு மிக்க மகிழ்ச்சி. அவள் ஒரு நாள்  மாலை வேளையில் தன் அப்பாவிடம் என்னையே பார்ப்பது போல் ஒரு சிறிய புன்னகையுடன் உட்கார்ந்திருங்கள். நான் உங்களை அப்படியே வரைகிறேன் என்று வரைந்தாள். அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. வீட்டில் அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதை கண்ணாடி போட்டு ஹாலில் மாட்டி வைத்தார்கள். பார்க்கும் பொழுதெல்லாம் அவளுக்கு ஒரு சந்தோஷம். அத்தனை விருதுகளும் ஒரு சேரப் பெற்றது போல் உணருவாள்.




கல்லூரி படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்ய ஆசைப்பட்டார்கள் வாணிக்கு. நல்ல மாப்பிள்ளை அமைந்தவுடன் திருமணம் நடந்தேறியது. திருமணம் முடித்து கணவர் வீட்டுக்கு செல்லும் முன் ஹாலில் மாட்டி வைத்திருந்த அந்த தந்தையின் ஓவியத்தை எடுத்துக் கொண்டாள் .அப்பா உங்ஙளை நேரில் பார்ப்பது போல் உணருகிறேன்

இது என்னுடன் இருகட்டும்பா என்றாள். அப்பா சரி என்றார். மற்றவர்கள் இதே மாதிரி வரையலாமே என்றார்கள். இருந்தாலும் அதை எடுத்து சென்றாள். இதே போல வரைய வேண்டுமே என்ற தவிப்பில். அங்கே அவர்களின் படுக்கையறையில் வைத்துக் கொண்டாள். ஒவ்வொரு நாளும் அப்பாவிடம் நேரில் பேசுவது போல் பேசுவாள்.


என்னதான் கைப்பேசி காணொலி வழியாக அப்பாவிடம் நேரில் பேசினாலும் அவள் வரைந்த ஓவிய அப்பா அவளுக்கு எல்லாமே ஆகி விட்டது. ஒவ்வொரு நாளும் நடந்த நல்லது கெட்டது வாங்கிய பாராட்டுக்கள் திட்டுக்கள் அனைத்தும் அந்த சித்திரத்திடம் சொல்லுவாள். அதற்கேற்றார் போல் அவளது தந்தையும் பதிலளிப்பது போல தோன்றும். குழப்பமான நிலையில் முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் மனப்பாரமாக இருக்கும் பொழுது ஆத்மார்த்தமாக பேசுவாள். முடிவுகளும் கிடைத்து விடும். அவளுக்கு மன நிம்மதி ஆறுதல் கிடைத்தது. 


வருடங்கள் ஓடின. அவளுக்கு குழந்தைகள் பிறந்து வளர்ந்து விட்டன. அவள் தந்தையும் காலமாகிவிட்டார். இன்றும் வாணி தன் ஓவிய அப்பாவிடம் ஒவ்வொன்றும் கேட்டு சொல்லித் தான் செய்வாள். குழந்தைகளும் அம்மாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அந்த ஓவியம் சகல பலமாகவும் இருந்தது. அப்பா தன் கூடவே இருப்பதாக உணருவாள். எத்தனையோ விருதுகள் பெற்றாலும் பலரும் பாராட்டினாலும் அவளின் இந்த ஓவியம் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தது.


வாணியின் கணவருக்குமே அந்த சித்திரத்தைப் பார்த்தால் நேரில் பேசுவது போலேயே தெரியும். இன்றும் வாணி வயதான காலத்தில் பேரன் பேத்திகள் பெற்றாலும் அவர்கள் பாச மழையில் நனைந்தாலும் வாழ்வின் ஆறு சுவைகளையும் தன் பொக்கிஷமாக கருதும் ஓவிய அப்பாவிடம் கூறி மகிழ்வாள். 


சித்திரங்கள் பேசுமா ? ஆம் உண்மையான உணர்விலே வடித்த ஓவியங்கள் கண்ணாலேயே பேசும். உணர்ந்தவர்களால் மட்டுமே உணர முடியும். ஓவியக்கலை ஒரு தனிச் சிறப்புடையது. வாணி மாதிரி உள்ளவர்கள் இருப்பதால் ஓவியத்தை வடிக்கவும் உயிரோட்டமும் கொடுக்க முடிகிறது. சித்திரங்கள் சிந்திக்கவும் வைக்கும்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)