கைத்தட்டல்.. தட்டுங்கள்.. தட்டத் தட்ட ஊக்கம்தான்!
- ஆ.வ. உமாதேவி
கைத்தட்டல் அனைவருக்குமே பிடித்த விஷயம். மற்றவர்களுக்காக கைதட்டும்போதும் நமக்கு நன்மையே. மற்றவர் நமக்கு கைதட்டும் போது ஏற்படும் மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை." வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்ற பழமொழி கைத்தட்டல் செயலுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மற்றவரை பாராட்டி கைதட்டும்போது நம்மை அறியாமலேயே நமக்கு பல நன்மைகள் வந்தடைகின்றன.
கைதட்டுவது என்பது ஒரு வகையான சிகிச்சை முறை என்றே சொல்லலாம். நாம் கஷ்டப்பட்டு உடல் வியர்க்க வியர்க்க வேலைகளையோ அல்லது உடற்பயிற்சிகளை யோ செய்து கிடைக்கும் பலனை வெறும் கைதட்டல் என்ற சிறிய செயல் மூலம் எளிமையாக பெறலாம். காலையில் உடற்பயிற்சி செய்யும் போது அதனுடன் கைதட்டல் பயிற்சியையும் சேர்த்து செய்யலாம். குறிப்பாக இதற்கு தனியானதொரு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாய்ப்புகள் அமையும் போதெல்லாம் கைத்தட்டல் செய்யலாம்.
நம் உடலில் உள்ள 300க்கும் மேற்பட்ட அக்குபிரஷர் புள்ளிகளில் 30க்கும் மேற்பட்ட புள்ளிகள் நம் கைகளில் மட்டுமே இருக்கின்றன. இந்த புள்ளிகள் நம்முடைய இதயம், சிறுநீரகம், நுரையீரல், கணையம், செரிமான மண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடையதாக இருக்கிறது. இப்புள்ளிகளை தினமும், இயக்குவதன் மூலம் அந்தப் பகுதிகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இன்றைக்கு அனைவருமே பரபரப்பான ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கைத்தட்டல், மன அழுத்தத்தை குறைக்கும் என்றால் அதை செய்ய நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். கைதட்டுவதால், ரத்த ஓட்டம் சீரடைகிறது. சுவாசக் குழாய்களில் உள்ள அடைப்பு நீங்குகிறது. உடல் வலிகள் குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. முக்கியமாக மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
ஒருவரை பாராட்டுவதற்கும் புகழ்வதற்குமான ஒரு அடையாளமாக கைத்தட்டலை பயன்படுத்துகிறோம். அந்த கைத்தட்டில் கூட உட்கார்ந்து தட்டினால் 100% பாராட்டை தெரிவிப்பதாக எடுத்துக் கொண்டோமானால், அதையே எழுந்து நின்று கைதட்டினால் அதை 200% பாராட்டாக எடுத்துக் கொள்ளலாம். எழுந்து நின்று கை தட்டும் போது கைத்தட்டலின் மதிப்பு இரு மடங்காக கூடுகிறது.
தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களிடத்தில் கைதட்டல் என்பது மிகப்பெரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது கண்ணார பார்த்த உண்மை.
சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட, கைதட்டி பாராட்ட ஆரம்பித்தோமானால் அது மிகப் பெரிய நல்ல தாக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது. அப்படி இருக்க அதை நாம் ஒவ்வொருவரும் தேவையான இடங்களில் கட்டாயம் செய்யலாமே. ஒரு சிறு கைதட்டல் தான். ஆனால் அதை செய்யும் போது மாணவர்கள் முகத்தில் தெரியும் பிரகாசம், அவர்களை இன்னும் அழகாக காட்டும். அவர்களிடத்தில் ஒரு துள்ளல், குதூகலம், மகிழ்ச்சி, ஆரவாரம், பெருமிதம் ஆகியவற்றை காணும் போது நமக்குள்ளும் ஒரு இன்பம் உண்டாகும்.
உதாரணமாக, விடுப்பு எடுக்காமல் அனைத்து மாணவர்களும் வருகை புரிதல், எல்லோரும் காலை கடமைகளை முடித்துவிட்டு வருதல், அனைவரும் வீட்டுப்பாடங்களை எழுதிக் கொண்டு வருதல், அனைவரும் டைரியில் பெற்றோர் கையொப்பத்தை பெற்று வருதல், குப்பைகளை அதற்குரிய இடத்தில் போடுதல், பொறுப்புள்ள குழந்தையாய் நடந்து கொள்ளுதல், ஆசிரியர் அன்றைய வகுப்பறையில் கொடுத்த அனைத்து செயல்பாடுகளையும் முடித்தல் இவ்வாறு சின்ன சின்ன விஷயங்களில் நம்முடைய கைத்தட்டல் பாராட்டு என்பது மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நான் கண்கூடாக அறிந்த உண்மை.
மற்றவரை கைத்தட்டி பாராட்ட முந்திக் கொள்ள வேண்டும். இக்கட்டுரையை படித்து முடித்ததும் இரண்டு நிமிடங்கள் கைதட்டலாமா? கைத்தட்டல் என்னும் சிறந்த பயிற்சியை இந்த நொடியில் இருந்து ஆரம்பிக்கலாமா?
இக்கட்டுரையை பொறுமையாக வாசித்த அனைவரையும் பலத்த கைத்தட்டலைப் பரிசாகக் கொடுப்போம்!
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)